“தமிழக பட்ஜெட் 2018-19” : காட்டும் திசை என்ன?

ஏழைகளுக்கு 3 லட்சம் இலவச வீட்டு மனைகள் வழங்கப்படும் திட்டத்துக்கு, முதன்முறையாக, தனியார் நிலம் கையகப்படுத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

By: March 16, 2018, 9:52:18 AM

ஆர். சந்திரன்

அம்மா இல்லாத அதிமுகவின் 2வது பட்ஜெட்…., ஜிஎஸ்டி வரி அமலாக்கத்துக்கு பிறகான முதல் பட்ஜெட் என, 2018-19ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் பற்றி – பல கருத்துகள் சொல்லப்பட்டாலும், இது, மற்ற பட்ஜெட்களில் இருந்து எப்படி மாறுபட்டிருக்கிறதா என்பதும், மாறி இருந்தால்… எந்த விதத்தில் என்பதும்தான் முக்கியம்.

நிதித்துறை பொறுப்பு வகிக்கும் துணை முதல்வரான ஓ பன்னீர்செல்வத்தால், இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் உள்ளடக்கத்தில் எவ்வளவு மாறியிருக்கிறது என்பது குறித்த கேள்விகள் தொடரலாம்…

ஆனால், பட்ஜெட்டின் முக்கிய அம்சங்களை முடித்தபின் – இறுதியில் அவர் வைத்த அரசியல் விமர்சனம்தான், அவரது உரையின் முக்கிய ஹைலைட் என்பதில் சந்தேகம் இல்லை.

தமிழகத்தில் காலூன்ற நினைக்கும் பாரதிய ஜனதா கட்சி, தனது நோக்கத்திற்கு – ஊறுகாயாக, அதிமுகவைப் பயன்படுத்திக் கொண்டிருப்பதாக வலுவான விமர்சனம் – தமிழக ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும்,… ஏன் மக்களிடையேயும் வலுவாக இருந்த நாட்கள் உண்டு. ஆனால், அந்த நிலை தற்போது மாறியுள்ளது. மாற்றம் என்னவென்றால், இனி ஓபிஎஸ்…. ஈபிஎஸ்…. போன்ற “பாளையக்கரர்”களை நம்பி பயன் இல்லை என்ற முடிவுக்கு பாஜக வந்துவிட்டது எனச் சொல்லப்படுவதுதான். அதனால், ஒட்டுமொத்தமாக, எல்லா திராவிட கட்சிகளையும்…, தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளில் நிலவிய ஒட்டுமொத்த அரசியலையும் பழிக்கும் விதமாக – “இந்த காலத்தில்தான் தமிழகத்தில் ஊழல் பெருகியது…. வளர்ச்சி முடங்கியது’ என விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. அத்தகைய விமர்சனங்களின் வீச்சு பெருகி வரும் நிலையில், துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், தனது பட்ஜெட் உரையின் இறுதியில் இந்த அரசியல் விமர்சனங்களுக்கு, பொருளாதாரம் சார்ந்த பதில் அளித்துள்ளார்.

மோடி தலைமையிலான, மத்திய பாஜக அரசு உருவாக்கிய ‘நிதி ஆயுக்’ என்ற அமைப்பு தந்த புள்ளிவிவரங்களையே இதற்கு ஆதாரமாக ஓபிஎஸ் முன்வைத்துள்ளார். மற்ற எந்த வட மாநிலங்களை விடவும்…, தேசிய சராசரியைவிடவும், தமிழகம் – பல பொருளாதார காரணிகளில் பின்தங்கி விடவில்லை என்பதோடு, ஒப்பீட்டளவில் முன்னிலையில்தான் உள்ளது என்ற அவரது வாதம் ஒருபக்கம் இருக்க….

இந்த 50 ஆண்டுகாலத்தில் – அடுத்தடுத்த மத்திய அரசுகளில் பேராண்மை பெற்றிருந்த கட்சிகள் – அது காங்கிரஸ் கட்சியானாலும், பாரதிய ஜனதாவானாலும், பிற வட மாநிலங்களையோ, தென்னகத்தில் கர்நாடகம், ஒருங்கிணைந்த ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களையோ முன்னெடுக்கக் காட்டிய ஆர்வத்தை… அவற்றுக்கு தந்த முக்கியத்துவத்தை…. தமிழகத்துக்கு தரவில்லை என்பதோடு…, தொடர்ந்து வந்த மைய அரசுகளின் புறக்கணிப்பையும் சமாளித்துதான் தமிழ்நாடும், அதன் மாநில அரசும்… மக்களும் சேர்ந்து – இந்த முன்னிலையைப் பெற்றுள்ளனர் என வலுவான வாதங்களை முன்வைத்தது சாதாரண விஷயம் அல்ல.

அரசியல் ரீதியாக கட்சி மேடைகளில் தரவேண்டிய பதிலை, பட்ஜெட் உரையுடன் சேர்த்து, சட்டமன்றத்தில் ஓபிஎஸ் வழங்கியிருப்பது, இந்த பட்ஜெட் உரையின் முக்கிய அம்சம். இந்த விஷயம், முதல்வரின் ஒப்புதல் இல்லாமல் நடந்திருக்காது என்பது தெளிவு. அந்த வகையில் தங்களை கைவிட்ட நபர்களுக்கு, தங்களது பதிலைச் சொல்ல, தற்போதைய அதிமுக அரசு இந்த பட்ஜெட் உரையைப் பயன்படுத்தியிருக்கிறது. ஆனால், மறுபுறம் அரசியல் ரீதியாக களத்தில் உள்ள விமர்சகர்களைச் சந்திக்க தேவையான உள்ளடக்கம் இந்த பட்ஜெட்டில் இருக்கிறதா என்ற கேள்வியும் எழத்தான் செய்கிறது.

வரும் ஆண்டுக்கான பட்ஜெட்டில் வருவாய் பற்றாக்குறை (அரசின் நேரடி வருவாய்க்கும், மொத்த செலவுக்குமான வேறுபாடு) 17,491 கோடி ரூபாயாகவும், மாநிலத்தின் ஒட்டுமொத்த பற்றாக்குறை 44,481 கோடியாகவும் கணிக்கப்பட்டுள்ளது. இந்த பற்றாக்குறை அளவு, மாநிலத்தின் மொத்த வருவாயில் அனுமதிக்கப்பட்ட 3 சதவீதத்துக்கும் குறைவாக… அதாவது 2.79%தான் என்பது ஒரு ஆறுதல். அதேபோல, மாநிலத்தின் ஒட்டுமொத்த கடன் அளவு என்பதும் அனுமதிக்கப்பட்ட 25 சதவீதம் என்பதற்கும் குறைவாக, 22.37 சதவீதம் அளவுக்காகவே இருக்கும் என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். மோடி தலைமையிலான பாஜகவைத் திருப்திபடுத்த வேண்டும் என்பதற்காகவே, ஜெயலலிதா கையாண்ட பல முக்கிய முடிவுகளில் தங்களது நிலையை காற்றில் கரையவிட்ட இந்த அரசு – இன்னும் தொடர்ந்து தங்களை அம்மாவின் அரசு என எந்த அடிப்படையில் சொல்லிக் கொள்கிறார்களோ என்ற கேள்வி எழுந்தாலும் – மாநில அரசின் பட்ஜெட் புள்ளிவிவரங்கள் அனுமதிக்கப்பட்ட வரம்பைத் தாண்டாமல் பார்த்துக் கொள்வதில், “இது அம்மாவின் அரசுதான்” என்பதை உறுதிப்படுத்தியிருப்பதாகச் சொல்லலாம்.

ஆனால், இதுவும் கூட நிதியாண்டு இறுதியில்…. அதாவது அடுத்த நிதியாண்டு தொடக்கத்தில் – 2018-19க்கான திருத்திய பட்ஜெட் புள்ளிவிவரத்தின்போதுதான் உறுதியாகும். காரணம் – நிதியமைச்சரும், துணை முதல்வருமான ஓபிஎஸ் சொல்வது போல, மாநில அரசு ஊழியர்களுக்கான 7வது சம்பளக் குழுவின் திருத்திய ஊதிய அமலாக்கம் மற்றும் உதய் திட்டத்தின் பளு இரண்டையும் ஏற்றுக் கொள்வதால், மாநில அரசின் வருவாய் வரும் ஆண்டில் எதிர்பார்த்த அளவுக்கு அதிகரிக்காமல் போனால் (ஜிஎஸ்டி அமலாக்கத்துக்குப் பின்) சிக்கல் வரும்.

தமிழக சட்டமன்றத்தில் இன்று தாக்கலான பட்ஜெட் தயாரிக்கப்பட்டபோது மட்டுமல்ல; இன்று சட்டமன்றத்தில் அது தாக்கலான நேரத்திலும் ஓபிஎஸ் கடும் சவாலை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஆம்.

கடுமையான சளி, ஜலதோஷம் மற்றும் தொடர்புள்ள தொல்லைகள் அவரைப் படுத்தின. அதனால், உரையின் இடையிடையே பல அசௌகரியங்களை ஓபிஎஸ் சந்திக்க நேர்ந்தது. 3 மணிநேரம் வரை

பட்ஜெட் உரையை தொடர்ந்து படிக்க வேண்டியிருக்கும் என்பது முன்னதாகவே தெரிவதால், இதுபோன்ற கடும் உடல்நல பாதிப்பு உள்ள நேரத்தில், நிதியமைச்சர் பொறுப்பில் உள்ளவரின் முன்னிலையில் வேறு யாராவது உரையைப் படிக்க அனுமதிக்கலாம். அதற்கு ஒரு வழி காண வேண்டும் எனத் தோன்றுகிறது. இது – இன்று ஓபிஎஸ்க்கு மட்டும் நேர்த்த பிரச்னை அல்ல. இரண்டு ஆண்டுகளுக்குமுன் நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்ய வந்த நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கும் ஏற்பட்டிருக்கிறது. அவருக்கு – அப்போது… சுவாசம் மற்றும் ரத்த அழுத்தம் தொடர்பான பிரச்னை என்றார்கள். அதனால், தனது உரையைப் பாதியில் நிறுத்திவிட்டு, சிறிது நேரம் ஓய்வெடுக்கவே ஜெட்லி அனுமதிக்கப்பட்டார். இதுபோன்ற பிரச்னைகள், தற்காலிகமானதுதான் என்றாலும், அந்த அரைநாள் சம்பவத்தின்போது ‘கதாநாயகன்” உடல்தகுதியுடன் இல்லாதபோது, சினிமாவில் செய்வது போல, டூப் ஒருவரை, மாற்று ஏற்பாடு செய்வது குறித்து யோசிக்க வேண்டும். நிதியமைச்சர்களும், மனிதர்கள்தானே…!

அடுத்து பட்ஜெட் அறிவிப்பில் இடம்பெற்ற பல்வேறு முக்கிய அம்சங்களுக்கு நகர்வோம்.

அரசிடமிருந்து மாநில மக்கள் பெறும் பல்வேறு சேவைகளை ஒரே இடத்தில் வழங்கிட மின்னணு தொழில்நுட்ப வசதியுடன் உருவாக்கப்பட்ட இ சேவை மையங்கள் அடுத்த 3 ஆண்டுகளில் மேலும் 900 எண்ணிக்கையில் அதிகரிக்கப்படும் என்பது மட்டுமின்றி, ‘ஒருங்கிணைந்த மக்கள் இணையதளம்’ ஒன்று உருவாக்கப்படும் என்ற பட்ஜெட் அறிவிப்பும் கவனத்தை ஈர்ப்பதாக உள்ளது. மேலும், ஒரு சில அரசு கோப்புகளில் சாமானிய மக்களே தங்களது சுய தகவல்களை மாற்றம் செய்ய அனுமதிக்கப்படுவர் எனவும் கூறப்பட்டுள்ளது. மறுபுறம், இதுபோன்ற வசதிகள் தடையின்றியும், தாமதிக்காமலும் கிடைக்க தேவையான – பிராட் பேண்ட் இணைய வசதிக்கு, மாநிலத்தில் ஏற்கனவே உள்ளது போக, மேலும் பல பகுதிகளுக்கு கண்ணாடி இழை குழாய் மூலமான தகவல் பரிமாற்ற வசதி செய்யப்படும் என்றும் இந்த பட்ஜெட்டில் அறிவிப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது. இன்று அரசிடம் சாமானியர்கள் பெற வேண்டிய சேவைகள் பலவும் ஊழல் மயமாகி, காசு தராமல் எந்த அலுவலகத்திலும் எந்த பணியும் நடக்காது என்று சொல்லப்படும் நிலைக்கு தீர்வு காண உதவும் முதல்படியாக இந்த முயற்சியைப் பார்க்க வேண்டியுள்ளது. ஏற்கனவே மத்திய அரசு மேற்கொள்ளும் டிஜிட்டல் இந்தியா திட்ட வழிமுறையின் பின்னொட்டி செல்வதாக இருந்தாலும், இது நீண்ட கால அடிப்படையில் ஏற்படுத்த கூடிய மாற்றங்கள் கட்டாயமாக மாநில மக்களுக்கு பலன் தருவதாக இருக்கும்.

அண்மையில் அதிகம் பேசப்பட்ட மற்றொரு விஷயம் பேருந்துகளின் கட்டண உயர்வு. கணிசமாக கட்டணங்கள் உயர்த்தப்பட்டாலும், பேருந்துகள் பாதுகாப்பாற்றவையாக உள்ளன என்ற விமர்சனங்கள் இருந்தன. இதற்கு பதில் சொல்லும் வகையில் – 10 ஆண்டுகள் தாண்டிய 4500 பஸ்கள் திரும்பப் பெறப்பட்டு, புதிய பஸ்கள் கொண்டுவரப்படும் என்ற அறிவிப்போடு, மாநில போக்குவரத்து கழகங்களுக்கு மேலும் 3000 புதிய பஸ்கள் வாங்கப்படும் என்பது வரவேற்கப்பட வேண்டிய விஷயம். கூடவே, ஓய்வுபெற்ற போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு சேர வேண்டிய பாக்கித் தொகை முழுவதையும் விரைவில் கிடைக்க செய்ய வேண்டும். இதற்கு உத்தரவாதம் தரும் எந்த தகவலும் பட்ஜெட் உரையில் இல்லாததது ஏமாற்றமே.

மாநிலத்தின் தொழில்வளர்ச்சி குறித்து பேசும்போது, தமிழ்நாடு வணிக எளிதாக்கல் திட்டம் குறித்த அறிவிப்பு மட்டும் போதாது. புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்க, தற்போது மாநிலங்களிடையே அதிகரித்துள்ள போட்டியில், தமிழகம் எந்த அளவுக்கு முன்னிலை வகிக்கிறது என்பது சந்தேகத்துக்குரியதே. அடுத்த ஆண்டு உலக முதலீட்டாளர்களை ஈர்த்து முதலீடு திரட்ட நடத்தப்பட உள்ள மாநாட்டுக்கான ஏற்பாடுகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வது என்பது எளிது. ஆனால், கடந்த மாநாட்டின்போது உத்தரவாத அளிக்கப்பட்ட முதலீடுகள் குறித்தே கேள்விகள் உள்ள நிலையில் பெருந்தொழில் முதலீடுகள் மாநிலத்தின் வேலைவாய்ப்புக்கு எந்த அளவு பங்களிக்கும் என்ற கேள்வியும் எழுப்புகிறது. மறுபுறம், அதற்காக தரப்படும வரிச்சலுகைகள், பிற தளர்வுகளை தாண்டி, அவை மாநிலத்தின் வளர்ச்சிக்கு நிஜமாகவே பலனளிக்கின்றனவா என்ற கேள்வி நியாயமானது. பெரும முதலீடுகள் பலவும் பெருமளவு இயந்திரமயத் தொழில்களாக அமைவதால், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்பதிலும் பின்தங்கியுள்ளன என்றே சொல்லப்படுகிறது. அதனால், அந்த முதலீடுகளால் பலன் என்ன என்ற கேள்விகள் அர்த்தமற்றவை அல்ல. மறுபுறம், மத்திய அரசின் ஆதரவோடு, எதிர்பார்க்கப்படும் வானூர்தி தொழிற் பூங்கா, சென்னை – ஹோசூர் இடையே பாதுகாப்புத்துறை தளவாட உற்பத்தி நெடும்பாதை, செங்கல்பட்டில் மருத்துவ தொழில் பூங்கா, உணவுப் பதப்படுத்தல் தொழில் பூங்கா, ஹோசூர் மற்றும் ோவாளையில் மலர் பதப்படுத்தல் பூங்கா போன்றவை எந்த அளவு முன்னேற்றம் காட்டும் என்பதை பார்க்க வேண்டும்.

அடித்தட்டு மக்களைப் பொறுத்த வரை, மாநிலத்தில் தற்போது நடைமுறையில் உள்ள பொது விநியோகத் திட்டத்தில் மாற்றம் இல்லை என்ற அறிவிப்பு முக்கியமானது. அரிசி மற்றும் சர்க்கரை போன்ற அத்தியாவசிய தேவைகள், ஏற்கனவே உள்ளது போல 1 கோடிக்கும் அதிகமான குடும்ப அட்டைகளுக்கு தொடர்ந்து வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவு மான்யமாக 6000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஏழை மக்களுக்கு 3 லட்சம் இலவச வீட்டு மனைப்பட்டாக்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள திட்டத்துக்கு, முதன்முறையாக, தனியார் நிலம் கையகப்படுத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் இதுபோன்ற திட்டங்களுக்கு மாநில அரசு பெரும்பாலும் நீர்நிலைகளையும், அவற்றுக்கான தடங்களையும் பயன்படுத்திய அணுகுமுறையில் மாற்றம் வந்துள்ளதாக உணர்ந்தாலும், தனியார் நில கையகப்படுத்தல் எந்த அளவுக்கு சாத்தியமாகப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இன்றைய பட்ஜெட்டின் இன்னொரு முக்கிய அறிவிப்பு – பயறு வகை நேரடி கொள்முதல் திட்டம். தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் நீண்ட காலமாக இருந்து வரும் நெல் கொள்முதல் போலவே, இந்த ஆண்டு முதல் தமிழக விவசாயிகளிடமிருந்து துவரை, உளுந்து, பச்சை பயறு போன்றவை முதல்முறையாக நேரடியாக கொள்முதல் செய்யப்படும் என் அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஒருபுறம், இவ்வகை பயிர்களில் அதிக ஆர்வம் காட்டாத தமிழக விவசாயிகளை திசைத் திருப்பும் என்பதோடு, மண்ணில் இயற்கையான நைட்ரஜன் சத்து அதிகரிக்கவும் இந்த பயிர் வளர்ப்பு உதவும் என்பதால், தமிழக வேளாண் வளாகத்தில் இது புதிய கதவுகளைத் திறந்துவிடும் என எதிர்பார்க்கலாம். பயிர்காப்பீடு திட்டத்துக்கு மாநில அரசின் பங்கு பிரிமியமாக 632 கோடி ஒதுக்கீடு, 25 லட்சம் ஹெக்டேரில் மானாவாரி பயிர் வளர்ப்பு திட்டம், 2000 புதிய வேளாண் உற்பத்திக் குழுக்கள் உருவாக்க முயற்சி, உழவன் செயலி அறிமுகம், நுண்ணீர் பாசன மேம்பாட்டுக்கு உதவும் பண்ணைக் குட்டை எண்ணிக்கையை மேலும் 10 ஆயிரம் அதிகரித்தல் போன்ற இன்னும் பலவும், மாநிலத்தின் விவசாயிகளை எந்த அளவுக்கு எட்டுகிறதோ, அந்த அளவில் பலன் தரும் என நம்பலாம்.

அண்மைக்காலமாக தமிழகத்தில் செய்திகளில் அதிகம் இடம்பிடிக்கும் மற்றொரு விஷயம் காவலர்கள் தொடர்பானது. பணிச்சுமை காரணமாக காவல் பணியில் உள்ள பலர் தற்கொலை செய்து கொள்வதாகச் சொல்லப்படும் நிலை ஒருபுறம்…. மறுபுறம், சமூகத்தில் தங்களுடனேயே வாழும் சக மனிதர்களை காவல் துறையைச் சேர்ந்தவர்கள் நடத்தும் முறை குறித்து பொதுமக்களிடையே உள்ள கோபம்…. இந்த நிலையில் காவலர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும விருதுகளின் எண்ணிக்கையை 1500ல் இருந்து 3000 ஆக, அதாவது இரு மடங்காக உயர்த்தப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது அவசியம்தானா…? காவல் பணியில் உள்ளவர்களை முதலில் சாமானிய மனோபாவம் கொண்டவர்களாக மாற்றத் தேவையான நடவடிக்கைதான் முக்கியம். பணிச்சுமையால் தற்கொலை என சொல்லப்பட்டாலும், உண்மையில் மூத்த காவலர்களால் தாங்கள் நடத்தப்படும் விதம்தான் – மனச்சுமையை அதிகரித்து, பணிச்சுமையை உணர்த்துகிறது என்ற மனோபாவப் புரிதல் அவசியமாகிறது. இதே மனப்போக்கில் நடந்தும் கொள்ளும் மற்ற காவலர்களால்தான் பொதுமக்கள் அசவுகரியங்களை சந்திக்க நேர்கிறது. எனவே இன்று காவலர்களுக்கு வழங்கப்பட வேண்டியது விருதுகளும், பதக்கங்களும் அல்ல.

அடுத்து நீண்ட நாட்களாக எதிர்பார்ப்புடன் காத்திருந்த அத்திக்கடவு – அவிநாசி திட்டத்துக்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கீடும் இன்றைய பட்ஜெட் அறிவிப்புகளில் அடங்கும்.

மாநிலத்தின் சுய வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் விதமாக புதிய தொழில்முனைவோர் திட்டத்தின் கீழ் இதுவரை இருந்த அதிகபட்ச ஒதுக்கீடு அளவான 1 கோடி, 5 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கலாம். பள்ளிக் கூடங்களில் நூலகம் உருவாக்கப்படும் என்பது வரவேற்பைப் பெற்றாலும், பள்ளிக்கல்வித்துறையில் தொடரும் வழக்கமான இலவசங்களுக்கு நிதி ஒதுக்கீடு என்ற வகையிலேயே மற்ற பல அறிவிப்புகள் இருந்தன.

நகர உள்கட்டமைப்பு பணிகளைப் பொறுத்தவரை, பல நகராட்சிகளில் பாதாளச் சாக்கடை திட்டங்கள் விரிவாக்கம் செய்யப்படும் என்ற அறிவிப்புகளும், திறந்தவெளியில் மலம் கழிக்கும் நிலை இல்லாத 17 மாவட்டங்கள் என பொதுச் சுகாதாரம் பற்றிய அறிவிப்புகள் பல இருந்தாலும், மனிதக் கழிவை மனிதர்களைக் கொண்டே நீக்கும் (பாதாள சாக்கடை அடைப்பு நீக்கம் போன்றவற்றில்) அவலம் இன்னும் தொடர்வதைப் பார்க்க முடிகிறது. இது தொடர்பாக, நீதிமன்ற தீர்ப்புகளும், யோசனைகளும் செவிடன் காதில் விழுந்த சங்காக ஒலிப்பதுதான் யதார்த்த நிலை. இதில் தற்போது கேரள மாநில இளைஞர்கள் பேன்டிகூட் (Bandikoot) என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ள முற்றிலும் இயந்திர வழி சுத்தம் செய்யும் முறை போன்றோ, அது போன்ற வேறு வழிகளைப் பற்றியோ யோசிக்காமல், மக்களின் மனோபாவத்தில் மாற்றம் கொண்டு வர முயற்சிக்காமல் செய்யப்படும் விரிவாக்கம் எத்தனை பலன் தரும் என்ற கேள்வி இருக்கத்தான் செய்கிறது.

மொத்தத்தில் இந்த பட்ஜெட் எப்போதும போல, சில சாதகங்களையும், பல கேள்விகளையும், சில பாதங்களையும் கொண்டதாகவே தொடர்கிறது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Latest News in by following us on Twitter and Facebook

Web Title:What is the direction of the road to tamil nadu budget 2018

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X