scorecardresearch

3-வது டெஸ்டிலும் இந்தியா தோல்வி: 2-1 என தொடரை வென்ற தெ.ஆ.

India vs South Africa 3rd Test at Cape Town Newlands Tamil News: இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க வெற்றி பெற்று 2-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.

Cape Town test Tamil News: IND vs SA 3rd Test live updates tamil

IND vs SA 3rd Test updates in tamil: தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், தென் ஆப்பிரிக்காவின் கோட்டை என வர்ணிக்கப்பட்ட செஞ்சூரியன் மைதானத்தில் நடந்த முதலாவது டெஸ்டில் 113 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இதனைத்தொடர்ந்து ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த 2-வது டெஸ்டில் தென்ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. இதனால், தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

இந்த நிலையில், தொடரை கைப்பற்றபோவது எந்த அணி? என்பதை நிர்ணயிக்கும் இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் மைதானத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.

கேப்டவுனில் இதுவரை இந்தியா…

கேப்டவுன் மைதானம் தென்ஆப்பிரிக்க அணிக்கு மற்றொரு கோட்டையையாக உள்ளது. அந்த அணி இங்கு விளையாடிய 34 டெஸ்ட் போட்டிகளில் 5ல் மட்டுமே தோல்வி கண்டுள்ளது. கடந்த 29 ஆண்டுகளில் ஆஸ்திரேலியா (நான்கு முறை), இங்கிலாந்து (ஒருமுறை) மட்டுமே இங்கு அந்த அணியை தோற்கடித்துள்ளன.

இந்திய அணி இந்த மைதானத்தில் இதுவரை விளையாடிய 5 டெஸ்ட் போட்டியில் ஒன்றில் கூட வெற்றியை சுவைத்தது கிடையாது. இங்கு 3-ல் தோல்வியும், 2-ல் டிராவும் கண்டு இருக்கிறது.

அணியை தெம்பூட்டுவாரா கேப்டன் கோலி?

முதுகு வலி பிரச்சினை காரணமாக கடந்த டெஸ்ட் போட்டியில் விளையாடாத கேப்டன் விராட்கோலி தற்போது முழு உடல் தகுதியை எட்டியுள்ளார். இதனால் அவர் இன்று தொடங்கும் ஆட்டத்தில் நிச்சயம் விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுக்கு மேலாக சர்வதேச போட்டியில் சதம் அடிக்காமல் ஏமாற்றம் அளித்து வரும் கோலிக்கு இது 99-வது டெஸ்ட் போட்டியாகும். அவரின் நீண்ட கால சதம் ஏக்கத்தை இங்கு தீர்ப்பாரா? என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

இந்திய அணி அதன் முதலாவது டெஸ்டில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் கலக்கி இருந்தது. தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் முதல் இன்னிங்சில் சதம் அடித்து அணிக்கு வலுவூட்டி இருந்தார். வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 8 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ஆனால் 2-வது டெஸ்டில் இந்திய அணியின் பேட்டிங் எதிர்பார்த்தபடி அமையவில்லை. முதல் இன்னிசிங்சில் முன்னிலை பெற்ற தென்ஆப்பிரிக்க அணி 2-வது இன்னிங்சில் இந்திய பந்து வீச்சை அருமையாக சமாளித்து பதிலடி கொடுத்ததுடன், ஜோகன்னஸ்பர்க்கில் இந்திய அணியை முதல்முறையாக தோல்வியை தழுவ வைத்தது.

இதனால், தொடர் சமன் ஆகியுள்ள நிலையில், இந்த கடைசி மற்றும் 3வது டெஸ்ட்டை இந்திய கைப்பற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. முதல் டெஸ்டில் அணியை திறம்பட வழிநடத்திய கேப்டன் கோலி இந்த போட்டியிலும் அதே உத்தவேகத்தை அணிக்கு அளிப்பார் என நமபலாம்.

பேட்டிங்கில் சொதப்பி வந்த புஜாரா, ரஹானே ஆகியோர் கடைசி இன்னிங்சில் அரைசதம் அடித்ததன் மூலம் நல்ல நிலைக்கு திரும்பியுள்ளனர்.வேகப்பந்து வீச்சுக்கு அனுகூலமான கேப்டவுன் மைதானத்தில் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் மட்டுமின்றி மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் நிலைத்து நின்று விளையாட வேண்டியது அவசியமானதாகும். மேலும், ஜஸ்பிரித் பும்ரா தனது பந்து வீச்சில் மேலும் ஜொலிக்க வேண்டியது தேவையான ஒன்றாகும். பும்ரா இதே மைதானத்தில் தான் 4 ஆண்டுகளுக்கு முன்னர் டெஸ்டில் அறிமுகமாக்கினார் என்பது நினைவுகூரத்தக்கது.

தென்ஆப்பிரிக்க மண்ணில், இதுவரை நடத்த டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்றதில்லை. கடந்த 7 தொடர்களில் இந்திய அணி 6 முறை தோல்வியை சந்தித்தது. ஒரு முறை தொடரை டிரா செய்துள்ளது. இந்நிலையில், 8-வது முறையாக டெஸ்ட் தொடரில் ஆடும் இந்திய அணி முந்தைய மோசமான நிலையை மாற்றி தொடரை வென்று சரித்திரம் படைக்க தயாராக உள்ளது.

அதேநேரத்தில் உள்ளூரில் தொடரை இழக்காமல் இருக்க தென்ஆப்பிரிக்க அணி தனது முழு பலத்தையும் வெளிப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. எனவே, இந்த இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என நம்பலாம்.

இரு அணி சார்பில் களமிறங்கும் வீரர்கள் பட்டியல் பின்வருமாறு:

இந்தியா

கேஎல் ராகுல், மயங்க் அகர்வால், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி(கேப்டன்), அஜிங்க்யா ரஹானே, ரிஷப் பந்த்(விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, உமேஷ் யாதவ்

தென்ஆப்பிரிக்கா

டீன் எல்கர் (கேப்டன்), எய்டன் மார்க்ரம், கீகன் பீட்டர்சன், ரஸ்ஸி வான் டெர் டுசென், டெம்பா பவுமா, கைல் வெர்ரேய்ன் (விக்கெட் கீப்பர்), மார்கோ ஜான்சன், ககிசோ ரபாடா, கேசவ் மஹாராஜ், டுவான் ஆலிவியர், லுங்கி என்கிடி

முதல் நாள் ஆட்டம் – டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்

இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் மைதானத்தில் இன்று முதல் தொடங்கும் நிலையில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

அடுத்தடுத்த விக்கெட் இழப்பு

இந்திய அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய கேஎல் ராகுல் – மயங் அகர்வால் ஜோடியில் ஒரு பவுண்டரியுடன் 12 ரன்கள் சேர்த்த ராகுல் ஒளிவீர் வீசிய 11.2 வது ஓவரில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவருடன் மறுமுனையில் இருந்த மயங் அகர்வால் 3 பவுண்டரிகளை விரட்டி 15 ரன்கள் சேர்ந்திருந்த நிலையில் ரபாடா வீசிய 12.2 வது மார்க்ரம் வசம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

இதனால் இந்திய அணி அடுத்த ஓவர்களில் தொடக்க வீரர்கள் இருவரது விக்கெட்டையும் இழந்து தடுமாறியது. இந்நிலையில், தற்போது களத்தில் உள்ள கேப்டன் கோலி – புஜாரா ஜோடி விக்கெட் இழப்பை தடுத்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதில் அரைசதம் கடந்த கேப்டன் விராட்கோலி 79 ரன்களிலும்,  புஜாரா 43 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதன்பிறகு இந்திய அணியின் விக்கெட்டுகள் சீட்டுக்கட்டு போல சரிய தொடங்கியது.

ரஹானே 9 ரன்களிலும்,  அஸ்வின் 2, தாகூர் 12, பும்ரா 0, ஷமி 7 என அடுத்தடுத்து ஆட்டமிழந்த நிலையில் சற்று நேரம் தாக்குப்பிடித்த பண்ட் 27 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் இந்திய அணி முதல் இன்னிங்சில் 223 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. உமேஷ் யாதவ் 4 ரன்களுடன் களத்தில் இருந்தார். தென்ஆப்பிரிக்க அணி தரப்பில், ரபாடா 4 விக்கெட்டுகளும், ஜென்சன் 3 விக்கெட்டுகளும், ஒலிவர், மகராஜ், நிகிடி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.  

தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்க அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 17 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் எல்கர் 3 ரன்களில் பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிந்தார். மார்க்ரம் 8 ரன்களிலும், கேசவ் மகராஜ் 6 ரன்களிலும் களத்தில் இருந்தனர்.

இன்று நடைபெற்ற 2-வது நாள் ஆட்டத்தில் தொடர்ந்து பேட் செய்த தென்ஆப்பிரிக்க அணி சீரியான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. மார்க்ரம் 8 ரன்களிலும் சற்று நேரம் தாக்குப்பிடித்து ஆடிய கேசவ் மகராஜ் 25 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய கேகன் பீட்டர்சன் ஒருமுணையில் போராட மறுமுனையில் இந்திய பந்துவீச்சாளரர்கள் தென்ஆப்பிரிக்க வீரர்களை சிதறடித்தனர்.

வான் டு டெசன், 21 ரன்களும், பவுமா 28 ரன்களும், வெரினெ டக்அவுட்டிலும் பெவிலியன் திரும்பிய நிலையில், அடுத்து களமிறங்கிய மார்கோ ஜென்சன், 7 ரன்களிலும், ரபாடா 15, நிகிடி 3 ரன்களிலும் ஆட்டமிழந்த நிலையில், 76.3 ஓவர்களில் தென்ஆப்பிரிக்க அணி 210 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஒலிவர் 10 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

இந்திய அணி தரப்பில் ஸ்டெம்புகளை சிதறடித்த பும்ரா 5 விக்கெட்டுகளும், உமேஷ் ஷமி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், தாகூர் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதன் மூலம் இந்திய அணி 13 ரன்கள் முன்னிலை பெற்றது.

தொடர்ந்து தனது 2-வது இன்னிங்சை தொடங்கிய இ்ந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது. மயங்க் அகர்வால் 7 ரன்களில் ரபாடா பந்துவீச்சிலும், ராகுல் 10 ரன்களில் ஜென்சன் பந்துவீச்சிலும் ஆட்டமிழந்தனர். 2-வது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 57 ரன்கள் எடுத்துள்ளது. புஜாரா 9 ரன்களுடனும, கோலி 14 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். நாளை 3-வது நாள ஆட்டம் நடைபெற உள்ளது.

தொடர்ந்து இன்று நடைபெற்ற 3-வது நாள் ஆட்டத்தில், புஜாரா மேற்கொண்டு ரன்கள் எடுக்காமல் 9 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார். வழக்கத்திற்கு மாறாக மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட்டை காப்பாற்றிக்கொண்ட கேப்டன் விராட்கோலி, 143 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய ரஹானே 1 ரன்களில் அவுட் ஆனார்.

அடுத்து களமிறங்கிய விக்கெட் கீப்பர் பண்ட், ஒரு முனையில் போராட மறுமுனையில், அஸ்வின் 7, தாகூர் 5, உமேஷ், ஷமி ஆகியோர் 0, பும்ரா 2 ரன்களில் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால் இந்திய அணி 67.3 ஓவர்களில் 198 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கடைசிவரை களத்தில் இருந்த பண்ட், அதிரடியாக விளையாடி தனது 4-வது சதத்தை பூர்த்தி செய்தார். கடந்த டெஸ்ட் போட்டியில் கடைசி கட்டத்தில் தேவையில்லாத ஷாட் ஆடி விக்கெட் பறிகொடுத்ததாக பண்ட் மீது விமர்சனங்கள் எடுத்தது.

தற்போது இந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அவர், 139 பந்துகளில் 46 பவுண்டரி 4 சிக்சருடன் 100 ரன்கள் குவித்தார். இந்திய அணி கடைசி 46 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை பறிகொடுத்தது குறிப்பிடத்தக்கது. தென்ஆப்பிரிக்க அணி தரப்பில்’, மார்கோ ஜென்சன் 4 விக்கெட்டுகளும், ரபாடா நிகிடி தலா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர் முதல் இன்னிங்சில் இந்திய அணி 13 ரன்கள் முன்னிலை பெற்றதால், தென்ஆப்பிரிக்க அணிக்கு 212 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணையிக்கப்பட்டது.

தொடர்ந்து வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய தென்ஆப்பிரிக்க அணியில், மார்க்ரம் 16 ரன்களில் ஆட்டமிழந்தாலும், அடுத்து ஜோடி சேர்ந்த எல்கர் பீட்டர்சன் ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் ஸ்கோர் கனிசமாக உயர்ந்த நிலையில், 96 பந்துகளில் 30 ரன்கள் எடுத்த கேப்டன் எல்கர் ஆட்டமிழந்தார். அத்துடன் 3-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. தற்போதுவரை தென்ஆப்பிரிக்க அணி 2 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் எடுத்துள்ளது.

பீட்டர்சன் 40 ரன்களுடன் களத்தில் உள்ளார். இந்திய அணி தரப்பில், ஷமி பும்ரா ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

4வது நாள் ஆட்டம் – தென் ஆப்பிரிக்கா வெற்றி

4ம் நாள் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் மிகவும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

தென் ஆப்பிரிக்க அணி 63.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்கள் எடுத்தது. இதன் மூலம், இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க வெற்றி பெற்றது. அதோடு, இந்த டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்கா அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Cape town test tamil news ind vs sa 3rd test live updates tamil

Best of Express