Advertisment

பிணம் தின்னும் சாத்திரங்கள் 6 : அடுத்த அவதாரம் யார்?

நிபந்தனைகளை நிறைவேற்றக்கூடிய நபராக இப்போதுள்ள எந்தத் தலைவரையும் மக்கள் ஏற்கவில்லை என்பதுதான் நிதர்சனம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Kathir - Tamilnadu - Rajini

கதிர்

Advertisment

அத்தனை குழப்பங்களுக்கு மத்தியில் ஓர் ஆறுதலான விஷயம் புரிந்து கொள்ள முடிந்தது. இதற்கு முன் சந்தித்த பல சோதனைகளைப் போலவே இந்த நெருக்கடியும் கடந்து போகும் என்ற நம்பிக்கை பெரும்பாலான மக்களிடம் இருக்கிறது.

ஆட்சியில் இருந்தவர்கள் எவ்வளவு தவறு செய்தாலும் அரசு நிர்வாகத்தின் நிலைத்தன்மை தமிழ்நாட்டில் சிதையாமலே இருந்து வந்திருக்கிறது. மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது இங்கே ஸ்திரமற்ற சூழ்நிலை என்பது என்றைக்குமே ஏற்பட்டதில்லை என்று பெருமையுடன் சொல்லலாம்.

“சரியா கவனிச்சீங்கன்னா டிராபிக் போலீசே இல்லாத நாட்கள்ல நம்மூர் போக்குவரத்து ரொம்ப சீரா நடக்கும். வாகன ஓட்டிகள் சண்டை போட்டுக்கிறது இல்லை. சிக்னல் வேலை செய்யாம இருந்தாலும் அப்படித்தான். வழக்கமா சிவப்பு லைட் எரியும்போது கண்டுக்காம போற டிரைவர்கூட அப்ப வெயிட் பண்ணுவான். இது தமிழ்நாட்டு மக்கள் மனசுல ஊறிக் கிடக்கிற ஒழுங்குணர்வோட வெளிப்பாடு. ஒரு சில விதி விலக்குகள் இருந்தாலும் பொதுவான நிலை இதுதான்” என்று ஒரு முன்னாள் நீதிபதி விளக்கம் சொன்னார்.

அதை சுய கட்டுப்பாடு என்றும் சொல்லலாம். யாரும் சொல்லத் தேவையில்லாமல் நாமாகவே பின்பற்றும் ஒழுங்குமுறை. அதற்கு இப்போது வந்திருக்கும் ஆபத்தை சென்ற அத்தியாயங்களில் பார்த்தோம். இந்த நிலைமைக்கு அரசாங்கம் என்கிற ஒரு நிர்வாக அமைப்பே இல்லாமல் போய்விட்டது என்று மக்கள் மனதில் தோன்றியுள்ள எண்ணம்தான் இதற்கு காரணம்.

Kathir - Tamilnadu - Edapadi

எடப்பாடி பழனிசாமி அரசு என்னதான் பத்திரிகைகளில் முழுப் பக்க விளம்பரங்கள் வெளியிட்டு நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் அரசு முனைப்பாக இருப்பதாக காட்டிக் கொண்டாலும் மக்கள் அதை நம்பவில்லை. ஆளும் கட்சி மீது அவர்களுக்கு துளியும் நம்பிக்கை இல்லை.

பெரும் செலவு செய்து பிடித்திருக்கும் சட்டமன்ற உறுப்பினர் பதவியை பறிகொடுக்க எவரும் விரும்பவில்லை என்பதும், பதவி இருக்கும்போது முடிந்தவரை சம்பாதித்துவிட வேண்டும் என்று அவர்கள் துடிப்பதும் தெருத்தெருவாக மணியடித்து சைக்கிளில் ஐஸ்கிரீம் விற்கும் தொழிலாளிக்குக்கூட தெரிந்திருக்கிறது.

கூவத்தூர் நாடகத்தின் காட்சிகள் மக்களை அருவருப்பின் உச்சிக்கு கொண்டு சென்றிருக்கின்றன. டைம்ஸ் நவ் – மூன் டீவி ”அம்பலப்படுத்தியது” எல்லாம் அரதப் பழசான மேட்டர் என்கிறார்கள்.

சசிகலா மீது எழுந்த கோபமும் கொதிப்பும் எந்த ஊர் மக்களிடமும் அடங்கியதாகத் தெரியவில்லை. மன்னார்குடி உட்பட. “இருபது தலைமுறைக்கு சம்பாதித்தாகி விட்டது. சுருட்டிய சொத்துகளில் சிலதை விற்று அபராதம், வரியெல்லாம் கட்டிவிட்டு ஊரோடு செட்டிலாகிவிட வேண்டியதுதானே? அரசியலை விட்டு ஒதுங்கி இருந்தால் யார் கவனிக்கப் போகிறார்கள்? நாட்டைக் கொள்ளையடித்த கூட்டம் என்ற அவப்பெயரில் இருந்து அடுத்த தலைமுறையாவது விடுபடுமே” என்று அந்த ஊரிலேயே பேசுகிறார்கள்.

சசிகலா ஜெயிலில் இருந்தாலும், அக்கா மகன் தினகரன்தான் எடப்பாடி அரசை பின்னால் இருந்து இயக்குகிறார் என்று மக்கள் நம்புகிறார்கள். ஆச்சரியமாக நடராஜன் மீது யாருக்கும் கோபமில்லை. தினகரன் தலையீடு இல்லை என்று ஜெயகுமார் போன்ற அமைச்சர்கள் மூலம் பொதுக் கருத்தை திருத்த பழனிசாமி எடுக்கும் முயற்சிகள் பலன் தரவில்லை. அமைச்சர்களின் ஜாக்கிரதையான விளக்கங்களைவிட நாஞ்சில் சம்பத்தின் தினகரன் துதிதான் மக்கள் அரட்டையில் அதிகமாக மேற்கோள் காட்டப்படுகிறது.

Kathir - Tamilnadu - Sasikala

எடப்பாடியைவிட பன்னீர்செல்வம் மேல் அதிகம் பேருக்கு நல்லெண்ணம் இருக்கிறது. ஆனால் அதையும் தொண்டர்களிடம் தனக்கிருக்கும் ஆதரவையும் காட்டி தினகரன் பிடியில் இருந்து எந்த எம்.எல்.ஏ.வையும் இழுக்க முடியாததை அவரது பலவீனமாக மதிப்பிடுகிறார்கள். தீபாவை பெருத்தவரை ஜெயலலிதாவின் சொத்துகள் அவருக்கும் தம்பிக்கும் சேர வேண்டும் என்று விரும்புகிறார்களே தவிர அரசியல் வாரிசாக எவரும் கணக்கில் சேர்க்கவில்லை.

திமுகவை அடுத்த ஆளும் கட்சியாகவும் ஸ்டாலினை முதல்வராகவும் பார்க்கும் மனநிலை சொற்பமான மக்களிடம்தான் காணப்படுகிறது. திமுகவினர் மத்தியிலும்கூட தந்தையிடம் அரசியல் நுணுக்கங்களையும் சாகசங்களையும் கற்றுக் கொள்ளத் தவறிய மகனாக தளபதியை பார்ப்பவர்களே கணிசமாக தெரிகிறார்கள். சென்ற தேர்தலின்போது ஈகோ பார்க்காமல் சற்று விட்டுக் கொடுத்து விஜயகாந்தை கூட்டணிக்குள் இழுத்துப் போட்டிருந்தால் தமிழக அரசியலே வேறு திசையில் திரும்பியிருக்கும் என்று அவர்கள் முழுமையாக நம்புகிறார்கள்.

ஊடகங்கள் அதிகமாக எழுதவில்லை, விமர்சிக்கவில்லை என்றாலும் ஸ்டாலின் வேறு யாரையும்விட தன் மருமகன் சொல்லும் ஆலோசனைகளை பின்பற்றுகிறார் என்ற கருத்து திமுகவினர் பலருடைய மனதில் விதைக்கப்பட்டிருக்கிறது. அதிமுக ஆட்சியில் சசிகலா குடும்பம் ஆதிக்கம் செலுத்தியதை போல திமுக ஆட்சியில் அதைவிட மிகப்பெரிய கலைஞர் குடும்ப ஆதிக்கம் நிலவியதை யாரும் மறக்கவில்லை.

இளைஞர்களில் அநேகர் ஸ்டாலின் மேல் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். ஆனால், பழைய பாவங்கள் விடாமல் துரத்தும் என்ற வகையில் முந்தைய திமுக ஆட்சியில் அமைச்சர் முதல் கவுன்சிலர் வரை ஏதேனும் பதவி பெற்றவர்கள் நிகழ்த்திய அத்துமீறல்களை சுட்டிக் காட்டுபவர்களுக்கு அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை.

”கக்கூசை இடித்துக் கட்ட கல்லும் மணலும் சிமெண்டும் ஆர்டர் கொடுத்தேன். அட்ரசை விசாரித்துக் கொண்டு லாரி வந்த அடுத்த நிமிடம் கவுன்சிலரின் ஏஜன்ட் ஆஜர். பதினைந்தாயிரம் கறந்த பிறகுதான் லோடை கீழே கொட்ட விட்டார்கள். இதெல்லாம் இனிமேல் நடக்காது என்று உங்கள் செயல் தலைவர் உத்தரவாதம் தந்தால் உதயசூரியனுக்கு ஓட்டு போடுகிறேன். கேட்டு சொல்கிறாயா?” என்று நாலைந்து பேராக பேசிக் கொண்டிருக்கும்போது ஒரு உடன்பிறப்புக்கு சவால் விட்டார் டாக்டர் ஒருவர்.

Kathir - Tamilnadu - Mk stalinஅறநிலையத்துறையின் கீழ் கோயில்களை நிர்வகிக்க நியமிக்கப்பட்ட அறங்காவலர்கள் வரைமுறை இல்லாமல் முறைகேடுகள் செய்து கோயில் சொத்துகளை பாழடித்த கதைகள் ஊருக்கு ஊர் பேசப்படுகிறது. ஜெயலலிதா அரசின் பல பாவங்கள் கோயில்கள் நிர்வாகத்தில் அவர் காட்டிய அக்கறையால் மறக்கப்பட்ட விசித்திரத்தையும் கண்டோம்.

ஜெயலலிதாவா கலைஞரா என்ற சிம்பிளான கேள்வி மட்டுமே ஒவ்வொரு தேர்தலிலும் முன்வைக்கப்பட்ட வரையில் இதுபோன்ற தனித்தனியான பிரச்னைகள் பெரிதாக விவாதத்துக்கு வரவில்லை. இப்போதுதான் மக்கள் பழைய நினைவுகளைக் கிளறி ஒவ்வொன்றாக வெளியே எடுத்துப் போட்டு எடை பார்க்கிறார்கள். இரண்டு ஜாம்பவான்களைத் தாண்டி தமிழ்நாட்டை ஆள யாருக்கு தகுதி இருக்கிறது என்ற தேடலே இப்போதுதான் பிறந்திருக்கிறது.

ஆனால்கூட மற்ற கட்சிகள் பற்றி கட்சி சார்பற்றவர்கள் எதுவும் பேசவில்லை.

கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பில் சட்டப் பேரவைக்கு பத்து பிரதிநிதிகளாவது சென்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்ற கருத்து தொழிலாளர்கள் அதிகம் வாழும் நகரங்களில் வெளிப்பட்டது. பெரிய நன்மைகள் ஏதும் இல்லாவிட்டாலும் தங்கள் பிரச்னைகள் சபையின் மூலம் பொதுமக்களின் கவனத்தையாவது எட்டியிருக்கும் என்ற ஆதங்கம் அவர்கள் மத்தியில் தெரிந்தது.

காங்கிரசை பொருத்தவரை தமிழ் சினிமாவில் ரங்காராவ், பூர்ணம் விசுவநாதன், சரத்பாபு போன்றவர்களுக்கு என்ன மரியாதையோ அது இருக்கிறது. தவிர்க்க முடியாத ஆனால் முக்கியமல்லாத கட்சியாக பார்க்கிறார்கள். அது வளர்ந்தால் நல்லதுதான்; ஆனால் அதற்கு எங்களால் உதவ இயலாது என்ற ரீதியில் பேசுகிறார்கள்.

தமிழ்நாட்டை பாதிக்கும் எந்தப் பிரச்னையாக இருந்தாலும் தெளிவான ஒரு நிலை எடுத்து கருத்துகளை தெரிவிக்கும் ஒரே தலைவர் என்று டாக்டர் ராமதாசுக்கு நல்ல இமேஜ் இருக்கிறது. ஆனால், வன்னியர் சங்கத்தில் இருந்து உருவான பின்னணி, அதைத் தாண்டி எல்லோருக்குமான ஒரு பொதுவான கட்சியாக பாமகவை பார்க்க விடவில்லை. வடக்கே திருமாவளவன் மேலும் தெற்கே டாக்டர் கிருஷ்ணசாமி மீதும் தலித் அல்லாதவர்கள் கொண்டிருக்கும் அபிப்பிராயமும் ஏறத்தாழ அதே விகிதத்தில் இருக்கிறது.

“முஸ்லிம்கள் நலனை பாதுகாக்க என்று எப்படி முஸ்லிம் லீக் கட்சியை தொடங்கினார்களோ அதே மாதிரி வன்னியர்களுக்காக பாமகவும், தலித்களுக்காக விடுதலை சிறுத்தை, புதிய தமிழகம் போன்ற கட்சிகளும் உதித்துள்ளன. அவர்களின் நோக்கத்தை எந்த வகையிலும் குறை சொல்ல முடியாது. ஆனால் அந்தந்த பிரிவினரை தவிர மற்றவர்கள் அக்கட்சிகளுக்கு ஆதரவு தருவார்கள் என்று எதிர்பார்த்தால் அது ஏமாற்றத்தில்தான் முடியும். ஒரு இந்துவோ கிறிஸ்துவரோ முஸ்லிம் லீகில் சேர்வார்களா? அப்படித்தான். தேர்தல் வரும்போது பொதுவான கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதன் மூலமாகத்தான் இந்தக் கட்சிகள் வளர்ச்சி அடைய முடியும்” என்று என் அபிமானத்துக்குரிய முன்னாள் பேராசிரியர் ஒரு பார்வையை பகிர்ந்து கொண்டார்.

அவரது மதிப்பீடை இன்னும் விஸ்தரித்தால் தேசியக் கட்சியான பாரதிய ஜனதாவும் இந்து லீக் என்கிற வட்டத்துக்குள்தான் அடைபடும்.

ஆனாலும் இன்று அது இந்தியாவின் ஆளும் கட்சியாக வந்திருக்கிறது.

Kathir - Tamilnadu - OPS

தமிழ்நாட்டில் அதிகாரத்தைக் கைப்பற்றும் அதன் முயற்சி பலிக்குமா?

பலிக்காது, முடியாது, சான்சே இல்லை என்று சட்டென பதில் சொல்லிக் கொண்டிருந்தவர்கள் இன்று உதடு பிரிக்கத் தயங்குகிறார்கள். நீண்ட யோசனைக்குப் பிறகு, “இந்த நாட்டில் எதையுமே சாத்தியமில்லை என்று சொல்லிவிட முடியாது..” என்று சுற்றி வளைத்து பதில் சொன்னார்கள். அவர்களின் குரலில் குதூகலம் இல்லை. கண்களில் கலவரம் தெரிந்தது.

எவ்வளவு பெரிய கட்டமைப்பு இருந்தாலும் கட்சிகளைவிட மனிதர்களைதான் மக்கள் நம்புகிறார்கள். ஆதியில் ஒரு காமராஜர். அடுத்து அண்ணா. அவர் போனதும் கருணாநிதி. பின்னர் எம்ஜிஆர். தொடர்ந்து ஜெயலலிதா.

அவர் சென்றபின்…

இதுவரை எவரும் இல்லை.

அரசியலில் ஊறிய ஒருவர்தான் அரியணையில் அமர வேண்டும் என்று தமிழர்கள் என்றுமே விரும்பியதில்லை.

படித்து பட்டம் வாங்கிய அறிஞர்தான் ஆள வேண்டும் என மக்கள் எதிர்பார்த்தது இல்லை.

வேறு என்னதான் எதிர்பார்க்கிறார்கள்?

”நாட்டுக்கு நல்லது செய்ய வேண்டும். எல்லோரும் வாழ்க்கையில் உயர உதவ வேண்டும். வாய்ப்பு இல்லாதவர்களையும் வாய்ப்பு மறுக்கப்படுபவர்களையும் கூடுதல் கவனத்துடன் கைதூக்கி விட வேண்டும். அரசு நிர்வாகம் ஒளிவு மறைவு இல்லாமல் வெளிப்படையாக நடைபெற வேண்டும். முறைகேடுகளை தவிர்க்க சிஸ்டத்தை பலப்படுத்த வேண்டும். நீதி நிர்வாகத்தில் பாரபட்சம் கூடாது. ஊழலுக்கு இடமளிக்கக் கூடாது. சொத்து சேர்க்கும் ஆசையுள்ள எவரையும் அருகில் வர அனுமதிக்கக் கூடாது. கொடுத்த வாக்கை மீறக் கூடாது. அடுத்த தேர்தலில் தோல்வி நிச்சயம் என்று தெரிந்தாலும், தேர்ந்தெடுத்த பாதையில் சலனம் இல்லாமல் பயணம் செய்ய வேண்டும்”.

இதுதான் நாம் சேகரித்தவரை மக்களின் எதிர்பார்ப்புகள். இந்த நிபந்தனைகளை நிறைவேற்றக்கூடிய நபராக இப்போதுள்ள எந்தத் தலைவரையும் மக்கள் ஏற்கவில்லை என்பதுதான் நிதர்சனம்.

அதை உணர்ந்தபின் இந்தக் கேள்வியை தவிர்க்க இயலவில்லை:

”ஒருவேளை ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் இதையெல்லாம் பூர்த்தி செய்வார் என்று நம்புகிறீர்களா?”

இது சர்வே அல்ல. முறைப்படி நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பும் கிடையாது.

கேள்விக்கு பதில் சொன்னவர்களின் எண்ணிக்கை உண்மையில் ஆயிரத்தை தொடவில்லை. ஆனால் பதிலளித்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரகம். வெவ்வேறு பின்னணி.

“இல்லை” என்று சொன்னவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.

“ஆமாம்” என்றவர்களின் குரலில் தெறித்த நம்பிக்கை அதிர வைத்தது.

அடடா. சாத்திரங்கள் உயிர்த்தெழும் சாத்தியமும் இருக்கிறதோ?

ஆண்டவன் கட்டளையிடட்டும்.

நிறைவு.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment