Advertisment

பிணம் தின்னும் சாத்திரங்கள் 4 : டாஸ்மாக்கும் அரசியலும்

மது வேண்டாம் என்றால் அடியோடு ஒழித்துக் கட்டு. நெடுஞ்சாலை என்ன, ஐந்து நட்சத்திர ஓட்டல் வரை எங்கேயும் எப்போதும் ஒரு துளி மதுகூட கண்ணில் படக்கூடாது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
பிணம் தின்னும் சாத்திரங்கள் 4 : டாஸ்மாக்கும் அரசியலும்

கதிர்

Advertisment

வட மாநில ஊடக நண்பர் விபத்தில் போய்விட்டார். சென்னை கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த மகனுக்கு இங்கேயே நல்ல வேலை கிடைத்து திருமணமாகி புறநகர் ஃபிளாட்டில் வசிக்கிறார். மகிழ்ச்சியான குடும்பம்.

சமீபத்தில் அவருடைய மனைவி மட்டும் குழந்தைகளோடு வந்திருந்தார். கலகலப்பு இல்லாமல் பேசிக் கொண்டிருந்தவரிடம் கணவன் ஏன் வரவில்லை, ஊரில் இல்லையா என்று விசாரித்ததும் கண்களில் அணை உடைந்து கொட்டியது. சொன்ன கதை கேட்டு நமக்கு டபுள் அதிர்ச்சி.

பார்ட்டி தினமும் ஆபீஸ் விட்டு வரும் வழியில் டாஸ்மாக் பாருக்கு போவது வாடிக்கையாம். ஒரு மணி நேரம் தாமதமாக வருவதை தவிர ஒரு குறையும் கிடையாதாம். “குடிச்சிருக்கார்னு எனக்கு தெரியும். காட்டிக்க மாட்டேன். அவரும் வாய் குழறிக்கூட பேசினது இல்லை. குழந்தைகளோடு அரட்டை அடித்து, டீவி பார்த்து, சாப்பிட்டு தூங்கி விடுவார். எந்த பிரச்னையும் இல்லாமல்தான் போய்க் கொண்டிருந்தது”.

நெடுஞ்சாலை மதுக்கடை வழக்கில் சுப்ரீம் கோர்ட் போட்ட தடாலடி உத்தரவு இந்த தம்பதியின் வாழ்க்கையை புரட்டிப் போட்டு விட்டது.

Kathir - Tasmac- Police

பார்ட்டி குடிக்கும் பாரும் கடையும் அகற்றப்பட்டது. மூன்று கி.மீ சுற்றளவில் ஒரே கடைதான் தப்பியது. அதில் எப்போதும் திருவிழா கூட்டம், தியேட்டர் க்யூ. ஓட்டல் பாருக்கு மாறியிருக்கிறார். ஐந்தாறு மடங்கு அதிக விலை என்பதால் க்ரெடிட் கார்ட் தேய்த்திருக்கிறார். தவணை கட்ட கடன் வாங்கியிருக்கிறார். போதாதா?

மது வீட்டுக்கும் வேலைக்கும் கேடு என்பது ஊர்ஜிதமானது. சஸ்பெண்ட் ஆகி வீட்டில் அடைந்து கிடக்கிறார். தினமும் சண்டை. தேடி வந்த ஆபீஸ் நண்பர் உபயத்தில் இரண்டு நாள் வீட்டிலேயே குடித்து பிரச்னை செய்யாமல் இருந்துள்ளார்.

”தினமும் குடிச்சாலும் நல்லவரா இருந்தார். இப்ப குடி இல்லாம கெட்டவரா நடந்துக்கறார். என்ன பண்றதுன்னே புரியல..” என்று பிள்ளைகளுக்கு தெரியாமல் கண்களை துடைத்துக் கொண்ட அந்த பெண்மணிக்கு என்ன சொல்லி ஆறுதல் படுத்துவது என்று எங்களுக்கு தெரியவில்லை.

டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டால் குடிப்பவர்கள் மதுவை மறந்து விடுவார்கள் என்று நம்புகிறவர்கள் ஏமாளிகள். குடிப்பது என்று தீர்மானித்து விட்டவனை எவராலும் தடுக்க முடியாது. பெரும்பாலான குடிகாரர்கள் அந்த ரகம்தான். அறிவுஜீவிகளும் டாக்டர்களும் ஆயிரம் சொன்னாலும் குடிமகன் ஏற்கத் தயாராக இல்லை.

“குடிப்பது பாவமாகவே இருந்துவிட்டு போகட்டும். உங்களைப் போல் அன்றாடம் பெரும் பாவம் செய்து அடுத்தவர் குடியை கெடுக்காமல் என் குடியைத்தானே நான் கெடுத்துக் கொள்கிறேன். உங்களுக்கு என்ன வந்தது?” என்று அவன் அரசியல்வாதிகளை அதிகார வர்க்கத்தை கேட்கிறான்.

குடி குடியைக் கெடுக்கும், மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு என்று போர்டு எழுதி தொங்கவிட்டு மது விற்கும் அரசாங்கத்தை என்ன சொல்லி திட்டுவது? எத்தனை பெரிய பித்தலாட்டம் இது. பிரஜைகளின் வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு விளைவிக்கும் ஒரு செயலை எந்த பயமும் இன்றி பட்டப்பகலில் துணிகரமாக செய்து கொண்டிருக்கும் அமைச்சர்கள், அதிகாரிகள் ஒவ்வொருவரையும் கைது செய்து சிறையில் அல்லவா அடைக்க வேண்டும்? சட்டம் அப்படித்தானே சொல்கிறது.

டாஸ்மாக் கடைகளை அடைக்க வேண்டும் என்று ஊருக்கு ஊர் பெண்களை முன்னிறுத்தி நடத்தும் ஆர்ப்பாட்டங்களும், சந்தடி சாக்கில் கடைகளை சூறையாடும் காட்சிகளும்தான் பொதுமக்களின் கவனத்துக்கு வைக்கப்படுகிறது. மக்களை தூண்டி விடுவது, இந்த அரசுக்கு எதிராக மக்கள் பொங்கி எழுந்து போராடுகிறார்கள் என்ற தோற்றத்தை உருவாக்குவது, தாங்கள் மட்டும் நல்லவர்கள் என காட்டிக் கொள்வது. சில ஆர்ப்பாட்டங்களில் இன்னொரு டாஸ்மாக் பார் ஓனர் அல்லது கடை அமைந்துள்ள கட்டிடத்தின் உரிமையாளர் அல்லது ஒரு கட்சி அல்லது அமைப்பு அதன் பின்னணியில் இருப்பதை அறியலாம்.

இத்தகைய உள்நோக்கங்கள் தவிரவும் சமூக, கலாசார ரீதியாக இது ஒரு ஃபேஷன் ஆகிவிட்டது. குடிப்பவன் உரிமையை ஆதரித்தால் நீயும் குடிகாரன், அப்படித்தான் பேசுவாய் என்கிற எள்ளல் இங்கே சகஜமல்லவா.

Kathir - Tasmac- Tamilnadu

உறுதியாகச் சொல்ல முடியும், உச்ச நிதிமன்றத்தின் ஆணையை நிறைவேற்றுவதாகச் சொல்லி பெரும்பாலான இடங்களில் டாஸ்மாக் கடைகளை மூடியதால் பலன் அடைந்த குடும்பங்கள் ஒன்றிரண்டு இருக்கலாம்; ஆனால், பாதிக்கப்பட்ட குடும்பங்கள் பல்லாயிரக்கணக்கில் இருக்கின்றன. நடைமுறைக்கு சாத்தியப்படாத உத்தரவை பிறப்பித்த உச்ச நீதிமன்றமும், அதற்கு பொருத்தமான எதிர்வாதம் செய்யத் தயங்கிய மத்திய மாநில அரசுகளும்தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும்.

இந்த அத்தியாயத்தின் ஆரம்பத்தில் நாம் சந்தித்தது நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த நன்கு படித்து கவுரவமான வேலையில் இருந்த இளைஞரின் மனைவியை. அதிகம் படிக்காத, அதிக வருமானம் இல்லாத ஆண்களின் குடும்பத்தை நினைத்துப் பாருங்கள்.

கடை முன்னால் காத்திருந்து ‘கட்டிங்’ வாங்க வரும் ஆசாமியை கண்டு பிடித்து, 100 ரூபாயில் ஒரு குவாட்டர் வாங்கி ஆளுக்கு பாதி ஊற்றிக் கொண்டு அமைதியாக வீட்டுக்கு திரும்பும் குடிமகன்களை ஒவ்வொரு ஊரிலும் ஆயிரக்கணக்கில் பார்த்திருப்பீர்கள். வெறும் 50 ரூபாயில் உலகத்தின் அனைத்துப் பிரச்னைகளில் இருந்தும் விடுபட்டு நிம்மதியாக தூங்கிக் கொண்டிருந்த அவனுக்கு இப்போது மூன்று மடங்கு அதிக பணமும் நேரமும் தேவையாகிறது. யார் கொடுப்பார்கள்?

கடைக்கு ஆயிரம் வீதம் பத்து கடைகளில் குடித்துக் கொண்டிருந்த பத்தாயிரம் பேரும் இன்று மிச்சமுள்ள இரண்டு கடைகளுக்கு படை எடுத்து வருகிறார்கள். இரவு 7 மணிக்கு மேல் எந்த பஸ் ஏறினாலும் கூட்டம் நிரம்பி வழிகிறது. ஸ்டாப்பே இல்லாத இடத்தில் டாஸ்மாக் கடை அருகே நின்றதும் திபுதிபுவென இறங்கி ஓடுகிறார்கள். பஸ் காலி. ஆட்டோ உட்பட அனைத்து வகை போக்குவரத்தும் டாஸ்மாக் ஸ்பெஷலாக மாற்றப்படுகிறது.

திருவண்ணாமலை கிரிவலத்துக்கும், குற்றாலம் அருவிகளுக்கும் அழைத்துச் செல்வதைப் போல ஆட்களை அள்ளிக் கொண்டு சென்று கொட்டி விட்டு திரும்புகின்றன ஷேர் ஆட்டோக்கள். ஓலா, ஊபர் ஆப்களில் டாஸ்மாக் கடைகள் ‘அடிக்கடி செல்லும் இடங்கள்’ பட்டியலில் இடம் பிடித்துள்ளன.

போலீஸ்காரர்கள் சும்மாவே டாஸ்மாக் கடை இருக்கும் தெரு முனையில் இருட்டில் ஒளிந்து நின்று டூவீலர்களை பாய்ந்து பாய்ந்து பிடிப்பார்கள். இப்போது சொல்லவா வேண்டும்?சட்டத்தின் கெடுபிடிகள் அதிகரிக்க அதிகரிக்க வசூல் வாய்ப்புகளும் அதிகமாகிறது அல்லவா. ஆனால் உஷாரான எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள் இருக்கும் ஏரியாக்களில் போலீஸ் பாச்சா பலிக்கவில்லை. செல்வாக்கான அரசியல் புள்ளிகள் வசிக்கும் பகுதிகளில் சாலையோர கடைகள் அவசரமாக இடம் மாற்றப்பட்டு ஒதுக்குப்புறமாக நிர்மாணிக்கப்பட்டு விட்டன. புது இடம் எப்படி என்கிறீர்கள்? பார்த்தால்தான் நம்புவீர்கள்.

கல்யாண மண்டபம் அளவுக்கு விஸ்தாரமான கட்டிடம். கீழே கடை. மேலே பார். ஏசி பார் என்றால் நுழைவுக் கட்டணம் தலா 40 அல்லது 50 ரூபாய். ஏசி இல்லை என்றால் 10 முதல் 20. பிரமாண்டமான ஏசி ஹாலில் ஒரே நேரத்தில் 250 பேர் வசதியாக அமர்ந்து குடிக்கலாம். 15 ஸ்ப்லிட் ஏர்கண்டிஷனர்கள் 17 டிகிரியில் சில்லென்ற காற்றை விசிறியடிக்கின்றன. ராட்சத டீவி ஸ்க்ரீன்கள் இரு புறமும். ”கிரிக்கெட் மேட்ச் நடந்தால் மட்டும் ஆன் செய்வோம், சார். மத்த நாள்ல போட்டால் பேச்சுக்கு இடைஞ்சலா இருக்குங்றாங்க” என்றான், பள்ளிக்கூடம் போக வழியில்லாத 15 வயது ஊழியர்.

பெயர்தான் ஊழியர். சம்பளம் கிடையாது. தங்குமிடம் மட்டும்தான். “படிச்சவன்லாம் வேலை கிடைக்காம அலைறாங்க. இங்கயே பாக்கிறேன்ல. நமக்கு இப்ப தினம் 150ல இருந்து 200 கிடைக்குது. சூபர்வைசருக்கு கொஞ்சம் செலவு போனாலும் மாசம் ஐயாயிரம் தேறுது. கொஞ்சம் துட்டு சேத்துட்டா ஒரு டீக்கடை போட்ருவேன், சார்” என்கிறான். அதிகார வர்க்கத்தின் ஆசியுடன் நடக்கும் இதுபோன்ற கடைகளை சுற்றிலும் ஏதாவது ஒரு பெரிய காலியிடம் இருக்கிறது. கார்கள் சீராக பார்க் செய்யப்பட்டுள்ளன. டூவீலர்கள் போக்குவரத்துக்கு இடைஞ்சல் இல்லாமல் சாலையின் இரு பக்கமும் வரிசை கட்டுகின்றன. குடித்துவிட்டு கடை முன்னால் நின்று பேசும் கும்பல்களை விரட்ட சீருடையில் ஒரு கான்ஸ்டபிள். அடிக்கடி சுற்றி வரும் போலீஸ் பெட்ரோல் வண்டியை அவ்வப்போது நிறுத்தி, எல்லாம் சரியாக இருக்கிறதா, ஏதாவது உதவி தேவையா என்று கடை ஊழியரை அழைத்து விசாரிக்கிறார் ஒரு அதிகாரி.

kathir - Tasmac - botile

இதெல்லாம் விஜய் படங்களில் மட்டும்தான் பார்க்கலாம் என்று நான் நினைத்திருந்த காட்சிகள். ஒன்பது நகரங்களில் ஏறத்தாழ இதே மாதிரியான சீன்களை பார்க்க முடிந்தது. அங்கெல்லாம் சந்தித்தவர்களிடம் பேசியபோது, குடிக்கு ஆகும் செலவு இப்போது கணிசமாக உயர்ந்து விட்டதை பற்றிய கவலைதான் தூக்கலாக இருந்தது. நேர விரயமும் அவர்கள் மனதை உறுத்தாமல் இல்லை. கோர்ட்டையும் அரசையும் வறுத்து எடுக்கிறார்கள் கோபத்துடன்.

இது குடிகாரர்களுக்கு ஆதரவாக மதுவுக்கு சாதகமாக பதிவு செய்யும் வார்த்தைகள் அல்ல. அரசின் மதுவிலக்குக் கொள்கையும், அதை நடைமுறைப்படுத்துவதில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளும் எவ்வளவு தூரம் கேலிக்குரியதாக ஆகிவிட்டது என்பதை சுட்டிக் காட்டுவதே நமது நோக்கம்.

”மது வேண்டாம் என்றால் அடியோடு ஒழித்துக் கட்டு. நெடுஞ்சாலை என்ன, ஐந்து நட்சத்திர ஓட்டல் வரை எங்கேயும் எப்போதும் ஒரு துளி மதுகூட கண்ணில் படக்கூடாது. அதை விட்டுவிட்டு, அங்கே கடை வைக்காதே, இங்கே பார் திறக்காதே, பொது இடத்தில் குடிக்காதே.. என்று கண்டிஷன் போட்டால் எப்படி ஏற்க முடியும்? அமைச்சர், ஐஏஎஸ், நீதிபதி போன்று உயர் அந்தஸ்தில் இருப்பவர்கள் வீட்டிலேயே எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்ளலாம். ஏழைகள், நடுத்தர குடும்பத்தினர் வீட்டில் உட்கார்ந்து மது குடிக்க வழியோ இடமோ எங்கே இருக்கிறது? குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது குற்றம் என்றால், காரிலும் பைக்கிலும் வந்து இறங்குவோருக்கு சரக்கு கிடையாது என்று போர்டு எழுதி போடுவதுதானே? பாரில் குடிப்பவன் பைக்கிற்கு காவல் நிற்பதும் போலீஸ்தான். அங்கிருந்து பைக்கை எடுத்ததும் குறுக்கே மறித்து வசூல் செய்வதும் போலீஸ்தான். அரசுக்கே இது கேவலமாக தெரியவில்லையா?” என்று பொங்கினார்கள் குடிமக்கள்.

இந்த கெடுபிடிகளை மனமார வரவேற்கும் இன்னொரு கோஷ்டி, போலி மது கடத்தல் புள்ளிகள். சர்வ சாதாரணமாக கடைகளிலேயே புழங்குகிறது போலி அயிட்டங்கள். கடை அடைத்து விட்டாலும் கவலை வேண்டாம். பலர் வீடுகளில் வைத்தே விற்கிறார்கள். கூடுதலாக 100, 200 வெட்ட தயார் என்றால் 24 மணி நேரமும் சரக்கு வாங்கி ருசிக்கலாம் குடிமகன்கள்.

சில அதிகாரிகள், பெரியவர்களிடமும் இது குறித்து உரையாட வாய்த்தது. இன்றைய காலகட்டத்தில் மதுவிலக்கு சாத்தியமே இல்லை என்று அவர்கள் நம்புகிறார்கள்.

”முழுமையான மதுவிலக்கு வந்தால் குடிப்பவர்கள் எண்ணிக்கை குறையலாம். ஆனால் கள்ள சாராயம், போலி மது, கடத்தல் மது போன்ற வேறு வகையான பாதிப்புகள் பெருகும். அதை தடுக்க இயலாது. இதற்கு மாறாக பேசிக் கொண்டிருப்பவர்கள் நிகழ்கால எதார்த்தங்களை அறியாதவர்கள் என்றுதான் சொல்ல வேண்டும்” என்றார் ஓய்வு பெற்ற உயர் அதிகாரி ஒருவர்.

“நான் இதுவரைக்கும் பாட்டிலை தொட்டதுகூட கிடையாது. ஆனா, என் மகள் வீட்ல பார் இருக்கு. மாப்பிள்ளைக்கு அவளே செர்வ் பண்றா. நான் என்ன சொல்ல முடியும்? நான் என்ன சாப்பிடலாம் என்ன சாப்பிடக் கூடாதுனு திர்மானிக்க உனக்கென்ன அதிகாரம்னு கவர்மெண்ட பாத்து ஜனங்க கேக்றாங்க. அவங்க என்ன குடிக்கலாம், குடிக்கக் கூடாதுனு சொல்றதும் அப்படித்தானே?” என்று முத்தாய்ப்பாக கேட்டார் அவர்.

நாளை தொடர்வோம்

Tamil Nadu Tasmac Kathir
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment