Chetan Sharma quits Tamil News: இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த தேர்வுக் குழுவின் தலைவர் சேத்தன் சர்மா, தனியார் டி.வி. சேனல் நடத்திய ரகசிய ஸ்டிங் ஆபரேஷனில் அணி மற்றும் தேர்வு செயல்முறை குறித்த உள்விவகாரங்களை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கினார். இதையடுத்து, இன்று அவர் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது. ஏ.என். ஐ (ANI) செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, சேத்தன் சர்மா தனது ராஜினாமா கடிதத்தை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவுக்கு அனுப்பினார் என்றும், அவர் அதை ஏற்றுக்கொண்டார் என்றும் குறிப்பிட்டுள்ளது.
உளவு கேமராவில் பேசிய சேத்தன் சர்மா, “இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, அப்போதைய பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியை அவதூறு செய்ய முயன்றார். ஏனெனில் அவர் தனது ஒருநாள் போட்டி கேப்டன் பதவியை இழந்ததற்கு பிசிசிஐ தான் காரணம் என்று கருதினார்.” என்று கூறினார்.
மேலும், தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், விராட் கோலி ஆகியோருடன் கலந்து ஆலோசித்த அணியின் உள்விவகாரங்களை தேவையில்லாமல் வெளியிட்ட அவர், நிறைய வீரர்கள் முழு உடல்தகுதியுடன் இல்லாவிட்டாலும் கூட கிரிக்கெட் களத்திற்கு சீக்கிரம் திரும்புவதற்காக ஊசி போட்டுக் கொள்வதாகவும் குற்றம் சாட்டினார்.
அதோடு, காயத்தில் இருந்து மீண்ட ஜஸ்பிரித் பும்ரா அணிக்கு திரும்புவதில் நிர்வாகத்தில் இருவிதமான கருத்துகள் நிலவியதாகவும், ரோகித் சர்மாவை டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிப்பதில் அப்போதைய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலிக்கு விருப்பமில்லை. ஆனால் அவருக்கு கோலியையும் பிடிக்கவில்லை என்றும் அம்பலப்படுத்தியுள்ளார். இப்படியாக இந்திய கிரிக்கெட் அணியின் பல்வேறு விஷயங்களை கசியவிட்ட சேத்தன் ஷர்மாவின் பதவிக்கு சிக்கல் ஏற்பட்டது.
இந்த நிலையில், அவர் தனது பதவியில் இருந்து விலகியுள்ளார். மேலும், அவர் தனது பதவி விலகல் கடிதத்தை பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷாவிற்கு அனுப்பி வைத்துள்ளார். ஜெய்ஷா அதை ஏற்றுக்கொண்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil