Advertisment

தமிழ்த்தேசியம் + சாதிய வாதம் + இந்துத்துவ பயங்கரவாதம் எனும் புதிய அலை வரிசை

author-image
WebDesk
Oct 26, 2019 17:41 IST
New Update
Tamil nationality casteism hindutva - தமிழ்த்தேசியம் + சாதிய வாதம் + இந்துத்துவ பயங்கரவாதம் எனும் புதிய அலை வரிசை

Tamil nationality casteism hindutva - தமிழ்த்தேசியம் + சாதிய வாதம் + இந்துத்துவ பயங்கரவாதம் எனும் புதிய அலை வரிசை

கட்டுரையாளர் கௌதம சன்னா

Advertisment

எழுத்தாளர், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில துணை பொதுச்செயலாளர்

கடந்த நூற்றைம்பது ஆண்டுகளாகத் தமிழகத்தில் உருவாகி வளர்ந்து இயங்கிய சமூக அரசியல் இயக்கங்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாகத் தேங்கியிருந்த தமிழ்ச் சமூகத்தை உடைத்து புத்தொளி பாதைக்கு அழைத்துச் சென்றன. மேற்கத்திய நாடுகளில் உருவான ஜனநாயக கோட்பாடுகள், முதலாளித்துவத்தின் எழுச்சி, கம்யூனிச தத்துவத்தின் பரவலாக்கம் உள்ளிட்ட காரணிகளால் தாக்கம் பெற்ற இயக்கங்கள்  தமிழ்ச் சமூகத்தை ஜனநாயகப் படுத்துவதில் பெறும் பங்காற்றியுள்ளன. உரையாடல்கள் இல்லாத சமூகமாகத் தொடர்பற்ற கிராமங்களாய் இருந்த சூழலை உடைத்துக் காட்டியதில் கடந்த நூற்றைம்பது ஆண்டுகள் பெறும் பங்காற்றியிருக்கின்றது.

அயோத்திதாசப் பண்டிதர் உருவாக்கிய தமிழன் என்னும் அரசியல் அடையாள இயக்கம், மறைமலை அடிகள் உருவாக்கிய தனித்தமிழ் இயக்கம், நீதி கட்சியினர் தொடங்கிய எம்.சி.ராஜா, ரெட்டமலை சீனிவாசன் போன்றோர் முன்னெடுத்த தலித் விடுதலை இயக்கங்கள், பெரியார் உருவாக்கிய சுயமரியாதை இயக்கம் மற்றும் திராவிடர் கழக முன்னெடுப்புகள், இடதுசாரிகளின் பங்களிப்பு, காங்கிரஸ் கட்சியின் ஜனநாயக உரையாடல்கள் திராவிட கட்சிகளின் எழுச்சியும் தொடர்ச்சியும் என ஒரு நீண்ட பட்டியலை நாம் பார்க்க முடியும். இந்த அமைப்புகளின் மீது அவற்றின் கொள்கை கோட்பாடுகளின் மீது எவ்வளவு விமர்சனங்கள் இருந்தாலும் இந்த இயக்கங்கள் அனைத்தும் ஒரு வகையில் சாதிய சமூகத்தின் மௌனத்தை உடைத்து பரந்து பட்ட உரையாடல்களுக்குள் கொண்டு வந்து சேர்த்ததில் பெறும் பங்காற்றியுள்ளன.

முற்போக்கு கருத்துக்கள் தான் மனிதனை முன்னோக்கி முன்னேற்றிக் கொண்டு போகும் என்பதை நம்பியவை இந்த இயக்கங்கள். பழைய காலாவதியான இந்த சமூகத்தை இறுக்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் நிலமானிய சிந்தனைகளை இவைகள் தொடர்ந்து கேள்விப்படுத்தி வந்தது மிக முக்கியமான அம்சமாகும். சமூகத்தின் வளர்ச்சியில் தொழில்நுட்பமும் முதலாளித்துவ பரவலாக்கமும் மிக முக்கியப் பங்காற்றுகின்றன. குறிப்பாக இந்தியா போன்ற சமூகத்தில் இது மிகவும் இன்றியமையாததாகும். இந்தச் சமூக மாற்றச் செயல்பாடுகளுக்கு துணையாகத்தான் மேற்கண்ட இயக்கங்கள் செயல்பட்டன, அதனால் தமிழகத்தில் பெறும் பாய்ச்சலான முன்னேற்றங்கள் ஏற்பட்டன என்பதை யாரும் மறுக்க முடியாது. இந்தக் காரணங்களால்தான் இந்தியாவிலேயே ஒரு முன்னோடி மாநிலமாகச் சிந்தனை அளவிலும் வாழ்க்கைத் தரத்திலும் பொருளாதார உறவு முறையிலும் தமிழகம் திகழ்கின்றது. பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழகத்தின் சிந்தனை போக்கு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவின் பிற பகுதிகளை விட அம்பது ஆண்டுகள் முன்னோக்கி இருந்தது என்பதை அக்கால வரலாற்று ஆசிரியர்கள் சுட்டிக்காட்டி இருக்கின்றார்கள்.இதனால் தான் தமிழகத்தில் உரிமைகளைப் பற்றிப் பேசுவதும் ஒவ்வொரு சமூகத்துக்குமான சமூகப் பங்கைப் போராட்டத்தின் ஊடாகப் பெறுவதற்குமான சூழல் உருவானது.

அதுமட்டுமன்றி தனி மனித உரிமையைப் பற்றின மாபெரும் விழிப்புணர்வும் அதன் தேவையைப் பற்றின அரசியல் உரையாடல்களும் நிகழ்ந்து நிலை நிறுத்தப்பட்டன. ஆனால் இப்போது என்ன நடந்து கொண்டிருக்கின்றது?

முதிர்ச்சியுள்ள ஒரு சமூகமாக மாறிக் கொண்டிருக்கக் கூடிய நேரத்தில் முதிர்ச்சியற்ற சிலரின் அரசியல் நடவடிக்கைகளினால் தமிழ்ச் சமூகம் சீரழிந்து கொண்டிருக்கிறது. புதுவகையான பிற்போக்குத் தமிழ்த்தேசிய முன்னெடுப்புகள் விவாதப் பொருளாகி புதுவிதக் கூட்டணியினை உருவாக்கியுள்ளது. தமிழ்த்தேசியம், சாதிய பயங்கரவாதம், இந்துத்துவ பயங்கரவாதம் இவை மூன்றும் ஒன்றாகப் பிணைந்து ஒரே நேர் கோட்டில் பயணிக்கத் தொடங்கியுள்ள புதிய வரலாற்றுச் சூழல் இப்போது தொடங்கியிருக்கின்றது. தமிழ்நாட்டின் எதிர்காலத்தைப் படுபயங்கரமான சீரழிவில் தள்ளக்கூடிய இந்தப் போக்கு மிகுந்த அச்சத்தை உருவாக்கி இருக்கிறது. இந்தப் பிற்போக்கு கூட்டணியிடம் தமிழ்ச் சமூக முன்னேற்றத்திற்கான எந்தவிதமான செயல் திட்டமும் இல்லை. தீண்டாமை எனும் பார்ப்பன-சூத்திர குற்றச் செயலிற்கு இவர்களிடம் எந்த தீர்வும் இல்லை. சாதி எனும் மனநோய்க்கு இவர்கள் மருந்து கொடுத்துக் குணப்படுத்துவதை விட, அந்த மன நோயை ஆண்டை சாதிகள் என்னும் போலியான பெருமையை முன்னிறுத்தி அதிகப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இவற்றை பின்னிருந்து இயக்கக் கூடிய சக்தியாக ஆர்எஸ்எஸ் மற்றும் இந்து பயங்கரவாத கும்பல் இருக்கிறது என்றாலும், இதற்குக் கூடுதல் பின்னணியாக இருப்பது குஜராத் தேசியவாதம் தான்.

இன்றைக்கு இந்தியாவை ஆளும் பொருளாதார சக்தியான குஜராத்திய தேசியவாதம் பல்வேறு பெயர்களில் நாடு முழுவதும் பரவிக் கொண்டிருக்கிறது. இந்த சக்திக்கு முழுமையாக இன்றைக்குத் தமிழ்த் தேசியம் பலியிடப்பட்டிருக்கிறது.

தேசியவாதம் என்பது முதலாளித்துவத்தின் அரசியல் செயல்திட்டத்தில் ஓர் அங்கம் என லெனின் அவதானித்ததுற்கு மாறாக புதுவிதமாக பிற்போக்குத் தன்மையோடு அது வெளிப்பட்டுள்ளது. இதில், தீவிரமான இடதுசாரிகளாக இருந்தவர்கள்கூட தங்களுடைய தோல்விகளை ஆராய்வதற்குப் பதில் அறிவுத்திறன் மங்கி, தமிழ்த் தேசிய இனவாதம் என்ற குறுகிய எல்லைக்குள் வந்திருக்கிறார்கள் என்பது  மிகுந்த ஆச்சரியத்தையும் அச்சத்தையும் அளிக்கிறது. சமூக முரண்களை ஆராய்ந்து பார்க்கும் திறன் பெற்றவர்கள் அவற்றை ஆராய்வதற்குப் பதில் எளிமையாக இருக்கும் சாதிய முரண்களையே கூர்படுத்தி அதன் மூலம் தமிழ்த் தேசியத்தை அடைய முடியும் என்கின்ற ஒரு மோசமான நம்பிக்கைக்கு வந்திருக்கிறார்கள் என்பதை பார்க்கும்போது அவநம்பிக்கையின் கருநிழல் மாநிலத்தில் படர்வதை யார் மறுக்க முடியும்.

இந்த புதுவகைத் தமிழ்த் தேசியர்கள் ஒவ்வொரு நாளும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பிற்போக்குத் தனமாகவும், அறிவுக்கு ஒவ்வாத முறையிலும், சனநாயகத்தின் குறைந்தப்பட்ச புரிதலும் இன்றி வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதில் ஒன்று, தாங்கள் மட்டுமே உண்மையான தமிழர்கள் என்று நிலைநிறுத்த, தமிழுக்காகவும் சமூக விடுதலைக்காகவும் தங்களை அர்ப்பணித்து பணியாற்றும் தலைவர்களை, செயல்பாட்டாளர்களைத் தனிமைப்படுத்த, அவர்களைத் தெலுங்கர்கள் என்றும் கன்னடர்கள் என்றும் ஆதாரமே இல்லாமல் பிரச்சாரம் செய்வதும், அவர்கள் தமிழர்கள் என்று நிரூபிக்க வேண்டுமானால் தமது மூதாதையர்களின் சாதியோடு அவர்களின் சாதி மூலத்தைச் சொல்ல வேண்டும் எனக் கேட்டு வற்புறுத்தும் அநாகரிக நிலைக்கு இறங்கியிருக்கிறார்கள். தமது இந்த கேடுகெட்ட செயலுக்குத் தமிழ்த் தேசிய அரசியல் சாயம் பூசிக்கொண்டு வருகிறார்கள்.

இந்தப் போக்கை முதலில் தொடக்கி வைத்தவர் டாக்டர்.ராமதாஸ். பாட்டாளி மக்கள் கட்சியின் தொடக்கக் கால செயல்பாடுகளில் சமூகத்தில் புறக்கணிக்கப்பட்ட அனைத்து சாதிகளுக்குமான உரிமைகளை முன்னிறுத்தி தமது செயல்பாடுகளை வடிவமைத்தார். இதன் மூலம் அனைத்து தரப்பு மக்களிடம் ஒரு நம்பிக்கையை அவர் பெற்றார். ஆனால் அரசியல் சதுரங்கத்தில் சரியான கூட்டிசைவை அவர் உருவாக்க முடியாத காரணத்தினால் நம்பிக்கையை இழந்தவராக மாறி கடைசியில் தனது இருப்பை தக்க வைக்கும் வகையில் மலிவான சாதி உணர்வைத் தூண்டி, கலவரங்களையும் மோதல்களையும் உருவாக்கி, மக்களின் ஒற்றுமையைச் சீர்குலைத்து, சாதி எனும் ஒரு மோசமான வஸ்துவுக்கு அவர் பலியானார். அதிலிருந்து அவருடைய நடவடிக்கைகள் அனைத்தும் சமூகத்திற்கு எதிர்த் திசையிலேயே பயணிக்கத் தொடங்கி தருமபுரி தீவைப்பில் உச்சத்தைப் பெற்றது. அதிலிருந்து விழத்தொடங்கியவர் மீள்வதற்கான வழியேதும் தெரியாமல் வெறும் சாதிவெறி சக்தியாகச் சுருங்கிப் போய்விட்டார்.

அவருடைய அடுத்த தொடர்ச்சியாக நாம் தமிழர் கட்சி உருவாகி இருக்கிறது. அதனுடைய தலைவர் சீமான் ராமதாசை போல எந்தவிதமான போராட்டத்தையும் முன்னெடுக்காதவர். ஈழப் போராட்டம் உச்சத்திலிருந்த காலக்கட்டத்தில் சினிமாவில் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தார். ஆனால், திடீரென சில சக்திகளால் அரசியல் தலைவராக முன்னிறுத்தப்பட்டார். தனக்கென எந்த கொள்கையும் இல்லாதவர். நேரத்துக்கு எது கிடைக்கின்றதோ அதனை மட்டும் பேசிக் கொண்டிருப்பவர். ஆனால் ராமதாஸ் கடைசிக் காலத்தில் எந்தக் கொள்கையினால் தமிழ்ச் சமூகத்தை சீரழித்தாரோ அதனையே தனது செயல்திட்டமாக சீமான் எடுத்துக் கொண்டிருக்கின்றார். ஆண்டை சாதி பெருமை பேசுவது, அனைத்து சாதியினரிடமும் சாதி வெறியை உசுப்பி விடுவது, சாதி தான் தமிழரின் அடையாளம் எனப் பறைசாற்றுவது, சாதியைச் சொல்லாவிட்டால் அவன் தமிழனே இல்லை எனச் சொல்வது. இத்தனை ஆண்டுக்காலம் சமூக மாற்றத்தை உருவாக்கிய தலைவர்களின், இயக்கங்களைப் பார்த்து இவர்கள் எதுவுமே செய்யவில்லை என மோடியைப் போலவே குற்றம் சொல்வது எனத் தனது பாணியை டாக்டர்.ராமதாசிடமும் மோடியிடமும் பெற்றுக்கொண்டிருக்கின்றார்.

இதன் விளைவாக  இதுகாறும் தேசியம் என்கின்ற முற்போக்கான கொள்கையைச் சாதிய சாக்கடைக்குள் கொண்டு வந்து நிறுத்தி தமிழ்த்தேசியத்திற்கு புது வித விளக்கத்தைக் கொடுத்திருக்கின்றார்.  ஏற்கனவே தமிழ்ச் சமூகம் என்பது சாதியற்ற சமூகம் எனச் சங்க கால வாழ்க்கை முறை காட்டியதையும், அதிலும் அண்மையில் கீழடி ஆய்வுகள் அதை உறுதி செய்ததை முற்றிலும் புறக்கணித்து விட்டு தற்கால சாதிவெறிக்குத் தமிழ்த் தேசியத்தை பலியிட்டிருப்பது மட்டுமன்றி, ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புக்கள் நுழைய முடியாமல் இருந்த தமிழ்த் தேசிய கோட்டைக்குள் சிவப்பு கம்பளம் போட்டு அவர்களை வரவேற்றிருக்கின்றார். இது தமிழகத்தில் நிகழ்ந்திருக்கக்கூடிய தலைகீழ் மாற்றம். இதனால் சாதிய சக்திகள் தமிழ்த்தேசியம் என்கின்ற போர்வைக்குள் ஊக்கம் பெற்றிருக்கின்றார்கள். இப்பொழுது சித்தாந்தக் கூட்டணி தெளிவாகத் தெரிகிறது. அது தமிழ்த்தேசியம் + சாதிய வாதம் + இந்துத்துவ பயங்கரவாதம் என்கின்ற அலை வரிசையில் இப்பொழுது பயணிக்கத் தொடங்கியிருக்கின்றது.

இந்தக் கூட்டணியின் செயல்பாடுகளில் முக்கியமானதாகப் பின்வருவனவற்றைப் பட்டியலிட்டுக் கொள்ளலாம்.

1. திராவிட இயக்கங்கள் ஒன்றுமே செய்யவில்லை. அவை தெலுங்கர், கன்னடர் இயக்கங்கள் எனப் பிரச்சாரம் செய்வது.

2. தலித்துகள் தமிழ்த் தேசியத்திற்கு எதிரானவர்கள். எனவே அவர்கள் தம்மைத் தமிழர்களாக முன்னிறுத்த வேண்டுமானால் அவர்களது உட்சாதிகளை முன்னிறுத்த வேண்டும். இதன் விளைவாக  அவர்கள் இத்தனை ஆண்டுகளாகப் போராடிப் பெற்ற உரிமைகள் அனைத்தையும் விட்டுக் கொடுக்க வேண்டும்.

3. இந்துத்துவம் என்பது வேறு பெயரில் மூத்தோர் மதம், மூத்தோர் வழிபாடு அல்லது முன்னோர் வழிபாடு என்கின்ற புதுப்பெயர்களைக் கொடுத்து எந்த விதமான மாற்றங்களுமின்றி ஆர்எஸ்எஸ்ஸின் செயல்திட்டங்களை உள்வாங்கிக் கொள்வது.

4. மொழி சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பற்ற ஒரு மனநிலையை உருவாக்குவது.

5. இசுலாமியர்கள் தமிழரா, தமிழரல்லாதவரா என்ற விவாதத்தைத் தொடங்குவதின் மூலம் அவர்களிடையே இந்து - இசுலாமியர்கள் என்ற அச்சத்தை அதிகப்படுத்துவது.

6. தமிழகத்தில் உள்ள அத்தனை சாதிகளையும் அவற்றிற்கு இடையே உள்ள இடைவெளிகளை கூர்மைப்படுத்தி விடுவது.

7. சமூகப்பணி ஆற்ற வருகின்ற முன்னோடிப் பெண்கள் மீதும், நாம் தமிழர் இயக்கத்திற்கு போட்டியாகக் கருதுகின்ற தலைவர்கள் மீது அவதூறுகளையும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களையும் பரப்புவது.  மேலும் அவர்கள் தெலுங்கர்கள் கன்னடர்கள் என்று பரப்புரை செய்வது. அவர்கள் தங்களைத் தமிழர்களாக நிரூபிக்க வேண்டுமென்றால் மூன்று தலைமுறைகளுக்கான சாதி பின்னணியை வெளியிட நிர்ப்பந்திப்பது.

இப்படி எந்த விதமான பொருளாதார செயல்திட்டமும் இல்லாமல் மக்களிடம் மறைந்து கொண்டிருக்கக்கூடிய ஜனநாயகத்துக்கு எதிரான சிந்தனைகளைக் கூர்தீட்டி ஒரு பதட்டத்தை உருவாக்குகின்ற சூழலுக்கு வந்திருக்கின்றது என்பது தான் அச்சத்தை உருவாக்குகிறது.  ஆண்டை சாதிகள் என தம்மை நிறுத்துவது மேற்குறிப்பிட்ட செயல்பாடுகளின் பின்னணி  தான்.

எனவே தமிழகத்தில் பாஜக தனது காலை வலுவாக ஊன்றுவதற்குக் கையில் எடுத்திருக்கும் கருவி தமிழ்த்தேசிய உணர்வு. அதை நாம் தமிழர் கட்சியின் சமீப கால செயல்பாடுகளில் தெளிவாகப் பார்க்க முடிகிறது. எனவே சீமான் என்கின்ற ஒரு நபர் இந்துத்துவ செயல்திட்டத்தின் ஓர் அங்கம் என்பது சந்தேகத்திற்கு இடமில்லாதது. அவர் பாஜகவிற்குப் பிரச்சாரம் செய்ததும், ராஜீவ்காந்தி படுகொலை பழியை தமிழர்கள் மீது சுமத்தியதும், ஏழு தமிழர் விடுதலைக்கு முட்டுக்கட்டையாக  மாறியதும் ஒன்றுக்கொன்று தொடர் நிகழ்வுகளே..

தமிழகம் இத்தனை ஆண்டுகாலம் உருவாக்கியிருந்த முற்போக்கான சமூகச் சூழல் இந்தப் பிற்போக்குச் சக்தியிடம் பலியிடப் படுமோ என்ற அச்சம் எழுகிறது. எனவே தற்போதைய தமிழ்த்தேசியம் இந்துத்துவத்தின் செயல்திட்டத்தில் உருவான ஒன்று.  அதனால் தான் இப்பொழுது வெளிப்படையாக அடுத்தவரின் சாதியைக் கேட்கும் துணிச்சலைப் பெற்றிருக்கின்றார்கள். நாம்   ஒரு மோசமான பிற்போக்கு காலகட்டத்தில் நுழையத் தொடங்கியிருக்கின்றோம்.   தமிழ்ச்சமூகம் விழித்துக் கொள்ள வேண்டிய து அவசியம். இல்லையெனில் தமிழகம் இன்னொரு பீகாராக விரைவில் மாறிவிடும் அபாயம் ஏற்படும்.

#Hindutva
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment