’சென்னை ஓபன் டென்னிஸ்’ இனிமேல் சென்னையில் இல்லை: ஏமாற்றத்தில் ரசிகர்கள்

புகழ்பெற்ற சென்னை ஓபன் டென்னிஸ் போட்டிகள் பூனேவிற்கு மாற்றப்படுவது டென்னிஸ் வீரர்களையும், ரசிகர்களையும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

கிட்டத்தட்ட ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டிக்கு இணையாக சர்வதேச அளவில் புகழ்மிக்க டென்னிஸ் போட்டி, சென்னை ஓபன் டென்னிஸ். கடந்த 1997-ஆம் ஆண்டு முதல் சென்னையில் நடைபெற்று வரும் இப்போட்டியானது, ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டி கொண்டிருக்கும் அத்தனை அம்சங்களையும் கொண்டிருப்பதால், உலகளவில் புகழ்பெற்ற டென்னிஸ் விளையாட்டு வீரர்களையும் சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி கவர்ந்தது.

ஒவ்வொரு வருடத்திலும் ஜனவரி முதல் வாரத்தில் இப்போட்டிகள் துவங்கும். 1997-ஆம் ஆண்டில் துவங்கப்பட்ட இப்போட்டிகள் கோல்டு ஃபிளேக் ஓபன் என ஆரம்பத்தில் அறியப்பட்டது. அதன்பிறகு டாடா குழுமத்துடன் இணைந்து டாடா ஓபன் என அழைக்கப்பட்டது. அதன்பிறகு, 2011-ஆம் ஆண்டு சென்னை ஓபன் டென்னிஸ்-ஆக பெயர் மாறியது. ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரின் பருவநிலை, அங்குள்ள மைதானத்தின் தோற்றத்தை ஒத்திருக்கும் எஸ்.டி.ஏ.டி. டென்னிஸ் மைதானம் ஆகியவை சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியின் சிறப்பம்சங்கள்.

இந்த போட்டியை நடத்தும் ஐ.எம்.ஜி. நிறுவனத்துடன் தமிழக அரசு இப்போட்டியை நடத்துவதற்காக அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்திருந்தது. ஆனால், தமிழக அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், இப்போட்டிய பூனே நகரத்திற்கு மாற்ற முடிவெடுக்கபட்டிருப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால், இப்போட்டிகளை நடத்த வருடந்தோறும் தமிழக அரசு 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்வதால், நிதி நெருக்கடி என்ற தகவலை தமிழக அரசு மறுத்தது.

மேலும், சென்னை ஓபன் டென்னிஸ் இடம் மாற்றம் செய்யப்படாது எனவும், 2018-ஆம் ஆண்டு போட்டிகளுக்கு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு பெயர் பட்டியல் விரைவில் ஐ.எம்.ஜி-யிடம் அளிக்கப்படும் எனவும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுக் கழக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

ஆனால், சென்னை ஓபன் டென்னிஸ் மகராஷ்டிராவின் பூனே நகரத்திற்கு மாற்றம் செய்யப்பட்டதாக மகராஷ்டிரா டென்னிஸ் சங்கம் உறுதிபடுத்தியுள்ளது. மேலும், பூனேவிலுள்ள பேல்வாடி டென்னிஸ் மைதானத்தை உலகதரத்தில் மாற்றவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ‘சென்னை ஓபன் டென்னிஸ்’ இனி ‘மகராஷ்டிரா ஓபன் டென்னிஸ்’ என அழைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஐ.எம்.ஜி. நிறுவனம் 2018-2019-ஆம் ஆண்டில் சென்னையில் நடைபெற உள்ள ஓபன் டென்னிஸ் போட்டிக்கான ஒப்பந்தத்தை ரத்து செய்ததாக தங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டிருப்பதாகவும் தமிழக டென்னிஸ் சங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

புகழ்பெற்ற சென்னை ஓபன் டென்னிஸ் போட்டிகள் பூனேவிற்கு மாற்றப்படுவதால், தமிழக டென்னிஸ் வீரர்களும், ரசிகர்களும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினும் தனது வருத்தத்தை பதிவு செய்தார். தமிழக டென்னிஸ் சங்கத்துடன் இணைந்து இப்போட்டியை சென்னையிலேயே நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

×Close
×Close