Advertisment

பாஜகவை பற்றி ஒரு அரசியல் கட்சியாக இந்த புகைப்படம் என்ன சொல்கிறது?

தலைவர்களில் ஒருவராக இருந்தாலும் சரி, சாதாரண கட்சி உறுப்பினர்களாக இருந்தாலும் சரி, ஒவ்வொருவரும், அதிகாரம் மற்றும் தனிப்பட்ட லட்சியத்திற்கு மேலாக சித்தாந்தம், தேசத்தை வைக்க வேண்டும் என்பதை இது வெளிப்படுத்துகிறது.

author-image
WebDesk
New Update
பாஜகவை பற்றி ஒரு அரசியல் கட்சியாக இந்த புகைப்படம் என்ன சொல்கிறது?

Akhilesh Mishra 

Advertisment

What one photo says about the BJP as a political party: உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் பதவியேற்பு விழாவின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ட்வீட் செய்துள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டசபை தேர்தல் முடிவுகளில் இருந்து ஒருவர் கற்றுக் கொள்ளக்கூடிய பாடங்கள் என்ன? இதன் மூலம் இரண்டு முடிவுகள் தெளிவாக தெரிகின்றன. முதலாவதாக, நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியின் காலடித் தடம் மேலும் சுருங்கிவிட்டது, கட்சியை ஏகபோகமாக கைக்குள் வைத்திருக்கும் குடும்பம் இப்போது கோமா நிலைக்கு முந்தைய நிலையில் இருக்கிறது. இரண்டாவதாக, இந்த ஐந்து மாநிலங்களில் நான்கில் ஆட்சிக்கு ஆதரவான வாக்குகளை பாஜக தீர்க்கமாகப் பெற்றுள்ளது. நான்கு மாநிலங்களிலும் ஆளும் கட்சிக்கு ஆதரவான மக்கள் தீர்ப்புகள் மாறுபாடான ஒன்று அல்ல. சுதந்திர இந்தியாவின் ஆரம்ப காலகட்ட பத்தாண்டுகளுக்குப் பிறகு, மத்தியிலும் மாநில அளவிலும் - ஆளும் கட்சிக்கு ஆதரவான மக்கள் தீர்ப்புகளில் பாஜக சிறந்த சாதனையைப் பெற்றுள்ளது.

நாடு முழுவதும் உள்ள மக்களின் நம்பிக்கையை மீண்டும் மீண்டும் பெறுவதில் பாஜகவின் இந்த அற்புதமான வெற்றி எதை விளக்குகிறது?

யோகி ஆதித்யநாத்தின் பதவியேற்பு விழாவின் போது எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியின் ட்விட்டர் டைம்லைன் வாயிலாக வைரலானதில் ஒரு முக்கியமான செய்தி உள்ளது. பிரதமர் நரேந்திர மோடியுடன் நிதின் கட்கரி, அமித் ஷா, ராஜ்நாத் சிங் மற்றும் ஜே.பி.நட்டா ஆகியோர் ஒரே வரிசையில், புகைப்படத்தில் ஒரே பிரேமில் உள்ளனர். இரண்டாவது முறையாக யோகி முதலமைச்சராக பதவியேற்கும் விழாவில், கடந்த 50 ஆண்டுகளில் மிகப் பெரிய வெற்றியை பெற்று இரண்டாவது முறையாக மீண்டும் ஆட்சியை பிடித்த பிரதமருடன் கட்சியின் தற்போதைய மற்றும் மூன்று முன்னாள் தலைவர்கள் அமர்ந்துள்ளனர். அவர்களில் யாரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல, அவர்களில் ஒருவர் கூட இரண்டாம் தலைமுறை அரசியல்வாதி அல்ல. அவர்கள் அனைவரும் முதல் தலைமுறை கட்சி நிர்வாகிகள் கடுமையான உழைப்பால் உயர்ந்த நிலைக்கு வந்தவர்கள். அவர்கள் அனைவரும் எளிமையான தாழ்மையான குடும்பப் பின்னணியில் இருந்து வந்தவர்கள் மற்றும் பல்வேறு சமூக தளங்களையும் சாதிகளையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். மகாராஷ்டிரா முதல் குஜராத் வரையிலும், இமாச்சலப் பிரதேசம் முதல் உத்தரப் பிரதேசம் வரையிலும், இந்தியாவின் பன்முகத்தன்மையை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். அவர்களின் பேச்சுவழக்கு மற்றும் மனநிலையில், இறக்குமதி செய்யப்பட்ட கருத்துக்கள் மூலம் செல்லுபடியாகும் தன்மையைக் கண்டறியும் முயற்சிகளுக்கு மாறாக இந்திய நாகரிக நெறிமுறைகளில் வேரூன்றி உள்ளனர். மேலும், மிக முக்கியமாக, இவர்கள் அனைவரும் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் உயர்ந்த சாதனையாளர்கள், ஆயினும், அவர்கள் அனைவரும் தேசிய வளர்ச்சிக்கான ஒரு செயலாக தங்கள் கட்சியின் பெரிய நோக்கத்தில் தங்கள் தனிப்பட்ட சுயநலத்தை உட்படுத்துகிறார்கள்.

இருப்பினும், இந்தப் படத்திலிருந்து சொல்லப்படும் செய்தி அதில் உள்ள நபர்களைப் பற்றியது அல்ல. இந்தியாவின் மறுமலர்ச்சிக்கு பாஜகவின் பங்களிப்பு என்ன என்பதற்கான உருவகம் மட்டுமே.

ஒரு நெறிமுறை ஜனநாயகத்தில் நமது அரசியல் கட்சிகளிடம் இருந்து நாம் எதிர்பார்க்கும் லட்சியங்கள் என்ன?

முதலாவதாக, அரசியல் கட்சிகள் ஒவ்வொரு தலைமுறையிலும் சிறந்த திறமைசாலிகளை கண்டறிந்து அவர்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் அவர்களை உயர் நிலைக்கு உயர்த்த வேண்டும். இரண்டாவதாக, பிராந்திய மற்றும் சமூக அளவில் அவர்கள் நாட்டின் பன்முகத்தன்மையை அதன் அனைத்து வடிவங்களிலும் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் - மூன்றாவதாக, அரசியல் கட்சிகள் தனிப்பட்ட முன்னேற்றங்களுக்காக செயல்படாமல் பொதுவான தேசிய நோக்கத்தை வளர்க்க வேண்டும். நான்காவதாக, அவர்கள் தேசத்தை முதன்மைப்படுத்த வேண்டும், அதே நேரத்தில் அரசியல் ஆர்வலரின் தனிப்பட்ட நலன் கடைசி முன்னுரிமையாக இருக்க வேண்டும். ஐந்தாவது, அரசியல் அதிகாரத்தின் மாறுதல் தன்மையைப் பொருட்படுத்தாமல், கட்சிகள் சில காலமற்ற நிரந்த மதிப்பீடுகளைக் கொண்டிருக்க வேண்டும். ஆறாவது, அரசியல் அதிகாரம் இறுதி குறிக்கோளாக இருக்கக்கூடாது, மாறாக சமுதாயத்தையும் தேசத்தையும் சிறப்பாக மாற்றுவதற்கான வழிமுறையாக இருக்க வேண்டும்.

இந்த ஆறு குணாதிசயங்களில் ஒன்று அல்லது இரண்டை ஒரு அரசியல் கட்சி வெளிப்படுத்தினால், விமர்சகர்கள் உற்சாகமடைகிறார்கள். பா.ஜ.க என்று வரும்போது, ஒரு லட்சிய அரசியல் கட்சியின் அனைத்துப் பண்புகளையும் பரந்த அளவில் உள்வாங்குவதில் அதற்கு அருகில் வேறு எந்த அரசியல் கட்சியும் நாட்டில் உள்ளதா என்ற கேள்வி எழுகிறது. ஒவ்வொரு கட்சியும் விதிவிலக்கு இல்லாமல், ஒரு குடும்பத்தின் அல்லது தனிநபரின் தனிப்பட்ட செயலுக்காக தன்னைத் தாழ்த்திக் கொண்டிருக்கும் போது, ​​ஜனநாயக தேசத்திற்காகப் போராடிய சுதந்திரப் போராட்ட வீரர்களின் உண்மையான லட்சியங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவது பாஜக மட்டுமே.

பா.ஜ.க.வின் வரலாறே அதன் செய்தி. பாஜகவின் முன்னோடியான ஜனசங்கம், பிராந்திய அல்லது பார்ப்பனியம் அல்லது தனிப்பட்ட உணர்வை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதல்ல. எந்த ஒரு முக்கியத்துவமும் கொண்ட அரசியல் அதிகாரத்தை பல ஆண்டுகளாக நிறுவனர்கள் தவிர்த்து வந்தனர். இன்னும், கட்சி அதன் சித்தாந்தப் பாதையில் இருந்து விலகவில்லை. விரைவான அரசியல் வெற்றி எனும் திருப்திக்காக நிறுவனர்கள் அதிக நம்பிக்கைக்கு உரிய சூழலை ஒருபோதும் தேர்வு செய்யவில்லை.பாஜக தலைமையும் ஆயிரக்கணக்கான முகமற்ற பாஜக உறுப்பினர்களும் தங்கள் கொள்கைகளில் சமரசம் செய்து கொள்வதை விடவும் கள அளவில் கடுமையாக உழைப்பதையே தேர்ந்தெடுத்தனர். இந்த கருத்தியல் அர்ப்பணிப்பும், ஆர்.எஸ்.எஸ்.ஸின் கொள்கைகளில் இருந்து உள்வாங்கப்பட்ட குணமும்தான், இந்தியாவில் ஒருபோதும் பிளவுபடாத ஒரே அரசியல் கட்சியாக பாஜகவை உருவாக்கி இருக்கிறது. இந்தியாவில் உள்ள ஒரே அரசியல் கட்சி இதுமட்டும்தான். தற்போதும் கட்சியில் இருக்கும் ஆறு முன்னாள் தேசியத் தலைவர்களைக் கொண்டதாக பாஜக உள்ளது. கட்சிக்குள் அடுத்த தலைமுறைக்கான நேரம் வந்தவுடன் அவர்கள் அனைவரும் தன்னலமின்றி ஒதுங்குகின்றனர்.

சுஷ்மா ஸ்வராஜின் கடைசி ட்வீட்டில், சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது தனது வாழ்நாளில் நீண்ட நாள் கனவை நிறைவேற்றியதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கப்பட்டிருந்தது. அப்போது அவர் அமைச்சராக இல்லை, கட்சிப் பொறுப்பாளராகக் கூட இல்லை. ஆனாலும், தேசிய சாதனைதான் அவரை உற்சாகப்படுத்தியது, அவருடைய தனிப்பட்ட நிலைப்பாடு அல்ல. இவ்வாறு, பா.ஜ.க தன் அரசியலை மாற்றுவதன் மூலம் இந்தியாவின் அடிப்படையை மாற்றியது. அரசியலில் அதிகாரத்திற்கு மேல் கொள்கைகளை வைத்து வெற்றி பெறுவது சாத்தியம் என்பதை காட்டி, பெரும்பாலும் ஒரு லட்சியத்தை மேற்கொள்ளும் நபர்களுக்கு பாஜக ஒரு வடிவத்தை வழங்கியுள்ளது. நமது அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல்வாதிகளிடமிருந்து நாம் எதிர்பார்க்கும் லட்சியங்களை ஒட்டு மொத்தமாக பாஜகவும், மற்றும் தனிப்பட்ட முறையில் பிரதமர் மோடியும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். இதனால்தான் பாஜக மீண்டும் மீண்டும் மக்களின் நம்பிக்கையை ஈர்க்கிறது. மக்களில் தானும் ஒன்று என்பதை உணர வைக்கும் ஒரே கட்சியாக பா.ஜ.க. உள்ளது. ஏனென்றால் அது அவர்கள் மத்தியில் இருந்துதான் வந்தது. அவர்களால் இது முடியும் என்றால், மற்றவர்களும் இதனை மேற்கொள்ளலாம். சமீபத்திய ஐந்து மாநில தேர்தல்களில் இருந்து நாம் தேடி கண்டுபிடிக்கக் கூடிய ஒரு செய்தி இவ்வாறாக இருக்கிறது. மேலே உள்ள அனைத்து காரணங்களுக்காகவும் மேலும் பலவற்றிற்காகவும் வாக்காளர்கள், "நான்தான் பாஜக" என்று கூறுகிறார்கள்.

இந்த கட்டுரை முதன்முதலில் மார்ச் 30ம் தேயிட்ட அச்சுப் பதிப்பில் ‘The clue in the picture’ என்ற தலைப்பில் வெளியானது. எழுத்தாளர் புளூகிராஃப்ட் டிஜிட்டல் அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் முந்தைய MyGov (உள்ளடக்கம்) இயக்குநராவார்.

தமிழில்: ரமணி

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Bjp India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment