Advertisment

வார்னர் இல்லாத ஆஸ்திரேலிய அணி : தடுமாறுமா? தப்பி பிழைக்குமா?

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டகாரர் டேவிட் வார்னர் விலகியுள்ளார்.

author-image
WebDesk
New Update
வார்னர் இல்லாத ஆஸ்திரேலிய அணி : தடுமாறுமா? தப்பி பிழைக்குமா?

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரில் கடந்த 17-ந் தேதி அடிலெய்டில் பகல் இரவு போட்டியாக நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.

Advertisment

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் வரும் 26-ந் தேதி நடைபெறுகிறது. கிறிஸ்துமஸ் தினத்துக்கு அடுத்த நாள் நடைபெறும் இந்த போட்டி பாக்ஸிக் டே டெஸ்ட் என்று அழைக்கப்படுகிறது. இந்த போட்டியில் இருந்து ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டகாரர் டேவிட் வார்னர் மற்றும் ஆல்ரவுண்டர் சீன் அபார்ட் காயம் காரணமாக விலகியுள்ளனர்.

வார்னர் இல்லாத ஆஸ்திரேலியா :

ஒருநாள் போட்டித் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் அரைசதம் (69, 83) ரன்கள் குவித்த வார்னர் 2-வது போட்டியில், காயமடைந்து பாதியில் வெளியேறினார். தொடர்ந்து 3-வது போட்டியில் வார்னர் இல்லாத ஆஸ்திரேலிய அணி தோல்வியடைந்த நிலையில், அதன்பிறகு நடைபெற்ற டி20 தொடரையும் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் இழந்தது. இந்நிலையில், டி20 தொடரில் விளையாடாத வார்னர் டெஸ்ட் போட்டியில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் கடந்த 17-ந் தேதி தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடவில்லை. தற்போது 2-வது டெஸ்ட் போட்டியில் இருந்தும் விலகியுள்ள அவர் இந்த டெஸ்ட் தொடரில் பங்கேற்பாரா என்பது குறித்து சந்தேகம் எழுந்துள்ளது.

டெஸ்ட் போட்டியில் வார்னர்

தற்போது 34 வயதான டேவிட் வார்னர் இதுவரை 84 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 24 சதங்களும், 30 அரைசதங்களும் பதிவு செய்துள்ளார். இதில் இந்தியாவுக்கு எதிராக 4 சதங்களை அடித்துள்ள அவர், கடந்த 2012-ம் ஆண்டு பெர்த் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 180 ரன்கள் குவித்ததே இந்திய அணிக்கு எதிரான இவரது அதிகபட்ச ஸ்கோராகும்.

இதில் இந்தியாவுக்கு எதிராக அவர் சதமடித்த 4 போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி 3 வெற்றிகளையும் ஒருபோட்டியில் டிராவும் கண்டுள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்ற ஒரு டெஸ்ட் போட்டியில் இரு இன்னிங்சிலும் சதமடித்து அசத்தினார்.

ஓராண்டு கிரிக்கெட் விளையாட தடை:

தொடர்ந்து ஆஸ்திரேலிய அணியில் ஆதிக்கம் செலுத்தி வந்த வார்னர் கடந்த 2018-ம் ஆண்டு தென்ஆப்பரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், பந்தை சேதப்படுத்திய வழக்கில் சிக்கி ஒரு வருடம் தடை விதிகக்ப்பட்டார். அவருடன் முன்னாள் கேப்டன் ஸ்மித் மற்றும் இளம் வீரர் பான் கிராப்ட் ஆகியோருக்கும் தடை விதிக்கப்பட்டது.

அப்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. ஆனாலும் அப்போது வார்னர் இல்லாததால் இந்திய அணி எளிதாக வெற்றி பெற்றுள்ளதாக ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர்கள் பலர் தங்களது கருத்தக்களை தெரிவித்தனர்.

இந்திய மண்ணில் வார்னரின் டெஸ்ட்

அதேபோல் இப்போதும் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ள இந்திய அணி தொடரை கைப்பற்றும் என இந்திய ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். பொதுவாக சுழற்பந்து வீச்சில் திணறும் வார்னர் இந்திய வீரர் அஸ்வின் மற்றும் ஜடேஜா பந்துவீச்சில் பலமுறை தனது விக்கெட்டை பறிகொடுத்துள்ளார். எப்போதும் ஆஸ்திரேலியாவில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வரும் வார்னர், இந்திய மண்ணில் கொஞ்சம் தடுமாறத்தான் செய்துள்ளார்.

இந்திய மைதானங்கள் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால், அவர் ரன்கள் குவிக்க திணறியுள்ளார். இதில் அவர் இந்திய மண்ணில் ஒரு சதம் கூட பதிவு செய்யவில்லை. ஆனால் ஆஸ்திரேலிய ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் இந்தியாவின் ஆஸ்திரேலிய பயணம் கொஞ்சம் கடினமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது காயம் காரணமாக டேவிட் வார்னர் விலகியது இந்திய அணிக்கு சற்று ஆறுதல் அளிக்கும் விஷயமாக உள்ளது.

தற்போது இந்தியா – ஆஸ்திரேலியா டெஸ்ட்

இந்நிலையில், அடிலெய்டில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்து. வார்னர் இல்லாத நிலையில், அந்த இடத்தை நிரப்ப களமிறக்கப்பட்ட ஜோஸ் பர்ஸ்ன் முதல் இன்னிங்சில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும், இரண்டாவது இன்னிங்சில் 53 ரன்கள் குவித்து வார்னரின் இடத்தில் களமிறங்க தனக்கு மற்றொரு வாய்ப்பை ஏற்படுத்திக்கொண்டார். இதனால் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் வார்னர் இடத்தை பர்ஸ்ன் நிரப்புவார் என எதிர்பார்க்கப்டுகிறது.

இந்நிலையில், முதல் போட்டியில் விளையாடாத வார்னர், 2-வது போட்டியிலும் விலகியுள்ளார். காயத்திற்காக தீவிர சிகிச்சை பெற்று வரும் அவர், ஜனவரி 7 ஆம் தேதி தொடங்கும் 3-வது டெஸ்ட் போட்டிக்கு தயாராவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 2-வது டெஸ்ட் போட்டியில் வார்னர் இல்லாதது ஆஸ்திரேலிய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தினாலும், இந்திய அணிக்கு சற்று ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா அணிக்காக பல போட்டிகளில் வெற்றியை தேடி கொடுத்த டேவிட் வார்னர் காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இதுவரை களமிறங்காத நிலையில், மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில், வார்னர் இல்லாத ஆஸ்திரேலிய அணி தடுமாறுமா அல்லது தப்பி பிழைக்குமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

ஆனாலும் முதல் போட்டியில் வெற்றி பெற்ற உற்சாகத்தில் ஆஸ்திரேலிய அணி அடுத்த போட்டியில் உற்சாகத்துடன் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
India Vs Australia David Warner
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment