உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்: தொடரும் சிந்துவின் இறுதிப் போட்டி துயரம்!

21-19, 21-10 என்ற செட் கணக்கில் சிந்து தோல்வி

ஆசைத் தம்பி

பிவி சிந்து: சீனாவின் நான்ஜிங் நகரில் கடந்த ஜூலை 30ம் தேதி முதல் உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் தொடங்கி நடந்து வருகிறது. இதில், மகளிர் ஒற்றையர் பிரிவில், இன்று நடந்த இறுதிப் போட்டியில்  ஸ்பெயினின் கரோலினா மரினிடம் இந்தியாவின் பி.வி.சிந்து தோல்வி அடைந்தார்.

பி.வி.சிந்து கடந்து வந்த பாதை:

இந்த உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில், முதல் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் 3-ம் நிலை வீராங்கனையான இந்தியாவின் பி.வி.சிந்து, 9-ம் நிலை வீராங்கனையான கொரியாவின் சங் ஜி ஹைனை எதிர்த்து விளையாடினார். சுமார் 42 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சிந்து 21-10, 21-18 என்ற நேட் செட்டில் வெற்றி பெற்று கால் இறுதிக்கு முன்னேறினார்.

காலிறுதிப் போட்டியில், ஜப்பானின் நோசொமி ஒக்குஹாரா-வை சிந்து எதிர்கொண்டார். ஆட்டத்தின் முதல் கேமில், துவக்கத்தில் பின்தங்கி இருந்த சிந்து, பின்பு 11-10, என முதன் முறையாக முன்னிலை பெற்றார். அதை தொடர்ந்து இரண்டு புள்ளிகள் முன்னிலையோடு தொடர்ந்து முன்னேறிய அவர், 21-17 என முதல் செட்டை கைப்பற்றினார்.

இரண்டாவது கேமில், ஒக்குஹாரா 5-0 என பெரிய லீடிங்கில் இருக்க, கடுமையாக போராடிய சிந்து, 11-8 என்ற நிலைக்கு வந்தார். இதன் பின், இரண்டு வீராங்கனைகளும் ஒருவர் மாற்றி ஒருவர், புள்ளிகளை பெற்றனர். ஒரு கட்டத்தில் இருவரும் 15-15 என சம அளவில் இருந்தனர். எனினும், இறுதியில், சிந்து 21-19 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றார்.

இதே ஜப்பானின் ஒக்குஹாராவிடம் சமீபத்தில் தாய்லாந்து ஓபன் தொடரின் இறுதிப் போட்டியில் சிந்து தோல்வி அடைந்திருந்தார். அதே போல சென்ற ஆண்டின் உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதியிலும் தோல்வி அடைந்து இருந்தார். அதற்கு, பழி தீர்க்கும் வகையில் அமைந்தது சிந்துவின் இந்த வெற்றி.

இந்த வெற்றி மூலம் ஒக்குஹாரா உடனான மோதல்களில் 6 வெற்றிகள் பெற்று, 6-6 என சமன் செய்தார் சிந்து.

இதைத்தொடர்ந்து, நேற்று அரையிறுதிப் போட்டி நடைபெற்றது. இதில், சிந்து உலகின் 2 ஆம் நிலை வீராங்கனையான ஜப்பானின் அகனே யமகுச்சியுடன் மோதினார். 55 நிமிடங்கள் நடந்த இந்த ஆட்டத்தில் ஆரம்பத்தில் இருந்து அகனேவே லீடிங்கில் இருந்தார். முதல் செட்டில் 5 – 0 என பின் தங்கியிருந்த சிந்து, பின்னர் படிப்படியாக புள்ளிகளை குவித்து 21-16 என முதல் செட்டைக் கைப்பற்றினார். இரண்டாவது செட்டிலும் அகனேவே முன்னிலை வகித்தார். 19-12 என்ற புள்ளி கணக்கில் பின்தங்கியிருந்த சிந்து, மீண்டெழுந்து புள்ளிகளை குவித்தார். ஒருகட்டத்தில் 22-22 என சரிசம அளவில் இருவரும் போராடிக் கொண்டிருந்தனர். இறுதியில், 24-22 என இரண்டாவது செட்டையும் போராடிக் கைப்பற்றினார் பி.வி.சிந்து. இதன்மூலம் இறுதிப் போட்டிக்கு இரண்டாவது முறையாக முன்னேறினார் சிந்து.

இந்நிலையில், சிந்து இன்று நடந்த இறுதிப் போட்டியில் ஸ்பெயினின் கரோலினா மரினை எதிர்கொண்டார் . களத்தில் பரம வைரிகளான இவர்கள் இருவரும் மோதும் போது ஆட்டத்தில் அனல் பறக்கும். கரோலின் தான், 2016ல் நடந்த ரியோ ஒலிம்பிக் போட்டியின் இறுதிச்சுற்றில் சிந்துவை வீழ்த்தி, இந்தியாவின் தங்க கனவில் மண்ணை அள்ளி போட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், இன்றைய இறுதிப் போட்டியில் சிந்து 21-19, 21-10 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார். முதல் சுற்றில் சிந்து கடும் சவால் அளித்தலும், இரண்டாம் சுற்றில் கரோலினா முற்றிலும் சிந்துவை டாமினேட் செய்துவிட்டார்.

இதன்மூலம், உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் கோப்பையை மூன்று முறை வென்ற முதல் வீராங்கனை என்ற பெருமையை கரோலினா பெறுகிறார். அதேசமயம், தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இறுதிப் போட்டியில் தோற்று வெள்ளிப் பதக்கத்தையே சிந்து வென்றுள்ளார்.

தொடரும் சிந்துவின் இறுதிப் போட்டி துயரம்:

இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து, சமீப காலங்களாக தொடர்ந்து இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து வருகிறார். ஒவ்வொரு தொடரின் போதும், லீக் சுற்று, காலிறுதி, அரையிறுதி போன்றவற்றை சிறப்பாக எதிர்கொண்டு வெற்றி பெறும் சிந்து, இறுதிப் போட்டி என்று வந்தாலே தோல்வி அடைந்து விடுகிறார்.

2016 ஒலிம்பிக் தொடர், கிளாஸ்கோ உலக சாம்பியன்ஷிப் தொடர், 2017ல் நடந்த துபாய் சூப்பர் சீரிஸ் தொடர், இந்தியன் சூப்பர் சீரீஸ், ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் தொடர், இந்தாண்டு நடைபெற்ற காமல்வெல்த் தொடர் என இவை அனைத்து தொடரிலும் சிறப்பாக விளையாடி இறுதிப் போட்டி வரை முன்னேறிய சிந்து, யார் வைத்த செய்வினையோ, பைனலில் தோற்று ரசிகர்களை ஏமாற்றினார்.

அதிலும், காமன்வெல்த் போட்டியில், சக நாட்டு வீராங்கனை சாய்னா நேவாலுடன் மோதிய போது, பெரும்பாலானோர் சிந்துவே வெற்றிப் பெறுவார் என நினைத்தனர். ஆனால், தோல்வியே அவருக்கு பரிசாக கிடைத்தது.

ரசிகர்கள் ஏமாற்றமாக உணர்ந்தாலும், சிந்து என்ன சொல்கிறார் தெரியுமா? ‘இந்த தோல்விகள் என்னை எப்போதும் பாதித்ததில்லை’ என்கிறார்.

அவர் கூறுகிறார், “தொடர்ந்து இறுதிப் போட்டிகளில் நான் தோற்பது என்னை ஒருபோதும் பாதித்ததில்லை. பாதிக்க விட்டதும் இல்லை. மக்கள் இதைப் பற்றி எப்போதும் பேசிக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால், இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதையே பெரிய விஷயமாக தான் நான் பார்க்கிறேன். அதுவே ஒரு பெரிய சாதனை தான். முன்பெல்லாம், காலிறுதிப் போட்டியிலோ, அரையிறுதிப் போட்டியிலோ தோல்வி அடைந்து வெளியேறிவிடுவேன். ஆனால், இப்போது இறுதிப் போட்டிக்கு முன்னேறி விடுகிறேன். இதனால், நான்
தினமும் நிம்மதியாக தூங்கி தூங்குகிறேன்.

இறுதிப் போட்டி ஆடும்போது, அன்றைய தினம் யாருக்கான நாளாக இருக்கிறதோ, அவர்களுக்கு வெற்றி. அன்று என் எதிராளியின் நாளாக இருந்தால், அவர் வெற்றி பெறுவார். எனது நாளாக இருந்தால், நான் வெற்றிப் பெறுவேன். இதனால், நான் தோற்கும் போது, எல்லாம் என்னை விட்டு போய்விட்டதாக நினைக்க மாட்டேன். மாறாக, தோல்வியில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு, அடுத்து முறை அதிக பலத்துடன் களம் இறங்குவேன்.” என்கிறார் இந்த இந்திய புயல்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

×Close
×Close