'ஒவ்வொரு முடிவுக்கு பின்னால் ஒரு காரணம் உள்ளது'! - அஷ்வினை புகழும் டேவிட் மில்லர்

நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இரு அணிக்கு கேப்டன் அறிவிக்கப்பட்ட போது, அது சலசலக்கப்பட்டது. அந்த இரு அணிகளின் கேப்டன்களும் தமிழர்கள். இருங்க… இருங்க!! தமிழரா இருந்ததால சலசலப்பு-ன்னு சொல்லல.. ஆனால், இருவர் மீதும் ரசிகர்களுக்கு அதிருப்தி இருந்தது என்னவோ உண்மை தான். ஒருவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் தினேஷ் கார்த்திக்… மற்றொருவர் கிங்ஸ் XI பஞ்சாப் கேப்டன் ரவிச்சந்திரன் அஷ்வின்.

அதிலும், தினேஷ் கார்த்திக் கேப்டனாக நியமிக்கப்பட்ட போது, எதிர்ப்பு கொஞ்சம் அதிகமாகத் தான் இருந்தது. ஆனால் வங்கதேசத்திற்கு எதிராக, மனுஷன் லாஸ்ட் ஓவரில் சிக்ஸ் அடித்து, காற்றில் திசை மாறிய வெற்றியை அப்படியே இந்தியாவுக்கு கொண்டு வந்து சேர்த்த போது, தேசமே அவரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடியது. இதன்பிறகு, தினேஷ் கார்த்திக் மீதான எதிர்பார்ப்பும் அதிகமானது.

ரவிச்சந்திரன் அஷ்வினை பொறுத்தவரை, கரண்ட் இந்திய அணியின் டாப் மோஸ்ட் ஸ்பின்னர் என்று ரசிகர்கள் ஏற்றுக் கொண்டாலும், கேப்டனாக எவ்வாறு அவர் செயல்படப் போகிறார்? என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், முதல் போட்டியிலேயே, டெல்லியை மிக எளிதாக வீழ்த்தி, கேப்டனாக நம்பிக்கை அளித்து இருக்கிறார் அஷ்வின். (நம்பிக்கை அளித்தே ஆக வேண்டும்… ப்ரீத்தி ஜிந்தா பார்த்து பார்த்து செதுக்குன டீம் அல்லவா இது!.)

இந்த நிலையில், பஞ்சாப் அணிக்கு கடந்த 2016ம் ஆண்டு சீசனில் கேப்டனாக செயல்பட்ட டேவிட் மில்லர், அஷ்வினின் செயல்பாடுகளை பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “அஷ்வின் கிரிகெட்டை நன்றாக கணக்கீடு செய்து வைத்துள்ளார். ஆட்டத்தை பற்றி நன்கு தெரிந்து வைத்துள்ளார். அவர் எடுக்கும் ஒவ்வொரு முடிவுக்கு பின்பும், ஒரு காரணம் இருக்கிறது. வீரர்களுக்கு நிறைய வாய்ப்புகள் வழங்குகிறார். அவர்கள் செய்ய விரும்புவதை அனுமதிக்கிறார். ரிலாக்ஸாகவும் இருக்கிறார். இந்த விளையாட்டைப் பற்றி நிறைய தெரிந்து வைத்துள்ளார். எப்போதும் அதைப் பற்றியே யோசிக்கிறார்.

கிரிக்கெட்டில் பொதுவாக பவுலர் கேப்டன்கள் அதிகம் இருப்பதில்லை. அது அவருக்கு கூடுதல் பொறுப்பை உண்டாக்குகிறது. ஆனால், அஷ்வின் அதை திறம்பட கையாள்கிறார்” என்றார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Sports news in Tamil.

×Close
×Close