Advertisment

டிடிவி தினகரன், மன்னார்குடி குடும்பத்தின் முதல் எம்.எல்.ஏ. : சசிகலா எதிர்ப்பு அலையை மீறி ஜெயித்த கதை

டிடிவி.தினகரன், மன்னார்குடி குடும்பத்தின் முதல் எம்.எல்.ஏ.வாக சட்டமன்றம் செல்கிறார். அவரது வெற்றிக்கு பணபலத்தை கடந்த சில காரணங்களும் இருக்கின்றன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
TTV Dhinakaran, RK Nagar, RK Nagar By-Election Result, AIADMK

TTV Dhinakaran, RK Nagar, RK Nagar By-Election Result, AIADMK

ச.செல்வராஜ்

Advertisment

டிடிவி.தினகரன், மன்னார்குடி குடும்பத்தின் முதல் எம்.எல்.ஏ.வாக சட்டமன்றம் செல்கிறார். அவரது வெற்றிக்கு பணபலத்தை கடந்த சில காரணங்களும் இருக்கின்றன.

டி.டி.வி.தினகரன், மிக நெருக்கடியான காலகட்டத்தில் அதிமுக.வின் துணைப் பொதுச்செயலாளராக சசிகலாவால் நியமனம் செய்யப்பட்டார். சசிகலா படம் தாங்கிய சுவரொட்டியை தமிழகத்தில் எங்கும் ஒட்ட முடியாத சூழல் நிலவிய காலகட்டம் அது! ஜெயலலிதா மரணத்திற்கு காரணமாக சசிகலாவை குறிப்பிட்டு, பெரும் எதிர்ப்பு அப்போது களத்தில் நிலவியது.

டி.டி.வி.தினகரனுக்கு கட்சியின் கட்டுக்கோப்பை காப்பாற்றுவதைவிட, களத்தில் நிலவிய சசிகலா எதிர்ப்பை சமாளிக்கும் பொறுப்பும் இருந்தது. அந்தச் சூழலில்தான் கடந்த ஏப்ரலில் நடைபெறுவதாக இருந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தன்னையே வேட்பாளராக முன்னிறுத்தினார் டிடிவி தினகரன்.

விஜயபாஸ்கருக்கு ஒரு நீதி...

ஓபிஎஸ்.ஸுக்கு ஒரு நீதி..!

டிடிவி தினகரனின் அந்த முடிவை அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்பட பலரும் விரும்பவில்லை. ஆனாலும் வேறு வழியில்லாமல் எடப்பாடி பழனிசாமியும் அவரது அமைச்சரவை சகாக்களும் பிரசாரம் செய்தனர். ஆர்.கே.நகர் தேர்தல் களத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட தனது தீவிர ஆதரவு அமைச்சர்களை தினகரன் அப்போது முழுமையாக களத்தில் இறக்கி விட்டார்.

டி.டி.வி.தினகரனை குறி வைத்து அப்போது மத்திய அரசு தரப்பில் சில நடவடிக்கைகளை முடுக்கி விட்டனர். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு நடத்தி, பண வினியோக ஆதாரங்களை எடுத்தனர். அதில் எடப்பாடி மற்றும் சீனியர் அமைச்சர்கள் பலரது பெயர்களும் இருந்தன. அதோடு மத்திய அரசுக்கு கட்டுப்பட வேண்டிய கட்டாயத்திற்கு எடப்பாடி தரப்பு வந்துவிட்டது.

விஜயபாஸ்கர் வீட்டில் கைப்பற்றப்பட்ட அந்த ஆவணங்கள் அடிப்படையிலேயே அப்போது இடைத்தேர்தல் நிறுத்தப்பட்டது. ஆனால் அதன்பிறகு அந்த ஆவணங்கள் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சேகர் ரெட்டி டைரிக் குறிப்புகள் வெளியாகி சந்தி சிரித்தன. அது தொடர்பாகவும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட யார் மீதும் நடவடிக்கை இல்லை.

பாரபட்சமான

இரட்டை இலை பஞ்சாயத்து!

டிடிவி தினகரன் - சசிகலா தரப்பினர் மெஜாரிட்டி எம்.எல்.ஏ.க்கள், மெஜாரிட்டி எம்.பி.க்கள், மெஜாரிட்டி நிர்வாகிகள் பட்டியலைக் காட்டியபோதும், கடந்த மார்ச்சில் இரட்டை இலையை முடக்கியது இந்திய தேர்தல் ஆணையம். ஆனால் அதே அளவுகோலை அடிப்படையாக வைத்து, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிப்புக்கு முந்தைய நாள் இபிஎஸ். - ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலையை வழங்கியது.

டிடிவி தினகரனுக்காக 89 கோடி பட்டுவாடாவுக்கு ஐ.டி. ரெய்டு, தேர்தல் நிறுத்தம் என ‘களமாடிய’ தேர்தல் ஆணையம், இந்த முறை 120 கோடி ரூபாய் வினியோகம் செய்ததாக அதே ஆளும்கட்சி மீது புகார் வந்தும் கண்டு கொள்ளவில்லை. ஐ.ஐ. ரெய்டும் நடக்கவில்லை. சசிகலா குடும்பத்தின் மீது தமிழக மக்கள் மத்தியில் இருக்கும் அதிருப்தி காரணமாக, ‘எவ்வளவு அடித்தாலும் மக்கள் ரசிக்கவே செய்வார்கள்’ என மத்திய அரசு நினைத்திருக்கலாம்.

சசிகலா குடும்பம் மீது மத்திய அரசு நடத்திய ரெய்டுகளை மக்கள் ரசித்தார்கள் என்றே எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அதே மத்திய அரசு, இபிஎஸ்-ஓபிஎஸ் தரப்பு மீது எந்த நடவடிக்கை எடுக்காததையும் மக்கள் உன்னிப்பாக கவனித்தார்கள். பிரதமரின் விழியசைவுக்கு ஏற்ப இபிஎஸ்.ஸும், ஓபிஎஸ்.ஸும் சுழல்வதையும் மக்கள் பார்த்தார்கள்.

டெல்லியின் அடிமைகள்

என்கிற விமர்சனம்

நீட் தேர்வு முதல் எந்தப் பிரச்னையிலும் தமிழகத்தின் உரிமைக்காக இவர்களால் குரல் எழுப்ப முடியாத நிலைமையை பார்த்தார்கள். மத்திய அரசின் அடிமையாக இவர்கள் இயங்குவதாக எதிர்க்கட்சிகள் செய்த விமர்சனம் தாக்கத்தை உருவாக்கியது.

அதேசமயம் டிடிவி தினகரன், திகார் சிறையை எதிர்கொண்டார். இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக அவரை திகார் சிறையில் தூக்கிப் போட்ட டெல்லி போலீஸ், அந்த வழக்கில் நீதிமன்ற கண்டனத்திற்கு பிறகே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதுவும் தவிர, லஞ்சம் வாங்க முயன்ற தேர்தல் ஆணைய அதிகாரி யார்? என்பதை அந்த வழக்கில் கடைசி வரை டெல்லி போலீஸ் கூறவில்லை. இந்திய வரலாற்றில் அரசு ஊழியர் ஒருவர்கூட இடம்பெறாத முதல் ஊழல் வழக்கு இதுதான்! இதெல்லாம் அந்த வழக்கில் உண்மைத்தன்மை இல்லை என்பதை உலகுக்கு உணர்த்த ஆரம்பித்தது.

திகார் சிறைக்கு போய்விட்டு வந்த தினகரன், அதன்பிறகாவது அரசியலை விட்டு ஒதுங்குவார் என டெல்லி மேலிட எதிர்பார்த்தது. ஆனால் அவரோ இன்னும் வேகமானார். சசிகலாவால் முதல்வர் ஆக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி, சசிகலாவையும் தினகரனையும் கட்சியை விட்டு நீக்கத் துணை போனார். இதை துரோகமாக் டிடிவி தினகரன் விமர்சித்தார்.

‘அன்பு மகள் அனிதா’

மத்திய அரசு தரப்பிலிருந்து கொடுக்கப்பட்ட அத்தனை நெருக்கடிகளிலும் எழுந்து நின்றார். நீட் கொடுமையால் அரியலூர் அனிதா பலியான போது, அமைச்சர்கள் யாரும் அந்தப் பக்கம் எட்டிப் பார்க்க முடியவில்லை. முதல்வர் அறிவித்த நிவாரண நிதியை பெற அந்தக் குடும்பம் மறுத்தது. ஆனால், ‘அன்பு மகள் அனிதா’ என அழைத்து அந்த இறுக்கமான சூழலில் நெகிழ்வை உருவாக்கினார் டிடிவி தினகரன். தொல்.திருமாவளவன் உதவியுடன் அனிதா குடும்பத்தை சந்தித்து, பெரும் தொகையை நிவாரணமாக வழங்கினார்.

மொத்த அமைச்சர்கள், மெஜாரிட்டி கட்சி நிர்வாகிகள், கட்சி அலுவலகம், சின்னம் பறிபோன பிறகும் தளராமல் மாநிலம் முழுவதும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். சுதந்திர இந்தியா காணாத அளவுக்கு 1800 அதிகாரிகளைக் கொண்ட வருமான வரித்துறையின் பெரும் படையை இறக்கி ரெய்டு நடத்தியது மத்திய அரசு. சசிகலா குடும்பத்தினர் , உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரின் வீடுகள், அலுவலகங்கள் என சுமார் 200 இடங்களில் ரெய்டு நடத்தியபோதும், உருப்படியாக எதையும் கைப்பற்றவில்லை வருமான வரித்துறை.

இந்தச் சோதனைகளை டிடிவி எதிர்கொண்ட விதமும் இங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. கிடைத்த நேரத்தில் எல்லாம் ‘கூலாக’ மீடியாவை சந்தித்தார். ‘என்னை 25 ஆண்டுகள் சிறையில் போட்டாலும், திரும்ப வந்து பாஜக.வை தமிழகத்தில் காலூன்ற விடமாட்டேன்’ என சபதம் செய்தார். ஆரம்ப கட்டத்தில் இவரும் பாஜக.வுடன் இணக்கத்தை பேண விரும்பியது நிஜம்தான் என்றாலும், தொடர்ந்து விழுந்த அடிகளுக்கு பிறகும் நிமிர்ந்து நின்றதுதான் முக்கியத்துவம் பெற்றது.

வெற்றிடத்தை பிடித்த தினகரன்!

சரியாக இந்தச் சூழலில் ஜெயலலிதா, கருணாநிதி என இரு பெரும் ஆளுமைகள் களத்தில் இல்லாத வெற்றிடத்தை தமிழகம் உணர்ந்தது. அப்போது சகலகலா வல்லவராக டிடிவி தினகரனை பார்க்க ஆரம்பித்தனர். குறிப்பாக சமூக வலைதளங்களில் டிடிவி தினகரனை திமுக.வினரே பெருமளவில் புகழ்ந்தனர்.

இந்தச் சூழலில்தான் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் மீண்டும் வந்தது. கட்சி, சின்னம், ஆட்சி இல்லாத சூழலில் அவர் வேறு யாரையாவது தனது சார்பில் நிறுத்துவார் என்றுதான் ஆளும்கட்சியும் எதிர்க்கட்சியும் நினைத்தன. ஆனால் இந்த முறையும் அவரே வேட்பாளரானார். அப்போது டிடிவி ஆதரவாளர்களே அவரது முடிவை, ‘அசட்டுத் துணிச்சல்’ என்றுதான் வர்ணித்தனர்.

ஆனால் ஆர்.கே.நகரில் திட்டமிட்ட பிரசாரத்தால், களத்தை தனக்கு சாதகமாக கொண்டு வந்தார். கடந்த நான்கைந்து மாதங்களில் தமிழக அரசியல் களத்தில் அவரது தன்னம்பிக்கையான செயல்பாடுகள், மீடியாவை அவர் சந்திக்கும் விதம், பொதுமக்கள் மத்தியில் அவரது அணுகுமுறை இவை அனைத்தும் சசிகலா எதிர்ப்பு என்கிற அம்சத்தையும் தாண்டி டிடிவி தினகரனை மேலே கொண்டு வந்திருக்கிறது. அதாவது, ‘மைனஸ்’ என்கிற நிலையில் இருந்து தனது அரசியல் பயணத்தை கொஞ்சம் கொஞ்சமாக மேலே தூக்கி நிறுத்தியிருக்கிறார் தினகரன்.

வெற்றிவேல் வெளியிட்ட

வீடியோ அஸ்திரம்!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இவரது தரப்பு பணப் பட்டுவாடா நடத்திவிடக் கூடாது என அத்தனை கண்காணிப்புகள்! ஆனால் ஆளும்கட்சி மிக சுலபமாக ஓட்டுக்கு 6000 ரூபாயை வினியோகம் செய்தது. இதையும் மக்கள் மத்தியிலேயே பிரசாரம் செய்தனர் டிடிவி அணியினர். பிரமாஸ்திரமாக தேர்தலுக்கு முந்தைய நாள் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வீடியோவை வெளியிட்டனர்.

அந்த வீடியோவை கண்டு கொள்ளாமல் ஆளும் தரப்பு விட்டிருக்கலாம். அல்லது கே.பி.முனுசாமி சொன்னதைப் போல, ‘அது போலி வீடியோ’ என ஒரு ‘பிட்’டை போட்டுவிட்டு அதைப் பற்றி பேசுவதை தவிர்த்திருக்கலாம். ஆனால் இவர்கள் அதை வெளியிட மீடியாவுக்கு தடை, வெளியிட்ட வெற்றிவேல் மீது வழக்குப் பதிவு என ஏக ரகளையாக்கினார்கள். ‘நீங்கள் மட்டும் ஜெயலலிதா மரணத்திற்கு காரணம் சசிகலாதான் என பிட் நோட்டீஸ் அடித்து வினியோகம் செய்யலாம். பதிலுக்கு நாங்கள் உண்மையான வீடியோவை வெளியிடக் கூடாதா?’ என வெற்றிவேல் எழுப்பிய கேள்விக்கு ஆளும் தரப்பிடம் பதில் இல்லை.

இப்படி ஊரையே அந்த வீடியோ பற்றி பேச வைத்துவிட்டு அன்று இரவு, ஆர்.கே.நகர் தொகுதிக்குள் பணப் பட்டுவாடாவை டிடிவி தரப்பு நடத்திவிட்டதாக ஒரு தரப்பும், தலா 20 ரூபாய் நோட்டுகளை மட்டும் அடையாளத்திற்கு கொடுத்துவிட்டு ஒரு பெரும் தொகையை பின்னர் தருவதாக வாக்குறுதி கொடுக்கப்பட்டிருப்பதாக இன்னொரு தரப்பும் கூறுகிறார்கள்.

டிடிவி தரப்பு பணம் வினியோகிக்கவே இல்லை என கூற முடியாது. கடந்த முறை அமைச்சர்கள் மூலமாக சப்ளை ஆன ஓட்டுக்கு 4000 ரூபாயை இவரது கணக்கிலேயே வாக்காளர்கள் எடுத்துக் கொண்டதாக ஒரு கருத்தும் இருக்கிறது. அதையும் தாண்டி, சோதனைகளை அவர் எதிர்கொண்ட விதம், மக்களை அவர் அணுகும் விதம் வெற்றி பெற்றிருக்கிறது என்பதை ஏற்கத்தான் வேண்டும். மன்னார்குடி குடும்பத்தை தமிழக அரசியலில் இனி ஏற்கவே மாட்டார்கள் என்கிற விமர்சனத்தை மீறி, அந்தக் குடும்பத்தின் முதல் எம்.எல்.ஏ.வாக தமிழக சட்டமன்றம் நுழைகிறார் டிடிவி தினகரன்.

 

Ttv Dhinakaran Rk Nagar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment