Advertisment

டெல்லி அரசு பற்றி உச்சநீதிமன்றம் சொன்னது என்ன?

உச்ச நீதிமன்றத்தால் பிரகடனப்படுத்தப்பட்ட சட்டத்தை முதலில் ஆய்வு செய்வது முக்கியமானது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Arun Jaitley,

அருண் ஜெட்லி

Advertisment

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி மாநில அரசுக்கும் மற்றும் மத்திய அரசுக்கும் அத்துடன் யூனியன் பிரதேசமான டெல்லியை நிர்வகிக்கும் துணைநிலை ஆளுநருக்கும் இடையேயான நிர்வாக மற்றும் சட்டமன்ற அதிகார ஒதுக்கீடு குறித்த ஷரத்தை உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையிலான அரசியல் சாசன அமர்வு ஜூலை 4, 2018-இல் தீர்வு கண்டுள்ளது. மொத்தம் மூன்று தீர்ப்புகள் வெளியிடப்படுள்ளன. தலைமை நீதிபதியால் தெரிவிக்கப்பட்ட முதன்மை தீர்ப்பை மற்ற இரண்டு நீதிபதிகளும் ஏற்றுக்கொண்டுள்ளனர். கோட்பாடு அளவில் பார்த்தால் ஐந்து நீதிபகள் கருத்தில் மிக சிறிய வேறுபாடுகளே இருந்தன. எனவே பிரகடனப்படுத்தப்பட்ட சட்டத்தை உச்ச நீதிமன்றத்தின் ஒருமனதான கருத்தாகவே காண முடிகிறது.

உச்ச நீதிமன்றத்தால் பிரகடனப்படுத்தப்பட்ட சட்டத்தை முதலில் ஆய்வு செய்வது முக்கியமானது மற்றும் தேவையானதும் கூட. ஏனெனில், உச்ச நீதிமன்றம் தெரிவித்த தீர்ப்பின் பல்வேறு பதிப்புகள் ஊடகங்களில் வலம் வர ஆரம்பித்துவிட்டன.

டெல்லி ஒரு யூனியன் பிரதேசம்

எந்த கேள்விகளுமின்றி டெல்லி ஓர் யூனியன் பிரதேசம். அதன் அதிகார கட்டமைப்பு தனியானதாகவும் தனித்துவமானதாகவும் இருக்க வேண்டியுள்ளது. இது மத்திய அரசு, உச்ச நீதிமன்றம், ஜனாதிபதி மாளிகை, மத்திய அரசின் அலுவலகங்கள் போன்றவற்றின் இருப்பிடம். வெளிநாடுகளின் தூதரகங்கள் அனைத்தும் டெல்லியிலேயே அமைந்திருக்கின்றன, வெளி மாநில தலைவர்கள் அவ்வப்போது டெல்லிக்கே வருகை புரிகின்றனர். சூழல் இப்படியிருக்க, டெல்லியின் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை, காவல்துறையை, நிலத்தை மற்றும் டெல்லியின் இதர அம்சங்களை யார் நிர்வகிக்க வேண்டும்? டெல்லியை பகுதி ‘சி’ யின் கீழ் பரிசோதித்த பிறகு அதன் யூனியன் பிரதேசமாக பரிசீலனை செய்த பிறகு டெல்லிக்கு ஓர் கலப்பின நிர்வாக அமைப்பு உருவாக்கப்பட்டது.

காவல்துறை, பொது ஒழுங்கு மற்றும் நிலம் உட்பட சில அதிகாரங்கள் மத்திய அரசிடமும் மற்ற எஞ்சிய ஏராளமான அதிகாரங்கள் மக்களால் தேர்வு செய்யப்பட்ட மாநில அரசிடமும் ஒப்படைக்கப்பட்டது. சில அரிதான வேளைகளில், எப்போதெல்லாம் அதிகாரம் சரியாக பயன்படுத்தப்படவில்லையோ, அப்போதெல்லாம் மத்திய அரசின் கூர் பார்வை டெல்லி மாநில அரசின் மீது படும். இன்றைய உச்ச நீதிமன்ற தீர்ப்பில், அரசியலமைப்பின் சட்டபிரிவு 239(AA) யூனியனின் நலங்களை பாதுகாக்கின்ற தன்மையுடன் இருப்பதாகவும், தேசிய தலைநகர பிரதேசத்தின் விவகாரங்களில் தொடர்புடைய தேசிய நலனின் மீதும் அக்கறை கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துணைநிலை ஆளுநர் என்பவர் மக்களால் தேர்ந்தெடுக்கபப்ட்ட அரசை கண்காணிப்பவர் மட்டுமே. இந்த விஷயத்தை உச்ச நீதிமன்றம் மிகச்சரியாக கூர்ந்து கவனித்துள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கபப்ட்ட மாநில அரசு, துணைநிலை ஆளுநர் மற்றும் மத்திய அரசு இந்த மூன்று நிறுவனங்களும் ஒன்றாக இணைந்து மக்கள் நல பணி மற்றும் தேசிய தலைநகரம் இந்த இரண்டையும் மனதில் நிலைநிறுத்தி பணியாற்ற வேண்டும். ஒத்துழைப்பு, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அரசியலமைப்பு இடத்திற்குள் பணியாற்றுவது மற்றும் மோதலை தவிர்ப்பது என்பது தான் இதன் முக்கிய குறிக்கோளாக இருக்க வேண்டும். தேசிய தலைநகர பிரதேசத்தின்(NCR)ஆளுகை சம்மந்தமான விஷயங்களை பாதுகாப்பவர் என்ற முறையில் இது குறித்த நிபந்தனையை கட்டமைப்பது பொருத்தமானதாக இருக்கும்.

உச்சநீதி மன்றத்தின் கருத்து

உச்சநீதிமன்றம் பின்வருமாறு வகுத்துள்ளது:

1. காவல்துறை, பொது ஒழுங்கு மற்றும் நிலம் போன்றவையின் அதிகாரங்கள் பிரத்யேகமாக மத்திய அரசிடம் அளிக்கிப்படுகிறது. இவை துணைநிலை ஆளுநர் மூலம் முதலில் செயல்படுத்தப்படும். இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கு அதிகாரங்களை செயல்படுத்துவதில் எந்த பங்குமில்லை.

2. மாநில மற்றும் அதனை ஒத்துள்ள பட்டியலில் இடம்பெற்றுள்ள அதிகாரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசால் செயல்படுத்தப்படும். ஆயினும், மத்திய அரசுக்கு (சட்டபிரிவு 239 AA (3)(b) யின் கீழ் சட்டபிரிவு 246(4) சமமாக கருதப்படுகிறது) தேசிய தலைநகர பிரதேசத்தின் அனைத்து தளங்களிலும் சட்டப்பூர்வமான அதிகாரம் இருக்கும்.

3. இந்த அதிகாரங்கள் தொடர்பான நிர்வாகம் மற்றும் சட்டபூர்வ அதிகாரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசிடம் இருக்கும். அதே வேளையில் இது தொடர்பான அதிகாரத்தை மத்திய அரசும் கொண்டிருக்கும். மத்திய அரசோ பாராளமன்றமோ இந்த அதிகாரத்தை செயல்படுத்தியிருந்தால், அது மாநில அரசின் அதிகாரங்களை ரத்து செய்வதாக அமையும்.

4. துணைநிலை ஆளுநர் மாநில கவுன்சிலின் உதவி மற்றும் ஆலோசனையின் மூலமே இணைக்கப்பட்டுள்ளார். மாநில அமைச்சரவை அதிகாரத்தை முறியடிக்க எந்த சுதந்திரமான அதிகாரமும் இவருக்கு இல்லை.

5. ஆயினும் இந்த அதிகாரங்களை பயன்படுத்துவது அல்லது செயல்படுத்துவது பற்றி துணைநிலை ஆளுநருக்கு தெரிவிக்க வேண்டியது மாநிலத்தின் கடமை.

6. பொதுவாக, ஜனநாயகத்தின் மற்றும் கூட்டாச்சி அரசியலின் மீதான பெருநலன் காரணமாக துணைநிலை ஆளுநர் இந்த அதிகார செயல்பாட்டை ஏற்றுகொள்ள வேண்டும். ஒருவேளை அதை மறுப்பதற்கான சரியான மற்றும் ஒப்புக்கொள்ள கூடிய காரணங்கள் தகுந்த தரவுகளுடன் இருக்குமேயானால், அதை தெளிவாக குறிப்பிட்டு அவர் ஜனாதிபதிக்கு(மத்திய அரசு) எழுதலாம். இதன் மூலம் துணைநிலை ஆளுநருக்கும், தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கும் இடையேன கருத்து வேறுபாடு தீர்த்து வைக்கப்படும். மத்திய அரசின் முடிவானது துணைநிலை ஆளுநர் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு இரண்டையும் இணைப்பதாகவே இருக்கும். இவ்விதத்தில், மத்திய அரசின் அதிகாரமே மேலோங்கியுள்ளது. தேசிய தலைநகரின் நலனில் தேர்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கு முக்கியத்துவம் வழங்கும் அதே வேளையில் மத்திய அரசின் முதன்மைதன்மையையும் நிலைநாட்டியுள்ளது நீதிமன்றம்.

டெல்லி என்பது மாநிலம் அல்ல. எனவே மாநில அரசுக்கு சொந்தமான அதிகாரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட யூனியன் பிரதேசத்திற்கும் இருக்குமென்ற யூகமே தவறு. மிக குறிப்பாக, உச்ச நீதிமன்றத்தால் தெரிவிக்கப்பட்டுள்ள விஷயம், நமக்கு தெள்ள தெளிவாக கிடைக்கிற தகவல்,டெல்லியின் தேசிய தலைநகர பிரதேசம் நடப்பு அரசியலமைப்பு திட்டத்தின் கீழ் ஓர் மாநிலத்தின் அந்தஸ்த்தை பெற முடியும் என்ற கற்பனைக்கு கூட இடம்மில்லை. துணைநிலை ஆளுநர் என்பவர், மாநில ஆளுநர் பதவிக்கு ஒப்பானவர் அல்ல. அவர் ஓர் நிர்வாகி, ஓர் எல்லைக்குள் நிர்வகிப்பவர் துணைநிலை ஆளுநர் என்ற பதவியை வகிப்பவர். முதலமைச்சரால் தலைமை தாங்கப்படும் அமைச்சர்கள் குழு, டெல்லியின் தேசிய தலைநகர பிரதேசம்(NCR)என்பது மாநிலம் அல்ல. அரசியலமைப்பு நிலையை மனதார ஏற்றுக்கொண்டு மதிப்பு மற்றும் மதிநுட்பத்தால் வழி நடத்தப்பட வேண்டும்.

அரசியலமைப்பு குறித்த தீர்ப்பு

அரசியலமைப்புக்கு பின்னாலான அரசியலமைப்பு தத்துவங்களையும் அரசியலமைப்பில் உள்ள வாசகங்களை மிக துல்லியமாக உறுதிப்படுத்தியும் விளக்குகிறது, இந்த தீர்ப்பு. இந்த தீர்ப்பு எந்த வகையிலும் மாநில அரசிற்கோ அல்லது மத்திய அரசிற்கோ எந்த விதமான அதிகாரங்களை கூட்டவோ அல்லது அவைகளை நீர்த்து போகவோ செய்யவில்லை. இந்த தீர்ப்பு தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் அதே வேளையில் டெல்லி ஓர் யூனியன் பிரதேசமாக இருப்பதால் மாநில அரசு மத்திய அரசின் கீழ்படிந்து இருக்க வேண்டும் என்பதை அழுந்த சொல்லியுள்ளது.

ஏராளமான பிரச்சனைகளுக்கு நேரடியாக கருத்து தெரிவிக்கப்படாவிட்டாலும், சில உட்குறிப்புகளின் மூலம் அது குறித்த சில அறிகுறிகள் உள்ளன. ஆயினும், முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகள் கலந்தாலோசிக்கப்படாத போது, அது குறித்த நேரடியான கருத்து தெரிவிக்கப்படாத போது யாராலும் அந்த மெளனத்தை யாருக்கு சாதகமாகவும் கணிக்க முடியாது. இரண்டு தெளிவான அறிகுறிகள் உண்டு. முதலாவது, டெல்லிக்கு காவல்துறை அதிகாரம் கிடையாது. முந்தைய காலத்தில் செய்ததை போல குற்றங்களை விசாரிக்கும் விசாரணை ஆணையத்தை அவர்களால் அமைக்க முடியாது. இரண்டாவது, டெல்லி தன்னை மற்ற மாநிலங்களை போல நிகராக கொண்டு ஒப்பிட்டு கொள்ள முடியாது. எனவே யூனியன் பிரதேசத்தின் எந்த ஒரு சேவையும் டெல்லி அரசுக்கு சாதகமானதாக முடிவு செய்யப்படுமேயானால், அது தவறான போக்கு என்பது இதன் மூலம் புலப்படுகிறது.

பொது தளங்களில் தீர்ப்பு குறித்த பலவிதமான பகுப்புகள் வலம் வர துவங்கியிருக்கிறது. எனவே பொது விவாதங்களில் தங்களின் பங்களிப்பை ஆற்ற விரும்புகிறவர்கள் தீர்ப்பு முழுமையையும் ஒரு முறை வாசித்த பின் கருத்து தெரிவிப்பார்கள் என நான் நம்புகிறேன்.

(இந்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, தனது ஃபேஸ்புக்கில் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்)

தமிழாக்கம் : SG சூர்யா, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர். வலதுசாரி சிந்தனையாளர்.

Supreme Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment