100 பந்து கிரிக்கெட் மேட்ச்! எதிர்கால கிரிக்கெட்டா? எதிர்க்க வேண்டிய கிரிக்கெட்டா?

உலகிலேயே, மிக மெதுவாக நடத்தப்படும் டி20 தொடர் என்றால் அது 'ஐபிஎல்' தொடர் தானாம்.

ஆசைத் தம்பி

வில்ஸ் என்பது கிரிக்கெட்டாக மாறியது,

கிரிக்கெட் என்பது ஐந்து நாட்கள் ஆடும் ஆட்டமாக இருந்தது,

ஐந்து நாட்கள் ஆடும் ஆட்டத்தில் இருந்து 60 ஓவர்கள் கொண்ட ஒருநாள் போட்டி பிறந்தது,

60 ஓவர்கள் 50 ஓவர்களாக குறைக்கப்பட்டது,

50 ஓவர் எனும் ஒருநாள் போட்டியில் இருந்து டி20 எனும் புதிய களம் அப்டேட் ஆனது,

அந்த டி20 யின் 2.0 வெர்ஷனாக 100 பந்துகள் கொண்ட ஆட்டம் இப்போது அறிமுகமாகிறது.

ஆம்! இங்கிலாந்து நாட்டின் கவுண்டி கிரிக்கெட்டில் 100 பந்துகள் கொண்ட கிரிக்கெட் தொடர் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்கான அனுமதியை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் வழங்கியுள்ளது. 2020 ஆம் ஆண்டு, முதல் 100 பந்துகள் கொண்ட தொடர் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அது எப்படி 100 பந்து கிரிக்கெட் மேட்ச் சாத்தியம்?

20 ஓவர்கள் என்றால் 120 பந்துகள். 15 ஓவர்கள் என்றால் 90 பந்துகள். ஒரு ஓவருக்கு ஆறு பந்துகள் தானே. கணக்கு உதைக்குதே! இது எப்படி சாத்தியம்? என தலையை பிய்த்துக் கொண்டவர்களுக்கு, இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய இயக்குனர் ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் புதுவிதமான பதில் ஒன்றை தருகிறார்.

15 ஓவர்கள் எப்போதும் போல் 6 பந்துகள் கொண்டதாக இருக்குமாம். ஆனால், கடைசி ஓவர் 10 பந்துகள் கொண்டதாக இருக்குமாம். ஆக, 90 + 10 = 100. அவ்வளவுதான் கணக்கு என்கிறார் ஸ்ட்ராஸ்.

இந்த ஓவர்கள் கணக்குடன் எட்டு அணிகள் பங்கேற்கும் ‘The Hundred’ தொடர் 2020ஆம் ஆண்டு நடத்தப்படும் என்கிறார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “நாங்கள் முயற்சி செய்யும் இந்தத் திட்டம் புதிய ரசிகர்களை கிரிக்கெட்டை நோக்கி ஈர்ப்பதற்காகத் தானே தவிர, பாரம்பரிய கிரிக்கெட் ரசிகர்களுக்காக அல்ல. அவர்களும் எங்களுக்கு வேண்டும், மாற்றத்தை விரும்பும் ரசிகர்களும் எங்களுக்கு வேண்டும்.

முடிந்தவரை கிரிக்கெட் போட்டிகளை எளிதாக்கி, அதனை விரைவில் ரசிகர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த முயற்சி எடுக்கிறோம். ஏனெனில், டி20 போட்டிகள் நான்கு மணி நேரம் வரை நடக்கிறது. ஆனால், இந்த ‘100 பந்து’ கிரிக்கெட் போட்டி, மிக விரைவாக முடிந்துவிடும். குழந்தைகள் சீக்கிரம் படுக்கைக்கு சென்றுவிடலாம்” என்று விளக்கம் கொடுக்கிறார்.

போட்டி நடக்கும் நேர காலத்தை குறைத்து கிரிக்கெட்டை எளிதாக்கி, நிறைய புதிய ரசிகர்களை ஈர்க்க வேண்டும் என்பதே இவர்கள் இந்தத் தொடரை நடத்துவதற்கு சொல்லும் காரணமாக இருக்கிறது. அப்படியெனில், டி20 தொடர்களை அதிகம் ரசிக்கும் இந்தியா போன்ற நாடுகளில் நடத்தப்படும் டி20 போட்டிகளின் நேர கணக்கீடு பற்றி தெரிந்து கொள்ள நாம் சில தரவுகளை ஆராய்ந்தோம். அதில் சில சுவாரஸ்ய தகவல்கள் நமக்கு கிடைத்தன.

அது என்ன தெரியுமா?

உலகிலேயே, மிக மெதுவாக நடத்தப்படும் டி20 தொடர் என்றால் அது ‘ஐபிஎல்’ தொடர் தானாம். இதுகுறித்து, கிரிக்கெட் புள்ளியியல் நிபுணர் ரிக் ஃபின்ளே தரும் புள்ளி விவரத்தின் படி, கடந்த 2017 மற்றும் 2017-18 ஆண்டில் ஐபிஎல் டி20 தொடரில், ஒரு அணி பந்துவீச எடுத்துக் கொள்ளும் மொத்த கால நேரம் 106 நிமிடங்களாம்.

இந்தியன் பிரீமியர் லீக் – 106 நிமிடங்கள்

கரீபியன் பிரீமியர் லீக் – 105 நிமிடங்கள்

சர்வதேச டி20 போட்டிகள் – 98 நிமிடங்கள்

பாகிஸ்தான் சூப்பர் லீக் – 97 நிமிடங்கள்

நியூசிலாந்து உள்ளூர் டி20 தொடர் – 93 நிமிடங்கள்

பிக்பேஷ் லீக் – 90 நிமிடங்கள்

தென்னாப்பிரிக்க உள்ளூர் டி20 தொடர் – 88 நிமிடங்கள்

அயர்லாந்து உள்ளூர் டி20 தொடர் – 87 நிமிடங்கள்

நாட் வெஸ்ட் பிளாஸ்ட தொடர் – 85 நிமிடங்கள்

என்று அவர் கணக்கிடுகிறார். அதன்படி, இந்த ‘100 பந்துகள் கிரிக்கெட்’ இவையனைத்தையும் ஓரம்கட்டி, விரைவாகவும், சுவாரஸ்யமான தொடராகவும் இருக்கும் என்று கூறுகிறது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்.

சரி இதனால் கிரிக்கெட் தரம் குறையாதா?

நிச்சயமாக குறையாது என்கின்றனர் சில கிரிக்கெட் ஆய்வாளர்கள். என்னதான் டிசைன் டிசைனாக கிரிக்கெட் மாறினாலும், கிரிக்கெட் அதன் ஒரிஜினாலிட்டியை இழக்காது என்கின்றனர். டெஸ்ட் போட்டிகள் தான் ஒரு கிரிக்கெட் வீரனின் உண்மையான ஆற்றலை, தகுதியை வெளிக் கொண்டு வருகிறது. வீரர்கள் டி20ல் வெளுத்து வாங்கினாலும், டெஸ்ட் போட்டியில் தம் கட்டி நின்று அடிப்பதையே பெருமையாக இன்றும் கருதுகின்றனர். டெஸ்ட் போட்டிக்கு என்று இன்றும் திரளான ரசிகர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள். கிரிக்கெட் நவீனப்பட வேண்டியது அவசியம் தான். அதற்காக 100 பந்துகள் தொடரை வரவேற்கலாம் என்கின்றனர்.

அதேசமயம், ரசிகர்கள், விமர்சகர்கள் என பலரும், கிரிக்கெட்டில் ஓவர்கள் மட்டும் சுருங்கவில்லை, கிரிக்கெட்டும் இதுபோன்ற கண்டுபிடிப்புகளால் சுருங்கிக் கொண்டே செல்கின்றன என தங்களது அச்சங்களை பதிவிடுகின்றனர்.

×Close
×Close