ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனமான ஐவாயா, பலூன் விமானம் மூலம் மக்களை விண்வெளிக்கு சுற்றுலா அழைத்து செல்லும் அசத்தல் திட்டத்தை அறிவித்துள்ளது. வடக்கு ஜப்பானில் உள்ள சப்போரோவை தளமாகக் கொண்ட ஐவாயா கிகன் என்ற நிறுவனம் 2012 முதல் இந்த திட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. தற்போது பயணிகள் அமர்ந்து பயணிக்கும் பலூன் விமானத்தின் மாதிரியை நிறுவனம் வெளியிட்டுள்ளது.
Advertisment
திட்டம் குறித்து நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கெய்சுகே ஐவாயா கூறுகையில், பலூன் விமானத்தில் பயணிக்க பயணிகள் கோடீஸ்வரர்களாகவோ, நிபுணர்களாகவே, பயிற்சி பெற்றவராகவோ இருக்க வேண்டிய அவசியமில்லை. இந்த திட்டத்தின் நோக்கம் அனைவருக்கும் விண்வெளி சுற்றுலா என்பதே ஆகும். பலூன் விமானம் பாதுகாப்பானது, அனைவரும் பயன்பெறும் வகையில் குறைந்த விலையில் இருக்கும் என்றும் கூறினார். மேலும் இது விண்வெளி பயணங்களை ஜனநாயகப்படுத்தும் முயற்சி என்றும் கூறினார்.
பூமியின் வளைவைத் தெளிவாகக் காணக்கூடிய 25 கிலோமீட்டர் (15 மைல்) தூரம் வரை பறக்கும் திறன் கொண்ட மற்றும் காற்று புகாத 2 இருக்கை பலூன் கேபினை ஐவாயா நிறுவனம் உருவாக்கியுள்ளது. பயணிகள் விண்வெளியில் தங்கியிருக்க மாட்டார்கள். பலூன் தோராயமாக ஸ்ட்ராடோஸ்பியரின் நடுப்பகுதி வரை மட்டுமே செல்லும் என்று நிறுவனம் விளக்கியுள்ளது.
கட்டணம் எவ்வளவு?
ராக்கெட் அல்லது ஹாட் ஏர் பலூனைப் போலல்லாமல், ஐவாயா கிகன் பலூன் ஹீலியம் மூலம் பயன்படுத்தப்படுகிறது. அதனால் இதை மீண்டும் பயன்படுத்தப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலூன் விமானத்தில் ஒரு விமானி மற்றும் பயணி இருப்பர். ஹொக்கைடோவில் உள்ள பலூன் விமானத் தளத்தில் இருந்து புறப்பட்டு, 2 மணி நேரத்தில் 25 கிலோமீட்டர் (15 மைல்) உயரத்தை எட்டி அங்கு 1 மணி நேரம் நிலைநிறுத்தப்பட்டு பின்னர் பூமிக்கு திரும்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. டிரம் வடிவ பிளாஸ்டிக் கேபின் 1.5 மீட்டர் (4.9 அடி) விட்டம் கொண்டது ஆகும். கேபினில் உள்ள இருக்கும் பயணி விண்வெளியைச் சுற்றிப் பார்க்க மற்றும் அங்கிருந்து கீழே பூமியைப் பார்க்க வசதியாக பெரிய ஜன்னல்களைக் கொண்டுள்ளது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
விண்வெளிப் பயணத்திற்கான விண்ணப்பங்கள் நேற்று (செவ்வாய்க்கிழமை) முதல் தொடங்கப்பட்டுள்ளது. அக்டோபரில் தொடங்க உள்ள பலூன் விண்வெளி சுற்றுலாவுக்கு இந்திய மதிப்பில் 6 லட்சம் ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/