Advertisment

தேர்தல் சீர்திருத்தம் வரவேற்கதக்கதுதான் என்றாலும் குறிப்பிட்ட சில சீர்திருத்தங்கள் மட்டும் போதாது

Taminadu News Update : தேர்தல் சீர்திருத்தம் எனும் கொந்தளிப்பான விஷயத்துக்கு தீர்வு காணும் எந்த ஒரு செயல்முறையும் படிப்படியாக செயல்படுத்தப்படுவது வரவேற்கத்தக்கது.

author-image
WebDesk
New Update
தேர்தல் சீர்திருத்தம் வரவேற்கதக்கதுதான் என்றாலும் குறிப்பிட்ட சில சீர்திருத்தங்கள் மட்டும் போதாது

எஸ்.ஒய். குரேஷி;

Advertisment

தேர்தல் பத்திரங்கள் மற்றும் ஒரே நேரத்தில் தேர்தல் போன்ற அரசியல் உள்நோக்கம் கொண்ட சீர்திருத்தங்கள் மேற்கொள்வதற்கு பதில், நிலுவையில் உள்ள அனைத்து விதமான தேர்தல் சீர்திருத்தங்களையும் மேற்கொள்ள வேண்டும்.

மத்திய அரசிடம் பெரும் எண்ணிக்கையிலான தேர்தல் சீர்த்திருத்தங்கள் தொடர்பான பரிந்துரைகள் நிலுவையில் உள்ளன. அதில் சில பரிந்துரைகள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருக்கின்றன. அடுத்தடுத்து வரும் மத்திய அரசுகள், நிறைவேற்றுவதற்கான போதுமான ஆதரவு இல்லை என்று கூறி அதனை தவிர்த்தே வருகின்றன. சட்டப்பேரவை, பஞ்சாயத்து தேர்தல்கள் இரண்டுக்கும் ஒரே வாக்காளர் பட்டியல், இளம் வாக்காளர்களை புதிய வாக்காளர்களாக பதிவு செய்வதற்கான தகுதி தேதியை விரிவாக்கம் செய்வது, வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பது ஆகிய நிலுவையில் இருந்த மூன்று சீர்த்திருத்தங்கள் டிசம்பர் 15ம் தேதி நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பரிசீலனையில் எடுத்துக் கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து கடந்த செவ்வாய்கிழமை மாநிலங்களவையில் தேர்தல் சீர்த்திருத்தம் (திருத்த) மசோதா நிறைவேற்றப்பட்டது. வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் உள்ளிட்ட தகவல்களை இணைக்க வகை செய்யும் இந்த மசோதா மக்களவையில் திங்கள் கிழமை நிறைவேற்றப்பட்டது.

இப்போது மக்களவை, சட்டப்பேரவை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு என தனித்தனி வாக்காளர் பட்டியல் நிர்வகிக்கப்படுகிறது. அனைத்து வகையான தேர்தல்களுக்கும் ஒரே வாக்காளர் பட்டியல் தயாரித்து பயன்படுத்த வேண்டும் என்பதை இந்திய தேர்தல் ஆணையம் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. 2011ம் ஆண்டு நடைபெற்ற இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் மாநில தேர்தல் ஆணையர்கள் ஆண்டு கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டது எனக்கு நினைவிருக்கிறது. இதற்கு அப்போது பல மாநில தேர்தல் ஆணையர்கள் ஆதரவு தெரிவித்தனர்.

இந்த நாட்டில் இரண்டு விதமான தேர்தல் மேலாண்மை அமைப்புகள் உள்ளன. மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களை இந்திய தேர்தல் ஆணையம் நடத்துகிறது. மாநில தேர்தல் ஆணையமானது உள்ளாட்சி தேர்தல்களை நடத்துகிறது. இந்திய தேர்தல் ஆணையத்தால் தயாரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலையோ அல்லது தாங்களே சொந்தமாக தயாரித்தோ உள்ளாட்சித் தேர்தல்களில் பயன்படுத்தலாம் என்ற நிலை இப்போது உள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் இந்திய தேர்தல் ஆணையம் தயாரித்த வாக்காளர் பட்டியலை பயன்படுத்துவதற்கு முன்னுரிமை கொடுக்கின்றனர். சில மாநில தேர்தல் ஆணையங்கள் சொந்தமாக வாக்காளர் பட்டியலை தயாரிக்கின்றன. உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மத்திய பிரதேசம், கேரளா, ஒடிசா, அசாம், அருணாசலபிரதேசம், நாகலாந்து மற்றும் ஜம்மு&காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஆகியவை தனியாக வாக்காளர் பட்டியல் தயாரித்து அதனை பயன்படுத்துகின்றன.

வாக்காளர் பதிவு விதிகள் 1960-ன் கீழ் வாக்காளர் பட்டியல் தயாரிப்பு செயல்முறை நடைபெறுகிறது. சட்டசபை தொகுதியே வாக்காளர் பட்டியலின் முதன்மை பிரிவாக இருக்கிறது. இது போன்ற சில தொகுதிகள் தொகுக்கப்பட்டு மக்களவைத் தொகுதியாக உருவாக்கப்படுகிறது அல்லது நகராட்சி அல்லது பஞ்சாயத்து வார்டுகளாக பிரிக்கப்படுகிறது.

மூன்று அடுக்கு தேர்தல் அமைப்புகளிலும் வாக்களிக்கும் வாக்காளர் ஒருவரே என கருதினால், வாக்காளர் பட்டியலில் எப்படி ஒரு வாக்காளரின் பெயர் விடுபடுகிறது. பெரும்பாலும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியலில் ஏன் விடுபடுகிறது? இரண்டு வாக்காளர் பட்டியலும் ஒரே மாதிரிதான் என்று அவற்றுக்குப் பொறுப்பேற்று  உருவாக்கும் அதிகாரிகள் கூறும்போது இது வியப்பை அளிப்பதாக இருக்கிறது. பொதுவான வாக்காளர் பட்டியல் என்பது ஒரு தர்க்கரீதியான தீர்வாகும். பஞ்சாயத்து, உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்களை திணிப்பது பொதுவான அனுபவமாக இருக்கிறது. 1993ம் ஆண்டு பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளுக்கான சட்டம் அமலுக்கு வந்தபிறகு, பஞ்சாயத்து அமைப்புகள் கோடிக்கணக்கான ரூபாய் நிதி உதவியை பெறுகின்றன. அதில் இருந்து பஞ்சாயத்து உறுப்பினர் பதவிகள் என்பது மிகவும் லாபகரமான ஒன்றாக மாறியிருக்கிறது என்பதால்தான் ஒருவேளை இதுபோல் நடப்பதாக தெரிகிறது. பஞ்சாயத்து அமைப்புகளுக்கான தேர்தலில் ஊழல் நடைமுறை விகிதம் அதிகரித்திருக்கிறது.

அனைத்து அரசு துறைகளின் ஊழியர்களைக் கொண்டு வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. இதில் பெரும்பகுதி பணியானது பள்ளி ஆசிரியர்களுடையதாக இருக்கிறது. அவர்கள் இதில் ஈடுபடுத்தப்படுவதால், ஆசிரியர் அல்லாத பணிச்சுமை அவர்களுக்கு அதிகரிக்கிறது. பொதுவான வாக்காளர் பட்டியல் நடைமுறை என்று வந்து விட்டால், அவர்களை மீண்டும் மீண்டும் இதே பணியில் ஈடுபடுத்தப்படுவது நிறுத்தப்படும். இது தவிர பெரும் செலவுகளும் தவிர்க்கப்படும். பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள் மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல் ஆகியவற்றுக்கான வாக்காளர் பட்டியலில் ஒரே ஒரு வித்தியாசம், வார்டு பற்றியும், அதில் எத்தனை வாக்காளர்கள் வசிக்கின்றனர் என்பது குறித்து முந்தைய தகவல் உள்ளது. ஒவ்வொரு வீட்டின் வார்டு எண் குறித்தும் கணக்கெடுப்பவர்(வாக்கு சாவடி அதிகாரி) அறிந்திருப்பார். மாநில சட்டப்பேரவைகளுக்கு தேர்தல் நடக்கும்போது இது தேவையில்லை என்பதால், அது மறைக்கப்பட்டிருக்கும். வார்டு அளவிலான பஞ்சாயத்து அமைப்பு தேர்தலின்போது இந்த தகவல்கள் கூடுதல் பத்தியில் குறிக்கப்படும்.

பொதுவான வாக்காளர் பட்டியல் தயாரிப்பது குறித்து இந்திய தேர்தல் ஆணையம், மாநில தேர்தல் ஆணையம் ஆகியவை இணைந்து உத்தரவுகளைப் பிறப்பிக்க முடியும். வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் நடைமுறை ஒரே மாதிரியாக இருக்கும். பல்வேறு தேர்தல்கள், வெவ்வேறு சமயங்களில் நடக்கும்போது வாக்காளர் பட்டியல் அவசியம் தயாராக இருக்கும். இது ஒவ்வொரு ஆண்டும் மேற்கொள்ளப்பட வேண்டும். இரண்டு விதமான வாக்காளர் பட்டியல் அதற்கான காரணங்கள் ஆகியவற்றுக்கு இடையேயான முரண்பாடுகளை கண்டறிய, தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதிகளில் பரிசோதனை ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும்.

புதிய வாக்காளர்களுக்கான தகுதி தேதி குறித்து அமைச்சரவையில் இரண்டாவது தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. 1950ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 14(பி)-யின்படி பதிவு செய்யப்படும் ஆண்டின் ஜனவரி ஒன்றாம் தேதியோ அல்லது அதற்கு முன்போ 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யப்படும். அதே நேரத்தில் அந்த ஆண்டில் ஜனவரி 2ம் தேதி மற்றும் டிசம்பர் 31ம் தேதிக்கு இடையே பிறந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் பதிவு செய்ய அடுத்த ஆண்டு வரை காத்திருக்க வேண்டும் என்பதை இது உணர்த்துகிறது. இதனால், 18 வயது பூர்த்தியான பெரும்பாலானோர் வாக்காளர் பட்டியலில் இடம் பெறாமல் விடுபட நேர்கிறது.   

சில சமயம் இந்த விவகாரம் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் தமது கவலையை வெளிப்படுத்தியிருக்கிறது. 1999 மற்றும் 2004ம் ஆண்டுகளில் பொதுவான வாக்காளர் பட்டியல் குறித்து அரசுக்கு குறிப்புகள் அனுப்பப்பட்டன.இது குறித்து 2013ம் ஆண்டு நவம்பர் 4ம் தேதி சட்ட அமைச்சகத்துக்கும் கடிதம் எழுதப்பட்டது. தனிநபர்களுக்கு அவர்களின் 18வது வயதின்போது வாக்காளர் அடையாள அட்டை தர வேண்டும் அல்லது ஒவ்வொரு மாதமும் அல்லது காலண்டுக்கு ஒருமுறை வாக்காளர் பட்டியலை திருத்தம் செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது. இப்போதைய அரசு இந்த விஷயங்களுக்கு தீர்வு கண்டிருக்கிறது. இது சந்தேகத்துக்கு இடமின்றி ஒரு முற்போக்கான நடவடிக்கைதான்.  

பொதுவான வாக்காளர் பட்டியல் விஷயம் குறித்து விவாதிப்பதற்கு பிரதமர் அலுவலகம் ஒரு கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தது. அரசியலமைப்பின் பிரிவுகள் 243K மற்றும் 243ZA ஆகியவை உள்ளாட்சித் தேர்தல்களை கண்காணிக்க மாநில தேர்தல் ஆணையகதுக்கு அதிகாரங்களை வழங்குகிறது. நாட்டில் நடக்கும் அனைத்து தேர்தல்களுக்கும் பொதுவான ஒரு வாக்காளர் பட்டியலை கட்டாயமாக்கும் வகையில்  இந்த பிரிவுகளில் திருத்தம் கொண்டு வருவது குறித்து ஆலோசனையில் விவாதிக்கப்பட்டது. இரண்டாவதாக, மாநில தேர்தல் ஆணையகங்கள் உள்ளாட்சி தேர்தல்களுக்கு இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியலை பயன்படுத்தும் வகையில் அந்தந்த மாநிலங்கள் தங்களது தேர்தல் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும். ஜனவரி 1, ஏப்ரல் 1, ஜூலை 1 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளை தகுதியாகக் கொண்டு காலாண்டுக்கு ஒருமுறை புதிய வாக்காளர்கள் பதிவுகளை மேற்கொள்ள சுஷில் குமார் தலைமையிலான மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகத்தின் கமிட்டி முன்மொழிவுகளை வழங்கியிருக்கிறது.

ஆதாருடன், வாக்காளர் பட்டியலை இணைக்கும் முன்மொழிவானது இந்திய தேர்தல் ஆணையத்தால் முதலில் 2015ம் ஆண்டு முன்னெடுக்கப்பட்டது. பயனாளிகள் நலன் சார்ந்த திட்டங்களுக்கு மட்டும் தாமாக முன் வந்து ஆதார் தகவல்களை தந்தால் தவிர வேறு வகையில் அதனை உபயோகிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததால் இதற்கான பணிகள் நிறுத்தப்பட்டன. என்னுடைய கண்ணோட்டத்தைப் பொறுத்தவரை, இந்த இணைப்பானது, போலி வாக்காளர்களை அடையாளம் காண உதவும், போலி வாக்காளர்களை நீக்கும் மென்பொருள்களைக் கொண்டு இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு தீவிர முயற்சிகளை மேற்கொண்டபோதும், அது பெரிதாக வெற்றி பெறவில்லை. ஆனால் வாக்காளர்கள் தாமே முன் வந்து தன்னார்வமாக இணைப்பது எவ்வாறு செயல்படுத்தப்படும்? 90 கோடி வாக்காளர்களிடமும் தனித்தனியே கோரிக்கை விடுக்கப்படுமா?

தேர்தல் சீர்திருத்தம் எனும் கொந்தளிப்பான விஷயத்துக்கு தீர்வு காணும் எந்த ஒரு செயல்முறையும் படிப்படியாக செயல்படுத்தப்படுவது வரவேற்கத்தக்கது. எனினும், தேர்தல் பத்திரங்கள் மற்றும் ஒரே நேரத்தில் தேர்தல் போன்ற அரசியல் உள்நோக்கம் கொண்ட தேர்தல் சீர்த்திருத்தங்களை மட்டும் மேற்கொள்வதற்கு பதில் 40 க்கும் மேற்பட்ட நிலுவையில் உள்ள முன்மொழிவுகளையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டிய நேரம் வந்திருக்கிறது.

இந்த பத்தி முதலில் டிசம்பர் 23ம் தேதியிட்ட அச்சு இதழில் என்ற ‘A time for electoral reform’ தலைப்பில் வெளியானது. கட்டுரையின் எழுத்தாளர் எஸ்.ஒய். குரேஷி இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையராவார். ஒரு ஆவணப்படுத்தப்படாத அதிசயம் - மாபெரும் இந்தியத் தேர்தலின் உருவாக்கம்(An Undocumented Wonder — The Making of the Great Indian Election) என்ற புத்தகத்தின் எழுத்தாளரும் ஆவார்.

-தமிழில் ஆகேறன்

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment