இந்தியன் சூப்பர் லீக்: புதிய சாதனையை படைக்க விரும்பும் சென்னையின் எஃப்சி அணி!

பயிற்சி முகாம் முடிந்து சென்னையின் எஃப்சி அணி செப்டம்பர் 11ம் தேதி சென்னை திரும்புகிறது

ஆசைத்தம்பி

சமீபத்தில் நடந்து முடிந்த ஃபிபா கால்பந்து உலகக் கோப்பை தொடர், இந்தியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் மேற்குவங்கம், கோவா, கேரளா மற்றும் வடகிழக்கு மாநிலங்களான அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகலாந்து, திரிபுரா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம் ஆகிய மாநிலங்களில் தான் கால்பந்து அதிகம் விளையாடப்பட்டு வருகிறது. மற்ற மாநிலங்களில் கிரிக்கெட் தான் டாப், தமிழகம் உட்பட.

ஆனால், நடந்து முடிந்த ஃபிபா உலகக் கோப்பை மூலம், நாடு முழுவதும் பரவலாக, கால்பந்து பார்ப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, 2014ல் நடந்த கால்பந்து உலகக் கோப்பையின் தொலைக்காட்சி பார்வையாளர்களின் எண்ணிக்கை, இம்முறை உயர்ந்துள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.

சுதந்திரம் அடைந்த பிறகு, 1948ம் ஆண்டு பிரான்ஸை 1-2 எனும் கோல் கணக்கிலும், 1956ம் ஆண்டு சிட்னியில் ஆஸ்திரேலியாவை 1 – 7 என்ற கணக்கிலும் இந்திய அணி வீழ்த்தி இருக்கிறது என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?. அப்படியொரு, பெயர் இந்திய அணிக்கு உள்ளது. ஆனால், காலப்போக்கில், கிரிக்கெட்டின் மாபெரும் வளர்ச்சியால், கால்பந்து தடம் மாறியது.

இருப்பினும், இந்தியாவில் தற்போது கால்பந்து பிரபலமாகி வருவதற்கு, இந்தியன் சூப்பர் லீக் தொடர் முக்கிய பங்காற்றி வருகிறது.

இந்நிலையில், 10 அணிகள் பங்கேற்கவுள்ள ஐந்தாவது இந்தியன் சூப்பர் லீக் (ISL) கால்பந்து தொடர், வரும் செப்டம்பர் மாதம் தொடங்குகிறது. இந்தப் போட்டியில் பங்கேற்கும் நடப்பு சாம்பியன் சென்னையின் எஃப்சி அணியின் பயிற்சி முகாம் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நேற்று (ஜூலை 13) தொடங்கியுள்ளது.

தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கும் நிலையில், சென்னையின் எஃப்சி அணியின் 4 வீரர்கள் தவிர மற்ற வீரர்கள் அனைவரும் இந்த பயிற்சி முகாமில் பங்கேற்றுள்ளனர். வெளிநாட்டு வீரர்கள் தங்கள் நாட்டில் இருந்து நேரடியாக மலேசியாவுக்கு வந்து பயிற்சியை தொடங்கியுள்ளனர்.

இந்த பயிற்சி 4 வாரங்கள் மலேசியாவில் நடக்க உள்ளது. பயிற்சியின் போது, சென்னையின் எப்.சி. அணியினர் அங்குள்ள அணியுடன் 4 நட்புறவு ஆட்டத்தில் விளையாடுகிறார்கள். இதன்பின்னர், பயிற்சி முகாம் முடிந்து சென்னையின் எஃப்சி அணி செப்டம்பர் 11ம் தேதி சென்னை திரும்புகிறது.

இப்படியொரு சூழலில், சென்னையின் எஃப்சி அணியின் பயிற்சியாளர் ஜான் கிரகோரி அளித்துள்ள பேட்டியில், “இந்தியாவில் ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் திறமையான இளம் கால்பந்து வீரர்கள் உருவாகி வருகின்றனர். இது மகிழ்ச்சியான விஷயமாகும். கடந்த ஆண்டு சென்னை அணியே பட்டம் வென்றது. இதுவரை ஐஎஸ்எல் போட்டியில் 2 முறை சென்னை அணியும், 2 முறை கொல்கத்தா அணியும் சாம்பியன் பட்டம் வென்றுள்ளன. 2015, 2017ல் சென்னை அணி கோப்பையைக் கைப்பற்றியது.

ஆனால் தொடர்ச்சியாக 2 முறை எந்த அணியும் பட்டம் வென்றதில்லை. அந்த சாதனையை சென்னையின் எஃப்சி செய்யவேண்டும் என்று விரும்புகிறேன். அதற்காக வீரர்களைத் தயார்படுத்தி வருகிறேன்.

கடந்த சீசனில் சென்னை வீரர்கள் சிறப்பாக விளையாடினர். அதைப் போலவே இந்த ஆண்டும் சிறப்பாக விளையாட தீவிர முயற்சி செய்வோம்.

கோப்பையைத் தக்க வைப்பது என்பது அவ்வளவு சுலபமான விஷயம் அல்ல. சென்னை அணியில் மெயில்சன், கால்டி, ஜெர்ரி போன்ற வீரர்களைத் தக்க வைத்துக் கொள்ள ஆலோசனை நடத்தி வருகிறோம். இத்தாலியில் பிறந்து ஸ்பெயினில் விளையாடி வரும் ஆந்திரியா ஒர்லாண்டியை சென்னை அணிக்கு புதிதாகத் தேர்வு செய்துள்ளோம். அவருக்கு நல்ல திறமை, எதிர்காலம் உள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Sports news in Tamil.

×Close
×Close