/indian-express-tamil/media/media_files/2025/09/17/arjun-deshwal-thalaivas-bengaluru-bulls-pkl-season-12-match-36-report-in-tamil-2025-09-17-10-49-12.jpg)
Pro Kabaddi League Season 12: கடைசி 10 நிமிடங்களில் இரு அணிகளும் வெற்றிகரமான டேக்கிள்களை எடுத்தன. இருப்பினும், தமிழ் தலைவாஸ் ரைடர்களும், டிஃபென்ஸ் வீரர்களும் சிறப்பாக செயல்பட அணி புள்ளிகளை விறுவிறுவென எடுத்தது.
Tamil Thalaivas vs Bengaluru Bulls PKL Match 36 Highlights: 12-வது புரோ கபடி லீக் தொடரில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 9 மணிக்கு ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் உள் அரங்க மைதானத்தில் நடந்த 36-வது போட்டியில் அர்ஜுன் தேஷ்வால் தலைமையிலான தமிழ் தலைவாஸ் யோகேஷ் தஹியா தலைமையிலான பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின. மிகவும் பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அனல் பறந்தது. முதல் 10 நிமிடங்கள் முழுவதும் இரு அணிகளும் தீவிரமாக விளையாடிய நிலையில், தமிழ் தலைவாசுக்கு அட்டகாசமான தொடக்கம் கிடைத்தது.
குறிப்பாக, ரோனக்கின் கூர்மையான டேக்கிள்கள் பெங்களூரு புல்ஸ் ரெய்டர்களை திணற செய்தது. ஒரு சில நிமிடங்களில் சுதாரித்துக் கொண்ட பெங்களூரு புல்ஸ் அகமது ரெசா அஸ்காரி மற்றும் அலிரேசா மிர்சியான் ஆகியோரை கட்டவிழ்த்து விட இருவரும் சில புள்ளிகளை மாறி மாறி எடுத்தனர். பதிலுக்கு தமிழ் தலைவாசின் கேப்டன் அர்ஜுன் தேஷ்வால் புள்ளிகளை எடுத்து அசத்தினார்.
இந்த இரு அணிகளும் ஆரம்பத்தில் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற அவசரத்தைக் காட்டிய நிலையில், முதல் 10 நிமிடங்களில், தமிழ் தலைவாஸ் அணி 9-7 என முன்னிலையைப் பெற்றது. எனினும், போட்டி எந்த திசையிலும் மாறக்கூடும் என்பது போல் தோன்றியது. தொடர்ந்து நடந்த முதல் பாதியின் இரண்டாம் கட்டத்தில் பெங்களூரு புல்ஸ் அதிரடியாக புள்ளிகளை அள்ளியது. ஆட்டத்தை மாற்றிய ஆல் அவுட் உட்பட அலிரேசாவின் தரமான ரெய்டு தமிழ் தலைவாஸ் வீரர்களை மனம் உடையச் செயதது. அத்துடன் ஆட்டத்தில் அழுத்தமும் எகிறியது.
பெங்களூரு புல்ஸ் அணியின் கணேஷா ஹனமந்தகோல் ஒரு பக்கம் புள்ளிகளை அள்ள, யோகேஷ் மற்றும் அகமது ரெசா டிபென்சில் மிரட்டினர். இதனால் தமிழ் தலைவாஸ் அணி வேகத்தைத் தக்கவைக்க சிரமப்பட்டது. அதேநேரத்தில், செல்ஃப் அவுட்களால் அந்த அணி அதிகம் சிரமப்பட்டது. இந்த செல்ஃப் அவுட்டால் மூலம் பெங்களூரு அணிக்கு 3 புள்ளிகளை 'சும்மா வச்சுக்கோங்க' என்று கொடுத்தனர் தமிழ் தலைவாஸ்.
அட்டாக் செய்து ஆடிய அர்ஜுன், டிபென்சில் மீண்டும் செய்த தவறை திரும்ப செய்த நரேந்தர் கண்டோலா இருவரும் ரெய்டிங்கில் சொதப்பினர். அவர்களை கைப்பிடியாக பிடித்துக் கொண்டு இருந்தனர் பெங்களூரு டிஃபென்ஸ். பாதி நேரத்தில், பெங்களூரு புல்ஸ் 20-14 என்ற முன்னிலையுடன் ஆட்டத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றியது. அவர்களின் ஆக்ரோஷமான ஆட்டம் 6 புள்ளிகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற உதவியது. இதனை டேக்கிள் செய்ய பலே ஐடியாவுடன் வந்ததது தமிழ் தலைவாஸ். அவர்களின் முன்னணி வீரரான ஹிமான்ஷு யாதவ் களம் புகுந்தார். அவரது உதவியுடன் சிறப்பான டேக்கிள்களை செய்தனர்.
குறிப்பாக, தமிழ் தலைவாஸிடம் ஆட்டம் காட்டி வந்த அலிரேசா மற்றும் கணேஷா உள்ளிட்டவர்களை லாவகமாக மடக்கிப் பிடித்தனர். அதேநேரத்தில், அர்ஜுன் தனது தொடர்ச்சியான ஆக்ரோஷமான ரெய்டுகளை செய்து மிரட்டி வந்தார். அவர் சென்றபோதெல்லாம் புள்ளிகளுடன் திரும்பியது அணி கடகடவென புள்ளிகளை குவிக்க உதவியது. அத்துடன் தனது ஒரே ஆட்டத்தில் 10 புள்ளிகளையும் பெற்று அசத்தினார். பின்னர் தலைவாஸ் அணி டைம்-அவுட்டுக்கு சற்று முன்னர் தங்களை ஆல் அவுட் எடுத்த பெங்களூருவை ஆல் அவுட் எடுத்து பதிலடி கொடுத்தது. அதிலும் அலிரேசாவுக்கு நிதேஷ் குமார் போட்ட கிடுக்குபிடியால் சிக்கிய அந்த அணி அதன்பிறகு முன்னிலை எடுக்க முடியவில்லை.
கடைசி 10 நிமிடங்களில் இரு அணிகளும் வெற்றிகரமான டேக்கிள்களை எடுத்தன. இருப்பினும், தமிழ் தலைவாஸ் ரைடர்களும், டிஃபென்ஸ் வீரர்களும் சிறப்பாக செயல்பட அணி புள்ளிகளை விறுவிறுவென எடுத்தது. கணேஷாவும் அலிரேசாவும் சிறப்பாக ஆடிய இருந்தாலும் அவர்களால் தங்களது அணியை இறுதி கோட்டை தொட வைக்க முடியவில்லை. ஆரம்பத்தில் சொதப்பிய தமிழ் தலைவாஸ் டிஃபென்ஸ் கடைசி நிமிடங்களில் சிறப்பாக செயல்பட்டு திருப்பத்தை கொடுத்தனர். இதேபோல், அணியை முன்னின்று வழிநடத்திய அர்ஜுன் தேஷ்வால் தீயாய் செயல்பட்டு அணிக்கு பெரும் திருப்பு முனையை வழங்கினார். இறுதியில் 35-29 என்கிற புள்ளிகள் கணக்கில் பெங்களூரு புல்ஸ் அணியின் கொம்புகளை மடக்கி தரையில் வீழ செய்தது தமிழ் தலைவாஸ்.
இந்தப் போட்டியைத் தொடர்ந்து தமிழ் தலைவாஸ் வருகிற 19 ஆம் தேதி தெலுங்கு டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. தொடக்க ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்சை பந்தாடிய தமிழ் தலைவாஸ் மீண்டும் அதையே செய்யும் என ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us