Advertisment

மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் வைகோ போட்டி : மதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு

ஜூலை 18ஆம் தேதி நடைபெற இருக்கும் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில், மதிமுக சார்பில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ வேட்பாளராக போட்டியிட உள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
vaiko, mdmk, meeting, rajyasabha, mp, dmk, mk stalin, loksabha election, victory, hydro carbon excavation, வைகோ, மதிமுக, கூட்டம், மாநிலங்களவை, எம்.பி. திமுக, ஸ்டாலின், மக்களவை தேர்தல், வெற்றி, ஹைட்ரோ கார்பன் திட்டம்

vaiko

தமிழகத்தில் ஜூலை 18ஆம் தேதி நடைபெற இருக்கும் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ வேட்பாளராக போட்டியிட உள்ளதாக மதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Advertisment

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலைக்குழு, ஆட்சிமன்றக்குழு, மாவட்டச் செயலாளர்கள், அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள், தலைமைக் கழகச் செயலாளர்கள் கூட்டம், 02.07.2019 செவ்வாய்க்கிழமை காலை, சென்னை, தலைமை நிலையம், தாயகத்தில் கழக அவைத்தலைவர் திரு. திருப்பூர் சு.துரைசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள்:-

தீர்மானம் 1: திராவிட இயக்க மண்ணில், டாக்டர் சி.நடேசனார், சர் பிட்டி தியாகராயர், டாக்டர் டி.எம்.நாயர் ஆகியோர் அமைத்த அடித்தளத்தில், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் ஆகிய தலைவர்கள் அரும்பாடுபட்டு வளர்த்த திராவிட இயக்க உணர்வை, எவரும் அழித்துவிட முடியாது என்பதை நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் பறை சாற்றி இருக்கின்றன.  இந்தியாவை மத அடிப்படையில் பிளவுபடுத்தும் நோக்கத்துடன், இந்துத்துவ சக்திகள், பாரதிய ஜனதா கட்சியை இயக்கி வருகின்றன. நாடு முழுவதும் வெறுப்பு அரசியலை விதைத்து, அதன் மூலம் மக்களவைத் தேர்தலில் ‘அறுவடை’ செய்து மீண்டும் ஆட்சிப் பொறுப்புக்கு வந்துள்ளன. இந்தச் சூழலில் தமிழகத்தில் மதச்சார்பு அற்ற முற்போக்குக் கூட்டணியைக் கட்டி அமைத்து, அதில் மறுமலர்ச்சி தி.மு.க. உள்ளிட்ட ஜனநாயக முற்போக்கு மதச்சார்பு அற்ற கட்சிகளை ஒன்றிணைத்துத் தலைமை தாங்கி வழிநடத்தி, ஜனநாயகத்திற்கான போராட்டத்தை முன்னெடுத்துச் சென்று, இந்திய நாடே திரும்பிப் பார்க்கின்ற வகையில் 17 ஆவது மக்கள் அவைத் தேர்தலில், தமிழ்நாட்டில் மாபெரும் வெற்றியை ஈட்டித் தந்திருக்கின்ற திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கின்றது.

தீர்மானம் 2:  நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய அரசியல் அரங்கமே வியக்கத்தக்க வகையில், தமிழக மக்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் அமைந்த மதச்சார்பு அற்ற முற்போக்குக் கூட்டணிக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க மாபெரும் வெற்றியை அளித்து இருக்கின்றார்கள். இந்தியா முழுவதும் மதவாத அரசியலின் தாக்கம் ஏற்படுத்திய ஆதரவு அலையை, தமிழ்நாட்டில், திராவிட இயக்கம் ஜிப்ரால்டர் கோட்டை போல நின்று, தடுத்து நிறுத்தி இருக்கின்றது.

17 ஆவது மக்கள் அவையைத் தெரிவு செய்வதற்காக, தமிழ்நாட்டில், வேலூர் தொகுதி தவிர்த்து தேர்தல் நடந்த 38 தொகுதிகளில் 37 இல் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்களுக்கு, இலட்சக்கணக்கான வாக்குகளைக் கூடுதலாக அளித்து, மகத்தான வெற்றி பெறச் செய்த தமிழக மக்களுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் நன்றி மலர்களைக் காணிக்கை ஆக்குகின்றது. தமிழகத்தில் இருந்து மக்கள் அவைக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், தமிழக சட்டமன்ற இடைத் தேர்தலில் வெற்றிபெற்ற திமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இக்கூட்டம் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கின்றது.

தீர்மானம் 3: 2014 மே 26 ஆம் நாள், திரு நரேந்திர மோடி அவர்கள் பிரதமராகப் பொறுப்பு ஏற்கும்போது, ஈழத் தமிழ் மக்களை இலட்சக்கணக்கில் கொன்று குவித்த கொலைகாரன், சிங்கள அதிபர் இராஜபக்சேவை, பதவி ஏற்பு விழாவிற்கு அழைத்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அதே நாளில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தலைமையில், டெல்லி ஜந்தர் மந்தரில் கருப்புக்கொடி அறப்போராட்டம் நடத்தியவர்கள், கைது செய்யப்பட்டு, நாடாளுமன்றத் தெருவில் உள்ள காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டனர். கடந்த 5 ஆண்டுகளாக, தமிழகத்திற்கு, தமிழ் இனத்திற்கு எதிராக அமைந்த, மோடி அரசின் கேடான நடவடிக்கைகளை, மக்கள் மன்றத்தில் எடுத்துரைத்தும், தமிழ்நாட்டை காவிரிப் பிரச்சினை உள்ளிட்ட எல்லாப் பிரச்சினைகளிலும் வஞ்சித்த பிரதமர் மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நான்கு முறை கருப்புக்கொடி அறப்போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றும், மோடி எதிர்ப்பு அலைக்கு வித்திட்டவர் கழகப் பொதுச்செயலாளர் வைகோ என்பதை எவராலும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது.நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்காக 26 நாட்கள் அனைத்து நாடாளுமன்றத் தொகுதிகளிலும், ஆறு நாட்கள் சட்டமன்ற இடைத் தேர்தல் நடந்த தொகுதிகளிலும் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு கடமை ஆற்றி, தேர்தல் வெற்றிக்கு கடமை ஆற்றிய தலைவர் வைகோ அவர்களுக்கு இக்கூட்டம் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கின்றது.

தீர்மானம் 4: நாடாளுமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இணைந்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மாநிலங்களவைத் தேர்தலில் ஒரு இடம் அளிக்கப்படும் என்று தேர்தல் உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி, தமிழகத்தில் ஜூலை மாதம் நடைபெற இருக்கும் மாநிலங்களவை தேர்தலில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஒரு இடம் ஒதுக்கீடு செய்த தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.

தீர்மானம் 5: தமிழகத்தில் 2019 ஜூலை 18ஆம் தேதி நடைபெற இருக்கும் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் வேட்பாளராகப் போட்டியிடுவது என்று கழகத்தின் உயர்நிலைக் குழு, ஆட்சிமன்றக் குழு, மாவட்டச் செயலாளர்கள், அரசியல் ஆலோசனைக் குழு மற்றும் அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள் கூட்டம் தீர்மானிக்கிறது.

தீர்மானம் 6: கஸ்தூரி ரங்கன் தலைமையில் அமைக்கப்பட்ட 9 நபர் கொண்ட குழு, புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையை மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்கிடம், மே 31, 2019 அன்று அளித்து இருக்கின்றது. இக்குழுவின் 484 பக்க வரைவு அறிக்கையில், இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தியைப் பயிற்றுவிக்க வேண்டும். அதற்காக மும்மொழிக் கொள்கையைச் செயல்படுத்தி தாய்மொழி, ஆங்கிலம் தவிர, இந்தி மொழியை 6 ஆம் வகுப்பில் இருந்து கட்டாயப் பாடம் ஆக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது. இந்தி மொழி பேசாத மக்கள் மீது இந்தி வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படாது என்று இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் அளித்த வாக்குறுதிக்கு மாறாக, இந்தி மொழியைத் திணிக்கும் செயலில் பா.ஜ.க. அரசு மூர்க்கத்தனமாக ஈடுபட்டுள்ளது.  கஸ்தூரி ரங்கன் குழுவின் வரைவு அறிக்கைக்கு, தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. கர்நாடகம், மராட்டியம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களும் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தன. உடனே மத்திய அரசு, இந்திதான் படிக்க வேண்டும் என்பது கட்டாயம் இல்லை; மாணவர்கள் விரும்புகின்ற மொழியைப் பயிலலாம் என்று வரைவு அறிக்கையில் திருத்தம் செய்துள்ளதாக அறிவித்து இருக்கின்றது. இது பா.ஜ.க. அரசின் ஏமாற்று வேலை என்பதை, தமிழக மக்கள் நன்றாக அறிவார்கள். ஏனெனில், மும்மொழிக் கொள்கையைச் செயல்படுத்த வேண்டும் என்பதில் பா.ஜ.க. அரசு முனைப்பாக இருக்கின்றது. விருப்பப் பாடமாகவும், மூன்றாவது மொழியாகவும் இந்தியை நுழைப்பதன் மூலம், தமிழ்நாட்டில் பேரறிஞர் அண்ணா அவர்கள் 1968 ஜனவரி 23 இல் பிரகடனம் செய்த இருமொழிக் கொள்கையைத் தகர்த்துவிட வேண்டும் என்று துடிக்கின்றது. தமிழ்நாட்டில் இந்தித் திணிப்புக்கு எதிராக, 1937 ஆம் ஆண்டில் இருந்து தொடர்ந்து 82 ஆண்டுகளாக திராவிட இயக்கம் போராடி வருகின்றது. மும்மொழித் திட்டத்தைப் புகுத்தவும், இந்தியைத் திணிக்கவும் பா.ஜ.க. அரசு முயன்றால், 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டம் மீண்டும் தமிழகத்தில் வெடிக்கும் என்று மறுமலர்ச்சி தி.மு.க. எச்சரிக்கை செய்கின்றது. எடப்பாடி பழனிச்சாமி அரசு, மும்மொழிக் கொள்கையை உறுதியாக எதிர்க்க வேண்டும்; தமிழகத்தில் இந்திக்கு இடம் இல்லை என்பதை திட்டவட்டமாக அறிவிக்க வேண்டும் என மறுமலர்ச்சி தி.மு.க. வலியுறுத்துகின்றது.

தீர்மானம் 7: பா.ஜ.க. அரசு, திறந்தவெளி அனுமதித் திட்டம் (Open Acreage Licensing Policy - OALP) என்னும் ஒற்றை உரிமம் வழங்கி, வேதாந்தா குழுமம், ஓ.என்.ஜி.சி. நிறுவனம் இரண்டும் காவிரி டெல்டாவில் ஹைட்ரோ கார்பன் ஆய்வை மேற்கொள்ள, மே 10, 2019 இல் மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அனுமதி அளித்து இருக்கின்றது. இதன் மூலம் காவிரிப் படுகையை இரு மண்டலங்களாகப் பிரித்து, மொத்தம் 274 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிரிவு-1ல் விழுப்புரம் மாவட்டம், புதுச்சேரி பகுதிகளில் 116 ஹைட்ரோ கார்பன் கிணறுகளும், பிரிவு-2ல் கடலூர் மாவட்டம் முதல் நாகப்பட்டினம் மாவட்டம் வரை உள்ள பகுதிகளில் 158 ஹைட்ரோ கார்பன் கிணறுகளும் அமைக்கப்படும். நீரியல் விரிசல் முறை (Hydrological Fracturing) எனும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பூமிக்கு அடியில் 3,500 அடி முதல் 5,000 அடி மற்றும் அதற்கும் கீழே 10,000 அடி வரையில் உள்ள எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை மேலே கொண்டு வருவதற்கு ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்கப்படும். இதற்காக, இந்தக் கிணறுகளில் பக்கவாட்டில் துளையிட்டு 2 கோடி லிட்டர் தண்ணீர் பூமிக்குள் செலுத்தப்படும்.

பூமிக்குள் தண்ணீருடன் 634 வகையான ரசாயனப் பொருட்கள் மணல் கலந்து மிக உயர்ந்த அழுத்தத்துடன் செலுத்தும்போது, அவை 5,000 அடி ஆழத்திற்கும், அதற்கு மேலும் சென்று, கீழே படிந்துள்ள எண்ணெய், ஹைட்ரோ கார்பன் போன்றவை மேலே எழும்பி வரும். அதனுடன் 2 கோடி லிட்டர் தண்ணீரில் 60 விழுக்காடு நீர், இரசாயனக் கலவையாக வெளியேற்றப்பட்டு, விளை நிலங்களில் வழிந்தோடும் நிலை ஏற்படும். இதனால் விளை நிலங்கள் சாகுபடித் திறனை இழந்து மலடாகும் ஆபத்து நேரிடும். நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவது மட்டும் அன்றி, நீரும் நஞ்சாகி, குடிநீருக்குக்கூட வழி இல்லாத நிலைமை ஏற்படும். காற்று மண்டலம் சீர்கேடு அடைந்து, சுற்றுச் சூழல் பாதிக்கப்படும்.

பூமிக்குள் செலுத்தப்படும் கோடிக்கணக்கான லிட்டர் வேதிப் பொருள்கள் கலந்த நீரில், மெத்தனால், ஹைட்ரஜன் புளுரைடு, கந்தக அமிலம் மற்றும் புற்று நோயை உருவாக்கும் பி.டெக்ஸ், காரீயம், பார்மால்டிஹைடு ஆகியனவும் இருப்பதால், மனிதர்களின் உடல்நலனும் பாதிக்கப்படும். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக காவிரிப் படுகையில் வேளாண் தொழிலில் ஈடுபட்டு இருக்கும் மக்கள், வாழ்வாதாரங்களை இழந்து சொந்த மண்ணில் இருந்து வெளியேறும் கொடுமைக்குத் தள்ளப்படுவார்கள். தமிழ்நாட்டின் நெற் களஞ்சியம், காவிரி பாசனப் பகுதி மாவட்டங்களில் பொதுமக்கள், விவசாயிகளின் கடும் எதிர்ப்பையும், கொந்தளிப்பையும் பொருட்படுத்தாமல், வேதாந்தா குழுமம், ஓ.என்.ஜி.சி. ஆகிய இரண்டு நிறுவனங்களும் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு மத்திய பா.ஜ.க. அரசு உரிமம் வழங்கி இருப்பது கடும் கண்டனத்திற்கு உரியதாகும்.

மக்களைப் பாதிக்கும் எந்தத் திட்டங்களுக்கும் அனுமதி தரமாட்டோம் என்று சொல்லிக்கொண்டே, ஹைட்ரோ கார்பன் திட்டத்தை முழு வேகத்துடன் செயல்படுத்த மத்திய அரசுக்கு எல்லா வகையிலும் துணைபோய்க் கொண்டு இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி அரசை, தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக, தன்னெழுச்சியாக போராடி வரும் மக்களைக் கைது செய்வதும், அச்சுறுத்தி வழக்குகள் போடுவதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. எனவே காவிரி படுகையைப் பாலைவனம் ஆக்கும் நாசகார ஹைட்ரோ கார்பன் திட்டங்களை, மத்திய பா.ஜ.க. அரசு முற்றாகக் கைவிட வேண்டும். இல்லையெனில், வரலாறு காணாத மக்கள் கொந்தளிப்பை மத்திய - மாநில அரசுகள் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் எச்சரிக்கின்றது.

தீர்மானம் 8: நெல்லை மாவட்டம், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட இரண்டு அணு உலைகள் இயங்கி வருகின்றன. இதில், எரிபொருளாகப் பயன்படுத்தப்படும் யுரேனியம் போன்ற பொருட்கள் அணுக் கழிவுகளாக, அணுஉலைக்குக் கீழே உள்ள குட்டையில் சேமிக்கப்பட்டு வருகின்றன. இவற்றை 8 ஆண்டுகளுக்கு மட்டுமே சேமிக்க முடியும்.எனவே, அணு உலையில் உருவாகும் புளுட்டோனியம் கழிவு, உலைக்கு வெளியே எடுக்கப்பட்டு, கூடங்குளம் வளாகத்திற்கு உள்ளேயே பாதுகாப்பாக சேமிக்கப்படும். இந்த செயல் முறைக்கு Away From Reactor (AFR) என்று பெயர் ஆகும். இது தற்செயலான ஏற்பாடுதான். எனவே அணுக் கழிவுகளை பாதுகாப்பாக சேமித்து வைத்திட, ‘ஆழ்தள வைப்பகம்’ (Deep Geological Repository -DGR) அமைக்கப்பட வேண்டும். அதற்காக, பூமிக்கு அடியில் கட்டுமானத்தை ஏற்படுத்த வேண்டும். அணுஉலை வளாகத்திலேயே இந்த DGR முறையில் ‘ஆழ்தள வைப்பகம்’ அமைக்கப்பட்டால், அது அணுகுண்டு உறங்கிக் கொண்டு இருப்பதற்குச் சமம். இரஷ்யாவில் செர்னோபில், ஜப்பானில் புகுஷிமா போன்று அணுஉலை விபத்து நேரிட்டால் தென் தமிழ்நாடு நாகசாகி, ஹிரோஷிமா போன்று பேரழிவைச் சந்திக்கும் நிலைமை ஏற்படும்.

அத்தகைய அபாயகரமான அணுக்கழிவு சேமிக்கும் ‘ஆழ்தள வைப்பக’த்தை கூடங்குளம் அணுஉலை வளாகத்திற்குள் அமைப்பதற்கு இந்திய அணுசக்திக் கழகம் ஆயத்தமாகி வருகின்றது. கூடங்குளம் அணு உலையில் இருந்து வெளியாகும் அணுக் கழிவுகள் மட்டும் அன்றி, நாட்டில் உள்ள மற்ற 22 அணுஉலைகளின் கழிவுகளையும் கொண்டுவந்து இங்கு சேமித்து வைக்கவும் திட்டமிடப்படுகின்றது. இதற்கான சுற்றுச் சூழல் தாக்கம் பற்றிய அறிக்கையை வரைய, நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில், ஜூலை 10, 2019 இல் மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தை மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கண் துடைப்புக்காக நடத்துகின்றது. கூடங்குளம் அணுஉலை அமைப்பதற்கான கருத்துரு, 1988 ஆம் ஆண்டு நவம்பர் 21 இல் ராஜீவ் காந்தி ஆட்சிக் காலத்தில் முன்வைக்கப்பட்ட போதே, நாடாளுமன்றத்தில் அதனைக் கடுமையாக எதிர்த்து வாதிட்டவர் கழகப் பொதுச்செயலாளர் வைகோ என்பதை நாட்டு மக்கள் அறிவார்கள்.

கூடங்குளத்தில் அணுக் கழிவு சேமித்து வைக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். மனித குலத்துக்குப் பேரழிவை ஏற்படுத்தும் அணுஉலைகளை கூடங்குளத்தில் நிரந்தரமாக மூட வேண்டும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் வலியுறுத்துகின்றது.

தீர்மானம் 9: ஒரே நாடு; ஒரே மதம்; ஒரே மொழி; ஒரே பண்பாடு என்பதை இலட்சியமாகக் கொண்ட இந்துத்துவ சனாதன சக்திகள், இந்தியாவில் அனைத்தையும் ஒற்றைத் தன்மை நிலைக்குத் தள்ளி எதேச்சதிகாரம் செலுத்தத் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது. அதனால்தான் நாடு முழுவதும் ஒரே வரி, ஒரே கல்விக்கொள்கை, ஒரே நுழைவுத் தேர்வு, ஒரே சுகாதாரக் கொள்கை என்பதை அறிவித்து, அந்தப் பட்டியலில் ‘ஒரே நாடு; ஒரே குடும்ப அட்டை’ எனும் திட்டத்தையும் சேர்த்துள்ளது. இதன்படி, இந்தியா முழுவதும் செயல்படுத்தப்பட்டு வரும் பொதுவிநியோகத் திட்டத்தை ஒருங்கிணைத்து, “81 கோடி மக்களுக்குக் குறைந்த விலையில் உணவுப் பொருள்கள் வழங்குவோம்” என்ற பெயரில் ‘ஒரே நாடு; ஒரே ரேசன்’ நடைமுறைப்படுத்தப்படும் என்று மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் அறிவித்து இருக்கின்றார். பொதுவிநியோகத் திட்டம், மத்திய - மாநில அரசுகளின் பொது அதிகாரப் பட்டியலில் இருந்தாலும், உணவுப் பொருள்கள் விநியோகம் செய்வதும், பொதுவிநியோகத் திட்டத்தை ஒழுங்குபடுத்துவதும், மக்களிடம் நேரிடையாக மாநில அரசுகள்தான் தொடர்புகொண்டு வருகின்றன. இந்நிலையில், மாநில அதிகாரங்களைப் பறித்து, இதில் ஆதிக்கம் செலுத்த முற்படுவது கூட்டு ஆட்சி முறைக்கு எதிரானதாகும். வட இந்தியாவில் இருந்து நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில், குறிப்பாக தமிழகத்தில் இலட்சக்கணக்கில் வந்து குடியேறும் மக்களை ஊக்கப்படுத்துகின்ற வகையில் இவ்வாறு குடும்ப அட்டை வழங்குவது விபரீத விளைவுகளையே ஏற்படுத்தும். எனவே ‘ஒரே நாடு; ஒரே குடும்ப அட்டை’ திட்டத்தை பா.ஜ.க. அரசு செயல்படுத்தக்கூடாது; தமிழக அரசும் இதனைக் கடுமையாக எதிர்க்க வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகின்றது.

தீர்மானம் 10:  நீதித்துறையில் உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற நீதிபதிகள் ‘கொலிஜியம்’ முறை மூலம் தேர்வு செய்யப்பட்டு, குடியரசுத் தலைவரால் நியமனம் செய்யப்படுகின்றனர். மாவட்ட நீதிபதிகள் மற்றும் சார்பு நீதிமன்ற நீதிபதிகள் உயர்நீதிமன்றத்தின் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். அதற்குக் கீழ் உள்ள உரிமையியல் நீதிபதி மற்றும் குற்றவியல் நடுவர்கள் போன்ற கீழமை நீதிபதிகள் மாநில தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டு, ஆளுநரால் நியமிக்கப்படுகின்றனர். ஆனாலும் அவர்களை கண்காணிக்கும் அதிகாரமும், பதவி நீக்கும் அதிகாரமும் தொடர்புடைய உயர்நீதிமன்றங்களின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. அதில் மாநில அரசுகள் தலையிட முடியாது. நடைமுறையில் உள்ள நீதிபதிகள் தேர்வு முறையை மாற்றி, தேசிய அளவில் இந்திய ஆட்சிப் பணி, இந்தியக் காவல் பணி ஆகியவற்றைப் போன்று இந்திய நீதித்துறைப் பணி என்ற புதிய அமைப்பை ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.

தேசிய அளவில் போட்டித் தேர்வுகளை நடத்தி, நீதிபதிகளைத் தேர்வு செய்வது, இந்தியாவின் எந்தப் பகுதியிலும் அவர்களை நியமிப்பதுதான் பா.ஜ.க.வின் நோக்கமாகும். மத்தியப் பணியாளர் தேர்வாணையம் போன்று தேசிய நீதித்துறைப் பணியாளர் தேர்வாணையத்தை உருவாக்கி, அதன் மூலம் கீழமை நீதிமன்றங்களுக்கான நீதிபதிகளைத் தேர்வு செய்ய வேண்டும் என்பது மத்திய அரசின் திட்டம் ஆகும். நீதிபதிகள் நியமனத்தில் மாநில அரசுகளின் அதிகாரங்களை முற்றிலுமாகப் பறித்துவிட்டு, நாடு முழுவதும் நீதிபதிகள் நியமனத்தை மத்திய அரசே மேற்கொள்ளும் திட்டம் ஏற்கவே முடியாத கண்டனத்துக்கு உரியது ஆகும். நாட்டின் நிர்வாகம் முழுமையாக மத்திய அரசின் கைப்பிடியில் குவிக்கப்படுவது என்பது ஏதேச்சதிகாரத்திற்கு வழி வகுக்கும். எனவே இந்திய நீதித்துறை பணி (IJS) உருவாக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று மறுமலர்ச்சி தி.மு.க. வலியுறுத்துகிறது.

தீர்மானம் 11: தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் நகரில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு, தண்ணீர் விநியோகத்திற்கு ரேசன் முறை கொண்டுவரப்பட்டு இருக்கிறது. ஒரு மனிதனுக்கு சுமார் 150 லிட்டர் தண்ணீர் ஒரு நாளைய தேவை. ஆனால் கேப்டவுன் அரசு நிர்வாகம் ஒருவருக்கு 80 லிட்டர் தண்ணீர் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. தென்னாப்பிரிக்கா கேப்டவுன் நகரம் போன்ற நிலைமைக்கு சென்னை மாநகரம் தள்ளப்பட்டு இருக்கிறது. சென்னையின் குடிநீர் ஆதாரமாக உள்ள பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் போன்ற ஏரிகளில் நீர் இருப்பு குறைந்துபோனதால் சென்னை மாநகரம் தண்ணீருக்குத் தவிக்கும் நிலை உருவாகி இருக்கிறது. தமிழக அரசின் அலட்சியத்தால் சென்னை மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் மக்கள் குடிநீருக்காக அலையும் கொடுமை தொடர்கிறது. அதிமுக அரசு 2011 முதல் 2016 ஆம் ஆண்டு வரை ரூபாய் 27,988 கோடியை குடிநீருக்காக ஒதுக்கியது. 2017 முதல் 2019 வரை ரூபாய் 37 ஆயிரம் கோடியை ஒதுக்கி இருக்கிறது. ஆனால், இவை எவ்வாறு செலவிடப்பட்டது என்று தெரியவில்லை. தமிழகத்தில் வரலாறு காணாத குடிநீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுவதற்கு தமிழக அரசு நிர்வாகத்தின் அலட்சியப்போக்கே காரணமாகும். எடப்பாடி பழனிச்சாமி அரசு போர்க்கால அடிப்படையில் தண்ணீர் பிரச்சினையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இக்கூட்டம் வலியுறுத்துகிறது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Vaiko Mdmk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment