Advertisment

வரலாற்றுச் சாதனை படைத்த வங்கதேசம்! ஆஸ்திரேலியாவிற்கு எதிராக முதல் டெஸ்ட் வெற்றி!

மிர்பூரில் நடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 20 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசம் வெற்றிப் பெற்றுள்ளது

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
வரலாற்றுச் சாதனை படைத்த வங்கதேசம்! ஆஸ்திரேலியாவிற்கு எதிராக முதல் டெஸ்ட் வெற்றி!

ஆஸ்திரேலியா – வங்கதேசம் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கடந்த 27-ஆம் தேதி டாக்காவில் தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் வங்கதேசம் 260 ரன்களும், ஆஸ்திரேலியா 217 ரன்களும் எடுத்தன. முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் சார்பில் தமீம் இக்பால் 71 ரன்களும், ஷகிப் அல் ஹசன் 84 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலிய அணியில் முதல் இன்னிங்ஸில் மேட் ரென்ஷா மட்டும் அதிகபட்சமாக 45 ரன்கள் எடுத்தார்.

Advertisment

தொடர்ந்து இரண்டாம் இன்னிங்ஸில் ஆடிய வங்கதேசம், 79.3 ஓவர்களில் 221 ரன்கள் எடுத்து ‘ஆல்–அவுட்’ ஆனது. அந்த அணி கடைசி 35 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அதிகபட்சமாக தமீம் இக்பால் 78 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் நாதன் லயன் 6 விக்கெட்டும், ஆஷ்டன் அகர் 2 விக்கெட்டும், வேகப்பந்து வீச்சாளர் கம்மின்ஸ் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

இதனையடுத்து, 265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2–வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணிக்கு ஆரம்பமே தடுமாற்றமாக அமைந்தது. ரென்ஷா 5 ரன்னிலும், உஸ்மான் கவாஜா ஒரு ரன்னிலும் ஆட்டம் இழந்து நடையை கட்டினார்கள். தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் 14 ரன்கள் எடுத்திருந்தபோது ஸ்லிப்பில் கொடுத்த கேட்ச் வாய்ப்பை சவுமியா சர்கார் தவற விட்டார். அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட டேவிட் வார்னர் அடித்து ஆடி அரை சதத்தை கடந்தார்.

நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் ஆஸ்திரேலிய அணி 2–வது இன்னிங்சில் 30 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 109 ரன்கள் எடுத்திருந்தது. டேவிட் வார்னர் 96 பந்துகளில் 11 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 75 ரன்னும், கேப்டன் ஸ்டீவன் சுமித் 58 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன் 25 ரன்னும் எடுத்து களத்தில் இருந்தனர். ஆஸ்திரேலிய அணி வெற்றிக்கு மேலும் 156 ரன்கள் தேவைப்பட்டது.

இந்த நிலையில், இன்றைய நான்காம் நாள் ஆட்டத்தை தொடங்கிய ஆஸ்திரேலிய அணியில், சிறப்பாக ஆடி வந்த வார்னர் சதம் விளாசினார். ஆனால், ஷகிப் அல் ஹசனின் துல்லியமான பந்துவீச்சில் 112 ரன்கள் எடுத்திருந்த போது வார்னர் எல்பிடபிள்யூ ஆனார். இதன்பின் கேப்டன் ஸ்மித்தும் 37 ரன்னில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து வந்த ஆஸி., வீரர்கள் வங்கதேச சுழலை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து அவுட்டானார்கள்.

இறுதிக் கட்டத்தில் பேட் கம்மின்ஸ் சற்று நிலைத்து நின்று ஆடி 33 ரன்கள் எடுத்தார். ஆனால், பார்ட்னர்ஷிப் கொடுக்க ஆள் இல்லாமல் போக, முடிவில் 70.5-வது ஓவரில் ஆஸ்திரேலிய அணி 244 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இதனால், 20 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசம் வெற்றி பெற்றது. டெஸ்ட் அந்தஸ்து பெற்றதில் இருந்து முதன் முறையாக ஆஸ்திரேலிய அணியை டெஸ்ட் போட்டி ஒன்றில் வங்கதேசம் வீழ்த்தியிருப்பது வரலாற்றில் இதுவே முதல்முறையாகும். இதனால், ஒட்டுமொத்த வங்கதேச கிரிக்கெட் ரசிகர்களும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் வங்கதேசம் 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.

இரு இன்னிங்சையும் சேர்த்து 89 ரன்கள் மற்றும் 10 விக்கெட்டுகள் வீழ்த்திய ஷகிப் - அல் ஹசன் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

சமீபத்தில் தங்களது சொந்த மண்ணில் இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியையும் வங்கதேசம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. உள்நாட்டில் வங்கதேச கிரிக்கெட் அணியின் ஆதிக்கம் தொடர்ந்து நீடித்து வருகிறது.

Steve Smith Shakib Al Hasan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment