Asia Cup 2022 Super 4 Full schedule Tamil News: 15-வது ஆசிய கோப்பை போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்று வருகிறது. 6 அணிகள் கலந்துகொண்ட இத்தொடருக்கான லீக் சுற்று ஆட்டங்கள் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், இன்று முதல் சூப்பர் “4” சுற்று போட்டிகள் நடக்கவுள்ளன. முன்னதாக நடந்த லீக் சுற்றில், ‘பி’ பிரிவில் இடம்பிடித்திருந்த ஆப்கானிஸ்தான் அணி வங்க தேசம் மற்றும் இலங்கை அணிகளை வீழ்த்தி முதலாவது அணியாக சூப்பர் “4” சுற்றுக்கு முன்னேறியது. இதேபோல், ‘ஏ’ பிரிவில் இடம்பிடித்திருந்த இந்தியா ஹாங்காங் மற்றும் பாகிஸ்தான் அணிகளை தோற்கடித்து சூப்பர் “4” சுற்றுக்கு தகுதி பெற்றது. இதன்பிறகு, வங்க தேசத்தை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இலங்கை அணியும், ஹாங்காங்கை 155 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய பாகிஸ்தான் அணிகளும் சூப்பர் “4” சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.
இந்நிலையில், இன்று முதல் தொடங்கும் சூப்பர் “4” சுற்று ஆட்டத்தில், ஆப்கானிஸ்தான் - இலங்கை அணிகள் மோதுகின்றன. ஏற்கனவே நடந்த லீக் சுற்று ஆட்டத்தில் ஆப்கான் அணியுடன் தோல்வி கண்ட இலங்கை அணி அதற்கு இன்றைய ஆட்டத்தில் பதிலடி கொடுக்குமா என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.
இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதல்
நடப்பு ஆசிய கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் 3 முறை சந்திக்கும் என்று கணிக்கப்பட்டது. அதன்படி, தற்போது 2வது முறை அந்த அணி இந்தியாவை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. கடந்த முறை இவ்விரு அணிகள் மோதிய லீக் சுற்று ஆட்டம் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. துபாய் மைதானத்தில் குவிந்திருந்த ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்றிருந்தனர். இந்த நிலையில், நாளை நடக்க இருக்கும் சூப்பர் “4” சுற்றுக்கு ஆட்டத்திற்கும் ரசிகர்கள் அதே எதிர்பார்ப்புடனே இருக்கிறார்கள்.
நாளை செப்டம்பர் 4 ஆம் தேதி இரவு 7:30 மணிக்கு தொடங்கும் இந்தியா - பாகிஸ்தான் மோதும் ஆட்டம் அதே துபாய் மைதானத்தில் தான் நடக்கிறது. முன்னதாக நடந்த லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை இந்தியா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது. அந்த ஆட்டத்தில் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ஹர்திக் பாண்டியா 33 ரன்கள் எடுத்து தனது ஆல்ரவுண்டர் திறமையால் அணியின் வெற்றிக்கு உதவி செய்து ஜொலித்தார். இதேபோல், முன்னாள் கேப்டன் விராட் கோலி மற்றும் ஜடேஜா 35 ரன்கள் எடுத்து இருந்தனர். பந்துவீச்சில் மிரட்டிய புவனேஷ்வர் குமார் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.
ஏற்கனவே, லீக் சுற்றில் பாகிஸ்தான் அணியை பந்தாடிய இந்திய அணி அதே உத்வேகத்துடனும், உற்சாகத்துடனும் களமிறங்கும். அதேவேளையில் பாகிஸ்தான் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்கவே தீவிரம் காட்டும். இதனால், இவ்விரு அணிகள் மோதும் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.
ஜடேஜா விலகல்
பாகிஸ்தான் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 29 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளை தெறிக்க விட்டு 35 ரன்கள் எடுத்த சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா, முழங்கால் காயம் காரணமாக நடப்பு ஆசியக் கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார். அணியில் அவருக்கு பதிலாக அக்சர் படேல் சேர்க்கப்பட்டுள்ளார். இரண்டு வீரர்களும் ஒரே மாதிரியான திறன்களைக் கொண்டிருப்பதால், ஜடேஜாவின் விலகல் அணிக்கு பெரிய பின்னடைவை கொடுக்கப்போவதில்லை.
ஆசிய கோப்பை 2022 சூப்பர் 4 அணிகள்:
- ஆப்கானிஸ்தான்,
- இந்தியா,
- இலங்கை,
- பாகிஸ்தான்
ஆசிய கோப்பை 2022 சூப்பர் 4 சுற்று முழு அட்டவணை பின்வருமாறு:
செப்டம்பர் 3 - ஆப்கானிஸ்தான் vs இலங்கை - ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியம், ஷார்ஜா - இரவு 7:30
செப்டம்பர் 4 - இந்தியா vs பாகிஸ்தான் - துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம், துபாய் - இரவு 7:30
செப்டம்பர் 6 - இலங்கை vs இந்தியா துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம், துபாய் - இரவு 7:30
செப்டம்பர் 7- பாகிஸ்தான் vs ஆப்கானிஸ்தான் துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம், துபாய் இரவு 7:30
செப்டம்பர் 8 - இந்தியா vs ஆப்கானிஸ்தான் துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம், துபாய் இரவு 7:30
செப் 9 இலங்கை vs பாகிஸ்தான் துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம், துபாய் இரவு 7:30
செப்டம்பர் 11 TBC vs TBC, இறுதிப்போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம், துபாய் இரவு 7:30
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil