Advertisment

ஆயுதமாக மாறிய சட்டம்

கடந்த 2014 ஆம் ஆண்டிலிருந்து மைய நடுவண் அரசும் மாநில அரசுகளும் சர்வாதிகார மையங்களாக மாறி வருகின்றன. இதன் விளைவாக காவல்துறை மற்றும் துணை ஆயுதப் படைகள் உள்நாட்டுப் பாதுகாப்பில் ஈடுபடும் போது மேலும் எதேச்சதிகாரம் தலை தூக்குகிறது.

author-image
WebDesk
New Update
ஆயுதமாக மாறிய சட்டம்

ப.சிதம்பரம்



கடந்த 2008 நவம்பர் மாத இறுதியில் மும்பை நகரத்தின் மீது  நிகழ்த்தப் பட்ட  பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து  நிதியமைச்சகத்திலிருந்து உள்துறை அமைச்சகத்திற்கு மாறுமாறு  என்னை அரசு கேட்டுக் கொண்டது. மறுவருடம்  மே 2009 ல் நான் நிதி அமைச்சராக ஐந்தாண்டுகளை நிறைவு செய்வேன் என்ற நம்பிக்கை எனக்குள் இருந்தது. அதனால்  நான் சற்றே தயங்கினேன். ஆனாலும்  கடமைக்கு கீழ்ப்படியத்தான் வேண்டும் என்பதால்  டிசம்பர் 1, 2008 அன்று  உள்துறை அமைச்சகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டேன்.

Advertisment

எனது பதவிக்காலத்தின் ஆரம்பத்தில், ஆயுதப் படைகள் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம், 1958 (AFSPA) ஐ  நீக்க வேண்டும் என பல வேண்டுதல்கள் எனக்கு வந்தன.  இந்தச் சட்டத்தின் கீழ், மத்திய அரசு  அரசு  நாட்டின் எந்தப் பகுதியையும்  தொந்தரவாக  பகுதி  அதாவது கலகப்பகுதியாக  அறிவிக்கலாம்.  அந்த இடத்தில் இந்த சட்டத்தை அமல் படுத்தலாம், இது மாதிரி எட்டு மாநிலங்களில் கவர்னர்கள்  ஒரு குறிப்பிட்ட பகுதியை தொந்தரவான கலகப்  பகுதியாக  அறிவித்து, அந்தப் பகுதிக்கு  இச் சட்டத்தைப் பயன்படுத்தலாம்.  இந்த சட்டம் அமல் படுத்தப் பட்டால் எத்தனை காலத்துக்கு தொடரலாம் என்பதற்கான கால வரம்பு குறித்து  எதுவும் சொல்லப் படவில்லை. ஆனாலும் உச்சநீதிமன்றம் எந்த நேரத்திலும் தலையிட்டு,  ஆறுமாதங்கள் முடிவதற்கு முன் சம்மந்தப் பட்ட மாநில அரசுகளிடம்  சட்டத்தை அமல் படுத்துவதை மறுபரிசீலனை செய்ய சொல்ல வழியுண்டு.  

இந்த உரிமை  மனிதஉரிமை ஆர்வலர்களுக்கு  சற்றே  ஆறுதலை அளித்தது.  ஏனெனில் சட்டம் பயன்படுத்தப்பட்டவுடன், மாநில  அரசுகள்  இதை மறுபரிசீலனை செய்ய விரும்பாது.  இதற்கு உதாரணமாக  மணிப்பூர்  அரசு 1980 களில் இருந்து  இந்த சட்டத்தை அவ்வப்போது  அமல் படுத்துவதை சொல்லலாம்.  அஸ்ஸாம்  அரசோ  2017 ஆம் ஆண்டு முதல்,  ஆறு மாதங்களுக்கு ஒருமுறை  இந்த அறிவிப்பை மதிப்பாய்வு செய்து புதுப்பித்து செயல் படுத்தி   வருகிறது.  நாகலாந்து  மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தின்  மூன்று மாவட்டங்கள் மற்றும் இரண்டு காவல் நிலையப் பகுதிகளை தொந்தரவான  பகுதிகளாக  இன்னமும் மத்திய அரசு தொடர்ந்து அறிவித்து வருகிறது.

தண்டனையில்லாமல் தப்பிக்கும் சக்தி

நாட்டின் ஒரு பகுதி தொந்தரவான  கலவர பகுதி என அறிவிக்கப் பட்டால்  அம்மாநில அரசும்  மத்திய அரசும் அரசின் ஆயுதப் படைகளுக்கு  கட்டுப் பட்டே நடக்க வேண்டும்.  எந்த இடத்தில் ராணுவம்  நிறுத்தப் படுகிறதோ அங்கெல்லாம் அவர்கள் மட்டுமே முடிவெடுக்க முடியும். சிறப்பு அதிகாரத்தையும்  பயன் படுத்த முடியும்.  நான் இந்த சட்டத்தை நன்கு  அலசிப் பார்த்த போது சில முக்கிய விஷயங்கள் என் கவனத்துக்கு வந்தன. இது குறித்து  1915 மே மூன்றாம் தேதியிட்ட இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையில்  குறிப்பிட்டுள்ளேன். இந்த சட்டத்தின் கீழ் ராணுவம் அனுபவிக்கும் அதிகாரங்கள் அதிகம் மட்டுமல்ல. கொடூரமானவை என்றே சொல்லலாம்.  இவர்கள்  கலவர பகுதியின் ஒரு தங்குமிடத்தையோ அல்லது  கட்டுமானத்தையோ  யாரிடமும் ஆலோசிக்காமல் அழிக்க முடியும். ஒருவரை பிடி ஆணை இல்லாமல் கைது செய்யலாம். நீதிமன்ற உத்தரவு இல்லாமல் ஒரு இடத்தில் நுழைந்தது யாரையும் தேடலாம்.  இந்த சிறப்பு அதிகாரங்கள் அனைத்தும்  பொதுவான  மற்றும் குற்றவியல் நடைமுறை சட்டத்திற்கு  முரணானவை. சிறப்பு அதிகாரங்களை பயன் படுத்தி செய்யப் படுபவை.  சிறப்பு அதிகாரத்தின் படி ஒரு ராணுவ அதிகாரி அல்லது காவல்துறை அதிகாரி தேவை என நினைத்தால் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட ஒரு கும்பலின் மீது துப்பாக்கிசூடு நடத்தலாம். அதில் யாரும் இறந்தால் கூட யாரும் கேள்வி கேட்க இயலாது.  

சிறப்பு அதிகாரங்கள் கொண்ட இந்த  ஆயுதப் படை  சிறப்பு அதிகாரங்கள் சட்டத்துக்கு (AFSPA) எதிரான வழக்குகளில் மத்திய காவல் படையினர் பொதுமக்கள் மீது ஆயுதப் பிரயோகம் செய்யாமல் இயங்க  அறிவுறுத்தப் பட்டுள்ளது.  அனால் மோதல் சூழலில்  இவர்கள் அது குறித்து சிந்தனை செய்ய இயலாமல் அதிக பட்ச படையையே பிரயோகிக்கிறார்கள். சட்ட பிரிவு 6 ன் படி  இவர்கள் மீது யாரும் வழக்கு தொடுக்க யாருக்கும் அனுமதி இல்லை. உண்மையை சொல்வதானால் ஆயுதப் படை வீரர்கள் தண்டனையின்றி இயங்க சிறப்பு சட்டம் ஊக்கம் தருகிறது.

காவல் படையினரின் சாதாரண அதிகாரம் கூட  இங்கு தவறாக பயன் படுத்தப் படுகிறது.  இதுபோன்ற தவறான பயன்பாடு  மாநிலங்களால் அனுமதிக்கப் படுகின்றன. எடுத்துக்காட்டாக உத்தரபிரதேச மாநிலத்தின்  சட்ட அமலாக்கக் கொள்கையில் ‘என்கவுன்டர்கள்’ என்பது சட்டபூர்வமாக்கப் பட்டு விளம்பரப் படுத்தப் படுகின்றன.  ‘தொந்தரவு நிறைந்த பகுதி’ என்று அறிவிக்கப்பட்ட மாநிலத்தில்,காவல் படையினர் தீவிர மனஅழுத்தத்துடன் இருப்பதால் இந்த சிறப்பு சட்டமே இன்று ஒரு ஆயுதமாக மாறி விட்டது.  

சிறப்பு சட்டத்தை ரத்து செய்ய வழக்கு

ஆயுதப் படைகள் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம், 1958 (AFSPA) ரத்து செய்யப் படவேண்டும்  என்ற கோரிக்கை  வெகுகாலமாக இருந்து வருகிறது. கடந்த 2005 ல், நீதிபதி ஜீவன் ரெட்டி கமிட்டி அதை ரத்து செய்ய பரிந்துரைத்தது.  இந்த கருத்து அடுத்தடுத்த கமிஷன்கள் மற்றும் குழுக்களால் அங்கீகரிக்கப்பட்டது. கடைசியாக நீதிபதி ஜே எஸ் வர்மா கமிட்டி ஆயுதப் படைகள் சிறப்பு சட்டத்தை மறுபரிசீலனை செய்வது  அவசியம் என பரிந்துரையும் செய்தது.  

என்னைப் பொறுத்த வரையில் ஆயுதப் படைகள் சிறப்பு சட்டத்தை ரத்து செய்வது காலத்தின் கட்டாயம். தீவிரவாதத்தை ஒழிக்க  சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் மற்றும் தேசிய புலனாய்வு சட்டம் போன்ற  சட்டங்கள் உள்ளன.  சொல்லப் போனால் சட்ட விரோத செயல்பாடுகள் தடுப்பு சட்டத்தை அமல் படுத்திய அனுபவமே அதை மறுபரிசீலனை செய்ய வேண்டிய வழக்குகளை சந்தித்து வரும் வேளையில் ஆயுதப் படைகள் சிறப்பு சட்டத்தையும் ரத்து செய்ய வேண்டும் என்ற வழக்குகளும் வெகு காலமாகவே நிலுவையில் உள்ளன.  

இது குறித்து இன்னும் அறிய  சிறப்பு சட்டம் குறித்த அஸ்ஸாம் வழக்கை  எடுத்துக்கொள்ளலாம். இது நமக்கு ஒரு படிப்பினையை  தருகிறது. கடந்த 2017 ஆம் ஆண்டில், உள்துறை அமைச்சகம் அஸ்ஸாமிடம் AFSPA ஐ முற்றிலுமாக அகற்றவோ  அல்லது அமல் படுத்தப் படும் பகுதிகளை குறைக்கவோ கேட்டுக் கொண்டது. அனால் அஸ்ஸாம் அரசு அதற்கு பணிய வில்லை.  2018 ஆம் ஆண்டில், உள்துறை விவகாரங்களுக்கான நிலைக்குழு உள்துறை அமைச்சகத்தின் ஆலோசனைக்கு எதிராக  அஸ்ஸாமை தொந்தரவு நிறைந்த பகுதியாக மாநில அரசு அரசு அறிவித்ததின் பின்னணி குறித்து விளக்கம் கேட்டது. அனால் அஸ்ஸாம் அரசு அதற்கு வெளிப்படையாக எந்த விளக்கமும் அளிக்க வில்லை.

சர்வாதிகார  அரசின் சட்டம்

டிசம்பர் 4, 2021 அன்று  நடந்த 13 பொதுமக்கள்  தவறாக அடையாளம்  காணப் பட்டு கொல்லப்  பட்ட வழக்கில் ராணுவம் மன்னிப்பு கேட்டது. மணிப்பூர், நாகலாந்து மற்றும் மேகாலயாவின் முதலமைச்சர்கள்  இந்த சிறப்பு சட்டத்தை திரும்பப் பெறுமாறு மத்திய அரசிடம்  வேண்டுகோள் விடுத்தனர். இதில் மணிப்பூர் அரசின் வேண்டுகோள் தான்  கேலிக்குரியது. காரணம் இந்த சட்டத்தை  திரும்பப் பெறும் படி மத்திய உள்துறை வேண்டுகோள் விடுத்தும் அதை மறுத்தவர் மணிப்பூர் முதல்வரே.  

உண்மையாகவே  2014 முதல் அரசாங்கங்கள்  எதேச்சதிகாரமாக செயல் படுகின்றன. தவிர்க்க முடியாத  காரணத்தால்  காவல்துறை  மற்றும் ஆயுதப் படைகள் உள்நாட்டுப் பாதுகாப்பிற்காக  பயன்படுத்தப்படும்போது  இதில் மேலும் சர்வாதிகாரம்  ஆதிக்கம் செலுத்துகிறது.  கேடயமாக இருக்க வேண்டிய ஆயுதப் படை சிறப்பு சட்டம்  இன்று ஆயுதமாக மாறிவிட்டது. இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற குரல் ஆயுதப் படையினரிடமும் உள்ளது. ஆனால் அவை நிசப்தமான முனகல்களாகவே உள்ளன.



உள்துறை அமைச்சராக நான்  ஆயுதப் படை  சிறப்பு சட்டத்துக்கு  ஆதரவளித்தேன்.  ஆனால் சட்டத்தில் திருத்தம் செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தேன். இந்த   முயற்சியில்  நான் தோல்வியடைந்தேன். இது குறித்து நான் கடந்த 2015 எழுதிய கட்டுரையில் விவரித்துள்ளேன்.  இன்று எதேச்சதிகார அரசாங்கம் உள்ளது. இதில்  சர்வாதிகார பிரதமர், சர்வாதிகார உள்துறை அமைச்சர்  என்று பட்டியல்  நீள்கிறது.  எனவே இந்த ஆயுதப்படை சிறப்பு சட்டத்தை  ரத்து செய்யப்படுவதற்கான வாய்ப்புகள்  இல்லை. திருத்தங்களுக்கு கூட எந்த வாய்ப்பும் இல்லை.  இந்த சட்டத்தை ரத்து செய்ய அரசியலமைப்பு நீதிமன்றங்கள் மட்டுமே  உதவ முடியும்.

தமிழாக்கம்: த.வளவன்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

P Chidambaram Afspa Act
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment