scorecardresearch

வழித்துணைநாதர் குப்பத்தில் புத்தர்

மேல்காவனூரில் இருக்கும் இந்தச்சிலை விநாயகர் கோயில் அருகில் இருக்கிறது. ஊர்மக்கள் அந்தச் சிலையை புத்தர் என்று தெளிவாகக் கூறுகிறார்கள். ஆனால், அந்தச் சிலைக்கு பூசைகள் செய்யப்படும் போது விஷ்ணு வழிபாட்டுக்குரிய ‘கோவிந்தா’ எனும் முழக்கம் எழுப்பப் படுகிறது!

The Buddha statue, புத்தர் சிலை, மேல் காவனூர், வேலூர் மாவட்டம், கீழ்வழித்துணையான் குப்பம், வழித்துணைநாதர் புத்தர், கேவி குப்பம், தமிழ்நாடு, அழகிய பெரியவன், எழுத்தாளர் அழகிய பெரியவன், The Buddha, Buddha statue at Mel Kavanur, Mel Kavanur, KV Kuppam, Kilvazhithunaiyan kuppam, vellore district, buddhism, Azhagiya Periyavan, Tamilnadu, Writer Azhagiya Periyavan

எழுத்தாளர் அழகிய பெரியவன்

தமிழகத்தில் கைவிடப்பட்ட நிலையிலும், சிதைந்த நிலையிலும் பல புத்தர் சிலைகள் கண்டறியப்பட்டுள்ளன. சில ஊர்களில் அச்சிலைகளை மக்கள் வழிபட்டு வருவதும் தெரியவருகிறது. இவ்வாறு கண்டறியப் பட்டிருக்கும் சிலைகள் பெரும்பாலும் நடு மற்றும் தென் மாவட்டங்களிலேயே அதிகளவில் இருக்கின்றன. மிக மிக அரிதாகவே வடமாவட்டங்களில் புத்தர் சிலைகள் கண்டறியப்பட்டுள்ளன.

தமிழகத்தின் வடபகுதியான காஞ்சிபுரம் பௌத்தம் செழித்திருந்த பகுதிகளில் ஒன்று. இங்கு பௌத்தத் தலங்கள் இருந்ததாக வரலாற்று ஆதாரங்களும், யுவான் சுவாங் உள்ளிட்ட வெளிநாட்டவரின் குறிப்புகளும் உண்டு. இத்தனைப் பிரசித்திப் பெற்ற பௌத்தத் தலமாக காஞ்சிபுரம் இருந்திருப்பதால் தமிழகத்தின் வடபகுதிகளில் பௌத்தம் உறுதியாக பரவியிருந்திருக்க வேண்டும். ஆனால் அதற்கான வரலற்றுத் தடயங்கள் மிகக்குறைவாகவே கிடைக்கின்றன.

முகலாயர்களும், மராத்தியர்களும், நாயக்கர்களும் தமிழகத்துக்குள் புகுவதற்கு ஏற்ற நுழைவாயிலாக தக்காணப்பகுதி விளங்கியதால் இப்பீடபூமி ஓயாது போர் நிகழும் இடமாக இருந்திருக்கிறது. இந்தத் தொடர் போர்களின் காரணமாக அழிவுக்குள்ளான பலவற்றில் பௌத்தத் தலங்களும் இருந்திருக்கலாம். அதுமட்டுமின்றி இந்துமத நிறுவனங்களும், இசுலாம் மன்னர்களும் பௌத்த அழித்தொழிப்பு வேலைகளில் அதிகமாக ஈடுபட்டுள்ளனர். சிறு அளவில் பௌத்தத் துறவிகளின் தடுமாற்றங்களும் காரணமாக இருந்திருக்கின்றன. இந்த அழிம்புகளுக்கு இடையிலே தப்பிப்பிழைத்த சிற்சில ஆதாரங்களே தற்போது கிடைத்து வருகின்றன.

வழித்துணைநாதர் குப்பத்தில் புத்தர்

வேலூர் மாவட்டம் கீழ்வழித்துணையான் குப்பம் (கே.வி.குப்பம்) வட்டத்தில் இருக்கும் மேல்காவனூர் கிராமத்தில் ஒரு புத்தர் சிலை இருக்கிறது. வேலூர் கோட்டைக்குள் இருக்கும் அருங்காட்சியகத்தில் கூட இம்மாவட்டத்திலிருந்து கண்டெடுக்கப் பட்டதாக சில மகாவீரர் சிலைகள் மட்டும் இருக்கின்றனவே அன்றி புத்தர் சிலைகள் எதுவும் இல்லை. அந்த வகையில் பார்க்கும் போது இச்சிலை மிக அரிதான ஒன்றாகவே தெரிகிறது.

நடுகற்களைக் குறித்த கள ஆய்வுக்குச் சென்றிருந்தபோது இச்சிலையைப் பற்றி அறிந்து இக்கட்டுரை ஆசிரியர், வழக்குரைஞர் சிவா, கவிஞர் ரகசியன், வழக்குரைஞர் திராவிடப் பாண்டியன், ஆசிரியர் பாஸ்கரன், பார்த்திபன், அர்விந்த் சூர்யா ஆகியோர் அடங்கிய குழு அக்கிராமத்துக்குச் சென்று அச்சிலையை பார்வையிட்டது. காட்பாடியிலிருந்து சுமார் ஒருமணிநேர பயணத்தில் கீழ்வழித்துணையான் குப்பத்தை சென்றடைந்துவிட முடியும். குடியேற்றத்திலிருந்து இருபது நிமிடத்தில் போகலாம். இந்த ஊரிலிருந்து பள்ளிகொண்டா சுமார் ஐந்து கிலோ மீட்டர் தள்ளி இருக்கிறது.

இயற்கை எழில் சூழ்ந்த மேல்காவனூர் கிராமம் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டது. இக்கிராமத்தின் வடபுறத்தில் இடைநிலைப் பிரிவு, முற்பட்டப் பிரிவு மக்கள் வசிக்கின்றனர். தென்புறத்தில் பட்டியலின மக்கள் வாழ்கின்றனர். வடக்குப் பக்கத்தில் பெரிய ஏரியும், கிழக்குத் திசையில் காட்பாடி-சேலம் மார்க்கமாகச் செல்லும் ரயில் பாதையும் அமைந்திருக்கின்றன.

இக்கிராமத்தில் இடைநிலைப் பிரிவு மக்கள் வாழ்கின்ற பகுதியில் பழமையானதொரு விநாயகர் கோயிலின் வெளிப்பீடத்தின் மேல் அந்தப் புத்தர் சிலை இருக்கிறது. சுமார் இரண்டரை அடி உயரம் கொண்ட கருங்கல்லில் புத்தர் நேர்த்தியாகச் செதுக்கப் பட்டிருக்கிறார். அவர் தாமரைப் பீடத்தின் மீது தியான நிலையில் இருப்பதைப் போன்று சிலையின் அமைப்பு இருக்கிறது. புத்தரின் கண்கள் மூடியிருக்கின்றன. சுருள் முடியும் நீண்ட காது மடல்களும் கொண்டவராக புத்தர் விளங்குகிறார். அவர் உடலின் மீது துவராடை ஒன்று தெரிகிறது. அச்சிலையின் மேல்பாகத்தினுடைய ஒரு பகுதி சிதைந்திருக்கிறது. முன்காலங்களில் சிலைக்கு சுண்ணாம்பு அடிக்கப்பட்டிருப்பதால் அங்கொன்றும் இங்கொன்றுமாக சுண்ணக்கறையும் தெரிகிறது.

மக்களின் நம்பிக்கை

அந்தச் சிலை நீண்டகாலமாக அங்கு இருப்பதாக கிராமத்திலிருக்கும் முதியவர்கள் தெரிவிக்கிறார்கள். அச்சிலைக்கு அந்த ஊரிலிருந்த ஒருவர் சுண்ணம் அடித்து, கண்களுக்கு மைப்பூசி, கற்பூரம் கொளுத்தி, ’கோவிந்தா’ முழக்கங்களைப் போட்டு, சில பொருட்களை படைத்து வழிபடுவாராம். அவர் இறந்த பிறகு சுமார் இருபதாண்டுகளுக்கும் மேலாக யாரும் வழிபாடு செய்வதில்லை என்கின்றனர். புத்தரின் காதுகள் துளைகளுடன் நீளமாக இருப்பதால் அவரை, ‘தொள்ளைக்காது சாமி’ என்றும் அழைப்போமென ஒரு மூதாட்டி கூறினார்! துளை என்பது மருவி ’தொள்ளை’ என்று வடமாவட்டங்களில் அழைக்கப்படுகிறது.

மழை வரவில்லை என்றால் அச்சிலையை கவிழ்த்துப் போட்டு விடும் ஒரு வினோதமான பழக்கம் அக்கிராமத்தில் நிலவிவருவதையும் மக்களிடமிருந்து அறிந்து கொள்ள முடிகிறது. மழை வராதபோது புத்தரின் சிலையைக் கவிழ்த்துப் போட்டு விட்டு, மழை பெய்த பிறகு, அந்தச் சிலையை நிமிர்த்தி வைப்பதாக அம்மக்கள் சொன்னார்கள். அவ்வாறு தொடர்ந்து கவிழ்த்துப் போட்டும், நிமிர்த்தி வைத்தும் இருப்பதாலேயே அச்சிலையின் மேல்பகுதி மூளியாகிவிட்டதாக ஒருவர் சொன்னார்.

ரோகிணி ஆற்று நீர் பங்கீட்டில் சரியான உடன்பாடு எட்டப் படாததாலேயே புத்தர் துறவறம் பூண்டு உண்மையைத்தேடும் கடும்பணியை மேற்கொண்டதாக ’புத்தரும் அவர் தம்மமும்’ நூலில் அம்பேத்கர் எழுதுகிறார். அனைவருக்கும் சமஅளவில் நீர் கிடைக்க வேண்டும் என்ற காரணத்துக்காக அன்று தன்னை வருத்திக் கொண்டார் புத்தர். இன்றும் அதே வகையில் மேல்காவனூர் மக்களுக்கு மழை கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்தப் புத்தர் சிலை தன்னை வருத்திக் கொள்கிறதோ என்றும் தோன்றியது!

பெருமாளாகக் கருதப்படும் புத்தர்

மேல்காவனூரில் இருக்கும் இந்தச்சிலை விநாயகர் கோயிலின் அருகில் இருக்கிறது. ஊர்மக்கள் எல்லாருமே அந்தச் சிலையை புத்தர் என்று தெளிவாகச் சொல்கின்றனர். ஆனால், அந்தச் சிலைக்கு பூசைகள் செய்யப்படும் போதோ விஷ்ணு வழிபாட்டுக்குரிய ‘கோவிந்தா’ எனும் முழக்கம் எழுப்பப் படுகிறது! இந்த மூன்று கூறுகளும் வியப்பாகவோ அல்லது குழப்பமாகவோ தெரியலாம். ஆனால் இதுவே புத்தரைக் குறித்து இந்து மதம் உருவாக்கப் பட்டிருக்கும் திரிபு. இந்திய பௌத்த வரலாறு சரியாக எழுதப்படுமானால் அதில் இதைப் போன்ற திரிபுகளுக்கும், மாற்றங்கள், அழித்தொழிப்புகள் முதலானவற்றுக்கும் அதிக பக்கங்களை ஒதுக்க வேண்டியிருக்கும்.

இந்து மதம் புத்தரை விஷ்ணுவின் தசாவதாரங்களில் ஒன்றாகச் சேர்த்துள்ளது. பழம் நூலான பிங்கல நிகண்டு விஷ்ணுவை பௌத்தன் என்கிறது (பிங்கல நிகண்டு, பக்கம் 30, 1917). சூடாமணி நிகண்டு எனும் மற்றொரு நூலோ பார்மிசை நடந்தோன், பகவன், புங்கவன், தருமன், சாந்தன், முனைவன், வாமன், புனிதன், சினன், வரன், அறிவன், பிடகன், போதிவேந்தன் ஆகிய புத்தரின் பல்வேறு பெயர்களுடன் விநாயகன் என்ற பெயரையும் சேர்க்கிறது. இந்த இருவகையான திரிபுகளுக்குள்ளும் அகப்பட்டு மறைந்திருப்பது புத்தர் தான் என்பதற்குரிய இரண்டு ஆதாரங்களையும் மேல்காவனூர் ஒருசேர வைத்துக் கொண்டிருப்பது வியப்பளிக்கிறது!

இந்த ஊரில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்டு, விஜயநகர நாயக்கர்கள் காலத்தில் புதுப்பிக்கப்பட்ட கைலாசநாதர் கோயிலும், காவிநாச்சியம்மன் கோயிலும் இருக்கின்றன. இந்தக் கைலாசநாதர் கோயிலின் சுற்றுச்சுவரில், அமர்ந்த நிலையிலிருக்கும் சிறிய புத்தர் சிற்பம் ஒன்று பதித்துக் கட்டப்பட்டிருக்கிறது. அக்கோயில் வளாகத்தின் மேற்கு மூலையில் இருந்த கல்மண்டபம் சிதிலமடைந்து விட்டதாகவும், அந்த மண்டபத்தில் இருந்த மூன்று புத்தர் சிலைகளுள் ஒன்றே தற்போது கோயில் சுற்றுச்சுவரில் வைக்கப்பட்டிருக்கிறது என்றும் ஊர்மக்கள் சொல்கிறார்கள்.

இவ்விரண்டு கோயில்களோடு, கைவிடப்பட்ட நிலையில் பழங்காலத்தைய பெருமாள் கோயிலொன்றின் நுழைவாயிலும், கருட விளக்குத் தம்பமும் ஊரின் நடுப்பகுதியில் சிதிலமடைந்து இருக்கின்றன. இந்தப் பெருமாள் கோயிலின் நுழைவாயிலை மக்கள் ’மொட்டைக் கோபுரம்’ என்கின்றனர். இந்த நுழைவாயிலைத் தவிர்த்து பெருமாள் கோயில் என்று எதுவும் தற்போது அங்கு இல்லை.

மொட்டைக் கோபுரத்துக்கு அருகிலிருக்கும் விளக்குத் தூணுக்குத் தென்புறத்தில் ஒரு காலத்தில் தெப்பக்குளம் இருந்ததாகவும், அது தூர்க்கப்பட்டு காலப்போக்கில் அங்கு குடியிருப்புகள் உருவாகி விட்டதாகவும் சொல்கிறார்கள். அப்படியானால் அங்கு பெருமாள் கோயிலும் கூட இருந்திருக்கத் தான் வேண்டும். ஆனால் அது ஏன் இல்லை? இந்தக் கேள்விகளை எழுப்பிக் கொள்கின்ற போது அங்கிருந்தது பௌத்தக் கோயில். அது பிற்காலத்தில் பெருமாள் கோயிலாக மாற்றப்பட்டு, பின்னர் அதுவும் கூட அழிந்திருக்கிறது என்று நம்புவதற்கு இடமிருக்கிறது.

அதே போல மேல்காவனூருக்கு மிக அருகிலிருக்கும் கீழ்வழித்துணையான் குப்பத்தின் பெயரில் இருக்கும் ’வழித்துணையான்’ என்பதன் உண்மையான பெயர் ’வழித்துணைநாதர்’ என்கிறார் அறிஞர் தியோடர் பாஸ்கரன். புத்தரின் திரிபே விநாயகன் என்பது ஏற்கெனவே அயோத்திதாசப் பண்டிதர் போன்றோரால் நிறுவப்பட்ட ஒன்று. வழிப்பிள்ளையார் என்பதைப் போல வழித்துணைநாதர் என்பது புத்தரையே குறிக்கிறது. முன்னர் இது பௌத்தத்தலமாக இருந்திருப்பதாலாயே இப்பெயரை இந்த ஊர் கொண்டிருந்திருக்கிறது என்று சொல்வதற்கும் இடமிருக்கிறது.

திரிபுகள் மாற்றங்கள்

புத்தரின் பிறப்பு, வாழ்வு, போதனைகள் என அனைத்திலும் திரிபுகளும் மாற்றங்களும் திட்டமிட்டு உருவாக்கப் பட்டிருக்கின்றன. இந்திய துணை கண்டத்தின் வடகிழக்கு மூலையில் தோன்றி இந்தியா முழுவதும், ஆசிய நாடுகளுக்கும், பின்னர் உலகம் முழுமைக்கும் பரவிய மானுட தத்துவமே பௌத்தம். இந்தத் தத்துவத்தை உலகுக்குக் கொடையாகக் கொடுத்த சித்தார்த்தர் என்கிற கௌதமர் கி.மு.563 ஆண்டு சாக்கிய குடியரசிலிருந்த கபிலவஸ்துவுக்கு அருகில், லும்பினி என்ற ஊரில் சுத்தோதனருக்கும், மாயாதேவிக்கும் பிறந்து, கி.பி. 483 வரை வாழ்ந்தார்.

புத்தரின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான திரிபுகள் ஏராளம். இது அவரது பெற்றோரைக் குறித்த செய்திகளிலிருந்தே தொடங்கிவிடுகிறது. குறிப்பாக புத்தரின் தாயாகிய மாயாதேவி குறித்த செய்தி. மாயாதேவி, தன்னுடைய முற்பிறவியில் அந்தணர் ஒருவருக்கு மகளாகப் பிறந்ததாகவும், அந்த அந்தணர் தன் மகளாகிய மாயாதேவியிடத்தில் நறுமண மலர்களைக் கொடுத்ததாகவும், மாயாதேவி அம்மலர்களை அப்போதிருந்த பௌத்தரின் பாதங்களில் தூவியதாகவும், அந்தப் பௌத்தர், அடுத்தப் பிறவியில் நீ ஒரு புத்தனைப் பெற்றெடுப்பாய் என்று வாழ்த்தியதாகவும் ஒரு மேல்நிலையாக்கக் கதை உருவாக்கப் பட்டிருக்கிறது (பௌத்தம் போற்றிய பெண் தெய்வங்கள், டாக்டர் அரங்க. இராமலிங்கம், 1992, தேன்மழைப் பதிப்பகம்).
புத்தருக்கு முன்னாலேயே சம்புத்த, கொண்டஞ்ஞ, ஞானிமங்கள, சுமண, புத்ரவேத, சோபித, சம்புத்த அனோமதசி, பதும, விஜயநாரத, சம்புத்த புதுமுத்ர, ததாகத சுமேத, சுஜாத, பிரியதசி, அத்ததசி, தம்மதசி, சித்தார்த்த, தீஸ, விஜயபுஸ்ஸ, விபாசி, சம்புத்த ஸிக்ஹி, சம்புத்த வேஸபு, சம்புத்த ககுசந்த, கோணகமன, காஸப்ப என இருபத்து நான்கு புத்தர்கள் இருந்ததாக சொல்லி வைத்திருக்கிறார்கள். இது ஓர் அவதாரக் கதையாக்கமன்றி வேறல்ல!

அதே போன்று, உண்மையைத் தேடும் கடும்பயணமாகிய துறவறத்தை புத்தர் ஏன் மேற்கொண்டார் என்பதற்கு தொடர்ந்து சொல்லப்பட்டு வருகின்ற காரணம். அவர் வாலிப வயதுவரை தனது மாளிகையை விட்டு வெளியேறாமல் இருந்து, பின்னர் சந்தகன் என்ற தேர்ப்பாகனின் உதவியுடன் (அர்ச்சுனனுக்கு கிருஷ்ணன் தேர்ப்பாகனாக இருந்த மகாபாரதக் கதை இதனோடு தொடர்பு படுத்தப்படுகிறது!) வெளியே சென்றபோது வயதான கிழவரையும், நோயாளியையும், பிணத்தையும், துறவியையும் பார்த்துவிட்டு வந்ததால் எழுந்த ஆழ்ந்த சிந்தனையின் விளைவாக அவர் துறவறம் மேற்கொண்டார் என்பது மிகவும் எளிய பகுத்தறிவுடன் பார்த்தாலேயே இக்காரணம் ஏற்றுக் கொள்ளப்படாது. சுமார் இருபது வயதை கடக்கும் வரை மாளிகைக்குள்ளேயே இருந்ததாகச் சொல்லப்படும் சித்தார்த்தர், மாளிகைக்குள்ளேயே முதியவர்களையும், நோய்வாய்ப் பட்டவர்களையும், மரணங்களையும் பார்த்திருக்கவே மாட்டாரா? இன்னொன்று, சித்தார்த்தர் ஓர் அரசர் என்கிற கருத்து. அவரின் தந்தை சுத்தோதனர் ஓர் அரசரோ, சத்திரியரோ அல்லர். அவர் வடகிழக்கின் பல இனக்குழுக்களுள் ஒன்றாகிய சாக்கிய இனக்குழுவின் தலைவர். குடியரசு முறைபடி சுழற்சி முறையில் ஏற்படுத்தப்படும் ஆட்சி நிர்வாக முறை அன்றைக்கு அங்கே இருந்திருக்கிறது. எனவே சித்தார்த்தர் இளவரசர் அல்லர். இதைப்போன்ற கதைகள் அனைத்துமே, எளிய அடித்தட்டு மனிதர்களால் உயர்வானவற்றை சிந்திக்கவோ, செய்யவோ முடியாது என்ற ’இந்திய பொது புத்தியிலிருந்து’ உருவாக்கப்பட்டவை தான்.

சமூக அக்கறைகொண்ட மனிதனாகப் பிறந்து, பேராசைகளைத் துறந்து பகுத்தறிவுடனும், ஒழுக்கத்துடனும் வாழ்வதே சிறந்த மானுட வாழ்க்கை எனும் பேருண்மையைப் பரப்பி, பிராமனியத்தை எதிர்த்து இறந்தவரே புத்தர். அதனால் தான் அம்பேத்கர் இந்திய வரலாற்றையே பிராமனியத்துக்கும் பௌத்தத்துக்கும் நடந்த போராகப் பார்க்கிறார். புத்தர் சொன்ன இறைமறுப்பு மற்றும் ஒழுக்கவியல் சார்ந்த பகுத்தறிவுக் கருத்துகளை கடுமையாக எதிர்த்தது பிராமனியம். தனக்கு எதிராக செயல்படும் பௌத்தத்தை ஒழிக்கப் பார்த்தது. அந்த அழித்தொழிப்புச் செயல்பாட்டின் முகமாக பௌத்தத்தில் பல பிரிவுகளையும், குழப்பங்களையும், திரிபுகளையும் ஏற்படுத்தி அதை பிராமனிய மயமாக்கியது.
புத்தரின் மரணத்துக்குப் பிறகு பௌத்தம் 108 பிரிவுகளாகப் பிரிந்தது. ஸ்தவரதம், மஹிசாசக், விரிஜிபுத்ரக், தர்மோத்ரி, பத்ரயாளிக், சன்னகாரிக், சம்மிதியக், மகாசாங்கியம், கோகுலிக், ஏக வியாவ ஹாரிக், பிரக்ஞப்தி, பாகுலிக், சைதன்ய, சர்வாஸ்தி, தர்மகுப்தி, காஸ்யபீய, சங்கராந்திக், சூத்ரக் ஆகிய 18 பிரிவுகள் பௌத்தத்தில் இருந்ததாக கி.பி. 629 ல் இந்தியா வந்த யுவான் சுவாங் குறிப்பிடுகிறார்.

ஒருவேளை இந்தப் பதினெட்டு பிரிவுகளும் அந்த 108 லிருந்து எஞ்சியவையாக இருக்கக் கூடும். இவற்றுடன் சர்வாங்திகம், சவுந்திராந்திகம், யோகசாரம், மாந்திமிக் என்றும் சில பிரிவுகள் இருந்துள்ளன. கி.மு இரண்டாம் நூற்றாண்டு வாக்கில் மேற்கு ஆந்திராவில் உருவான சைதன்ய, சம்மிதிய என்ற இரு பிரிவுகள் ஒன்றிணைந்து, ஸ்தவரதம் என்ற மூல பௌத்தத்தை விட்டுவிட்டு, ஏனைய பதினைந்து பிரிவுகளின் சாரத்தை எடுத்துக்கொண்டு மஹாயானமாக உருவெடுத்தது.

இதை உருவாக்கியவர் ஸ்ரீபர்வதம் அல்லது நாகார்ஜூன கொண்டா எனும் ஆந்திர பகுதியைச் சேர்ந்த நாகார்ஜூனர். இவர் ஓர் ஆரியர் (பவுத்தம்: ஆரிய திராவிடப் போரின் தொடக்கம், எழில் இளங்கோவன், வானவில் புத்தகாலயம், 2014). இதன் பிறகு நிலைபெற்ற மஹாயானம் பலவகையான மேல்நிலையாக்கக் கதைகளையும், திரிபுகளையும், சிலை வழிபாட்டையும், சமஸ்கிருதத்தையும் உள்ளடக்கியதாக மாறியது. மூத்தோர் குழு என்று அழைக்கப்படும் தேராவாதம் ஓரளவுக்கு பகுத்தறிவுக்கு உகந்ததாகத் தொடர்ந்து பின்னர் அதுவும் திரிபடைந்தது. இதோடு நிற்காமல் வைணவமும் சைவமும் போட்டி போட்டுக்கொண்டு சமயபூசலின் காரணமாக பௌத்தத்தை அழித்தொழிப்பதில் ஈடுபட்டன.

தமிழகத்தில் சம்பந்தர் பௌத்தருடன் வாதப்போர் செய்து தோற்கடித்து அவர்களை சைவராக்கினார். மாணிக்கவாசகர் பௌத்தருடன் வாதம் செய்து தோற்கடித்து அவர்களை இலங்கைக்கு விரட்டினார். திருமங்கையாழ்வார் நாகப்பட்டினம் பௌத்த ஆலயத்திலிருந்த பொன்னாலான புத்தர் சிலையைக் கொண்டு திருவரங்கத்தில் திருப்பணி செய்தார் என்று மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் தன்னுடைய நூலில் எழுதுகிறார் (பௌத்தமும் தமிழும், மயிலை சீனி. வேங்கடசாமி, 1940).

அதுமட்டுமின்றி சாத்தன், சாத்தனார் எனும் பெயர்கள் புத்தரைக் குறிக்கின்ற பெயர்களாதலால் அவருடைய கோயில்களே சாஸ்தா என்கிற ஐயப்பன் கோயில்களாகவும், ஐயனார் கோயில்களாகவும் மாற்றப்பட்டன. வைணவம் புத்தரை திருமாலின் அவதாரமாகக் கொண்டதென்றால், சைவம் அவரை சிவனுக்குப் பிறந்த பிள்ளையாகச் சேர்த்துக் கொண்டது என்கிறார் வேங்கடசாமி.

தருமராஜா என்ற பெயர் புத்தருக்கு உரியது என்பதால் தருமராஜா கோயில்கள் புத்தக் கோயில்களே. தலைவெட்டி முனீஸ்வரர் கோயில்களும் பௌத்தக் கோயில்களே. இவைமட்டுமின்றி தாராதேவி, மங்கலாதேவி, சிந்தாதேவி முதலான பௌத்தக் கோயில்கள் பகவதி கோயில்களாகவும், திரௌபதி கோயில்களாகவும், அம்மன் கோயில்களாகவும் மாற்றப்பட்டிருக்கின்றன. யாகத்தில் விலங்குகளை பலியிடாமல் இருத்தல், அரசு, ஆல், வேம்பு போன்ற மரங்களை வணங்கிடும் சூழலியல் சார்ந்த பார்வை, மடங்களை ஏற்படுத்தி அவற்றின் வழியாக நூல்களைப் பாதுகாத்து, கல்வியைப் போதித்தல் முதலான பௌத்த நடைமுறைகளை தன்னுடன் வைத்துக் கொண்ட இந்து பெருதெய்வ வழிபாடு, பௌத்தக் கோயில்களை சிறுதெய்வ வழிப்பாட்டுக்கு உரியதாகத் தள்ளிச் சிதைத்தது என்றும் வேங்கடசாமி சொல்கிறார்.

பாலிகொண்டா

கீழ்வழித்துணையான் குப்பத்தை ஒட்டிய இந்த மேல்காவனூர் மட்டுமின்றி சுற்றுப் பகுதிகளும் கூட பௌத்தம் செழித்த இடமாக இருந்திருக்கலாம் என்று நம்புவதற்கு அம்பேத்கரின் குறிப்பு ஒன்று பயன்படுகிறது. தென்னிந்தியாவில் புத்தமத நிலை குறித்த அவருடைய அறிக்கையில், 1954 ஆம் ஆண்டு ஜீலை மாதம் ஏழாம் தேதியிலிருந்து பதினான்காம் தேதிவரை தென்னிந்தியாவில் இருக்கும் பௌத்த சமுதாயத்தினரின் நிலை குறித்து நேரில் தெரிந்து கொள்வதற்காக அவ்விடங்களுக்கு அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டதாகக் குறிப்பிடுகிறார்.
அவ்வாறு அவர் குறிப்பிடும் இடங்களில் வடாற்காடு மாவட்டத்தைச் சேர்ந்த பாலிகொண்டாவும் இருக்கிறது. அம்பேத்கர் பாலிகொண்டா எனக் குறிப்பிடும் இடம் பள்ளிகொண்டாவாகும். வடாற்காடு மாவட்டத்தைச் சேர்ந்த திரிபுரம், வளத்தூர், வன்னிவேடு ஆகிய ஊர்களின் பெயர்களும் கூட இவ்வறிக்கையில் இருக்கின்றன (அம்பேத்கர் பேச்சும், எழுத்தும் நூல்தொகுதி-37 பக்கம்:653).

மேல்காவனூரிலிருந்து சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் பள்ளிகொண்டா இருப்பதை ஞாபகப்படுத்திக் கொள்கிறபோது, இந்த ஊர் நிச்சயமாக ஒரு பௌத்தத் தலமாக இருந்திருக்கும் என்பதை ஏற்பதற்கு உறுதியாக இடமிருக்கிறது.

இதைப் போன்ற புத்தர் சிலைகள் கண்டறியப்படும் போது அந்தந்த ஊர்களிலேயே அரசு ஓர் அமைதிச் சோலையை (புத்தச் சோலை) ஏற்படுத்தி அதன் நடுநாயகமாக அச்சிலையை வைத்து பாதுகாக்க வேண்டும். அவ்விடங்களுக்கு மக்கள் சென்று வழிபாடுகள் எவற்றையும் செய்யாமல் மனதை ஒருமுகப்படுத்தும் செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். அவ்விதம் செய்யும்போது இந்தியாவில் சமத்துவம் உருவாவதற்கு ஏற்றவகையில் பௌத்தம் மீண்டும் பொலிவுபெறும் என்பது உறுதி.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Stay updated with the latest news headlines and all the latest Opinion news download Indian Express Tamil App.

Web Title: Th buddha statue at mel kavanur near kv kuppam

Best of Express