Advertisment

தலை விழுந்தாலும் 'இடை' ஆடுகிறது: கில்கிறிஸ்ட் ஆகும் ரிஷப் பண்ட்

India vs England 4th Test And Rishabh Pant tamil news: இதுவரை 11 டெஸ்ட் போட்டிகள் விளையாடியுள்ள ரிஷப் பந்த் 7 அரைசதம் மற்றும் 3 சதம் அடித்து 600 ரன்கள் சேர்த்துள்ளார். அவரின் பேட்டிங் சராசரி 40 புள்ளிகளாக உள்ளது.

author-image
WebDesk
New Update
Cricket news in tamil India vs England 4th Test: Rishabh Pant scores hundred and india leads

Cricket news in tamil India vs England 4th Test: Rishabh Pant scores hundred and india leads

Cricket news in tamil:  இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 4வது மற்றும் தொடரின் கடைசி போட்டி அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 205 ரன்கள் சேர்த்தது. அதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 294 ரன்கள் சேர்த்து, 89 ரன்களுடன் முன்னிலையில் இருந்தது.

Advertisment

நேற்று 2ம் நாள் ஆட்ட நேரத்தில் சிறப்பாக ஆடிய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் 118 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 13 பவுண்டரிகளை பறக்க விட்டு 101 ரன்கள் சேர்த்தார். அதோடு டெஸ்ட் போட்டிகளில் தனது 3வது சதத்தையும் பதிவு செய்தார்.

நேற்றைய ஆட்டத்தின் போது இந்திய அணியின் துவக்க வீரர் ரோகித் சர்மாவை தவிர மற்ற முன்னணி வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஆனால் மிடில்-ஆர்டரில் களமிறங்கிய ரிஷப் பந்த் விக்கெட் சரிவை தடுத்தி நிறுத்தி அணிக்கு தேவையான ரன்களை சேர்த்தார். இதே போன்றுதான் ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர் ஆடம் கில்கிறிஸ்ட் செய்வார். அந்த அணியின் டாப் ஆடரில் உள்ள விக்கெட்டுகள் சரிந்ததும், மிடில்-ஆடரில் களமிறங்கும் கில்கிறிஸ்ட் அணிக்கு தேவையான ரன்களை சேர்ப்பார்.

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த்தை பொறுத்தவரை, கடந்த மூன்று மாதங்களாக அவருடைய பேட்டிங் செய்யும் பாங்கு மாறியுள்ளது என்று கூறலாம். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடந்த 3 போட்டிகளில் சிறப்பாக ஆடினார். சிட்னியில் இந்திய அணி 102 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த தடுமாறியபோது அவர் எடுத்த 97 ரன்கள் அணிக்கு புத்துயிர் கொடுத்தது. தொடர்ந்து பிரிஸ்பேனில் நடந்த போட்டியில் ரஹானே மற்றும் புஜாரா சொற்ப ரங்களில் வெளியேற, ரிஷப் பந்த் ஆட்டமிழக்காமல் 89 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றிக்கு வலு சேர்த்தார். தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக சிறப்பாக ஆடியுள்ள இவர், இந்திய அணியில் தவிர்க்க முடியாத வீரராக உள்ளார்.

நெருக்கடியில் ருத்ர தாண்டவம்

நேற்றைய போட்டியில் ரிஷப் பந்த் களமிறங்கிய போது இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்கள் சேர்ந்திருந்தது. உணவு இடைவேளைக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்திவிடலாம் என்று நினைத்த இங்கிலாந்து அணியின் பந்துவீச்சாளர்கள் மிக உக்ரமாக பந்துகளை வீசினர். ஆனால் அவற்றுக்கெல்லாம் சற்றும் சலிக்காத ரிஷப், பந்துகளை அசால்டாக பறக்க விட்டு ருத்ர தாண்டவம் ஆடினார். அதேவேளையில் மறுமுனையில் இருந்த வாஷிங்டன் சுந்தரும் தனது அரைசத்தை பூர்த்தி செய்திருந்தார்.

ரிஷப் பந்த்தின் ஆட்டம், 2006-ல் பைசலாபாத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 148 ரன்கள் சேர்த்த முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனியின் ஆட்டத்தை நினைவூட்டுகிறது. அந்த ஆட்டத்தில் மிக சிறப்பாக ஆடிய எம்.எஸ். தோனி ஆட்டத்தின் போக்கையே மாற்றி இருந்தார். ரிஷப் பந்தின் ஆதர்ச நாயகனாக உள்ள தோனியுடன் அவரை இவ்வளவு விரைவிலே ஒப்பிடுதல் கூடாதா ஒன்றுதான். ஆனால் ரிஷப்பின் சமீபத்திய ஆட்டம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. "பந்த் எங்களுடைய வேலையையும் சேர்த்து செய்கிறார். மற்றும் அவர் எப்போதும் தயாராக உள்ளார்" என்று துவக்க வீரர் ரோகித் சர்மா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.

இதுவரை 11 டெஸ்ட் போட்டிகள் விளையாடியுள்ள ரிஷப் 7 அரைசதம் மற்றும் 3 சதம் அடித்து 600 ரன்கள் சேர்த்துள்ளார். அவரின் பேட்டிங் சராசரி 40 புள்ளிகளாக உள்ளது.

ரிஷப் பந்தின் அதிர்ஷ்டம்

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில் ரிஷப் பந்த் தவிர்க்கப்பட்டார். அந்த போட்டியில் பந்திற்கு பதிலாக விருத்திமான் சாகவை அணி நிர்வாகம் தேர்வு செய்திருந்தது. ஆனால் அந்த போட்டியின் 2வது இன்னிங்சில் வெறும் 36 ரன்களில் இந்திய அணி ஆல்-அவுட் ஆகி அதிர்ச்சி தந்தது. எனவே அணி நிர்வாகம் ரிஷப் பந்தை அணிக்குள் கொண்டு வர வேண்டும் என பல வழிகளில் அழுத்தம் கொடுக்கப்பட்டது. அங்கு நடந்த 4 போட்டிகளில் 3-ல் விளையாடிய பந்த் 274 ரன்கள் சேர்த்திருந்தார். அதோடு 2 இன்னிங்ஸ்களில் ஆட்டத்தின் போக்கையே மாற்றி இருந்தார். டி-20 மற்றும் ஒருநாள் போட்டிகளிலும் சிறப்பாக ஆடி வரும் ரிஷப் பந்த் இந்திய அணியின் பட்டியலில் தவிர்க்க முடியாத வீரராக உள்ளார்.

"நீங்கள் இந்திய அணியில் உங்கள் இடத்தை உறுதிப்படுத்த பேட்டிங் தான் உங்களின் துருப்புச் சீட்டு. உங்களை படிப்படியாக மேம்படுத்துவதன் மூலம் நீங்கள் முன்னேற்றம் அடைவீர்கள்" என்று ரிஷப் பந்த் பயிற்சியாளர் சின்ஹா, அவருக்கு வழங்கிய ஆலோசனைகள் பற்றி தெரிவித்திருந்தார்.

ஜாம்பவான்களுடன் மோதிய ரிஷப்

நேற்றைய ஆட்டத்தில் இங்கிலாந்தின் முன்னணி பந்துவீச்சாளர்களில் ஒருவரான ஜேம்ஸ் ஆண்டர்சன் ரிஷப் பந்திற்கு அதிகமாக தொல்லை கொடுத்தார். எனவே அவரது பந்து வீச்சு முடிவதற்காக காத்திருந்த பந்த், தனது ஆட்டத்தில் சிறிது நேரம் நிதானத்தை கடைபிடித்தார். மிகத் துல்லியமாக பந்து வீசிக் கொண்டிருந்த வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன், அவர் வீசிய முதல் 15 ஓவர்களில் 11 ஓவர்கள் மெய்டன். அதோடு 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தார். இங்கிலாந்து அணியின் தவறான அணி தேர்வால் ஒரு பந்து வீச்சாளர் குறைவு இருந்தது. அதோடு அகமதாபாத்தின் வெயிலுக்கு முன்னணி பந்து வீச்சாளர்கள் சோர்வடைந்து இருந்தனர்.

டொமினிக் பெஸ் வீசிய பந்தில் கிட்டத்தட்ட எல்பிடபிள்யூ அவுட் ஆக இருந்த பந்த் 'அம்பயர்ஸ் கால்' என்பதால் தப்பித்தார். இனியும் தாமதிக்க கூடாது என முடிவு செய்த பந்த் ஆட்டத்தின் போக்கை மாற்றும் புதிய திட்டத்திற்கு வந்தார். 82 பந்துகளில் அரைசதம் கடந்திருந்த பந்த், அடுத்த 50 ரன்களை 33 பந்துகளில் அதிரடியாக சேர்த்தார்

2ம் நாள் ஆட்டத்தில் கடைசி செஷனில் புதிய பந்தை கொண்டு தாக்குதல் தொடுக்க மீண்டும் களம் புகுந்தார் ஆண்டர்சன். அப்போது நல்ல பாமில் இருந்த ரிஷப் அவரை வரவேற்கும் விதமாக அசத்தலான கவர்- டிரைவ் ஒன்று அடித்தார். அதனைத் தொடர்ந்து கேப்டன் ஜோ ரூட் வீசிய ஆப்-பிரேக்கில் சிக்ஸர் அடித்த ரிஷப் தனது சதத்தை பூர்த்தி செய்தார். ஆனால் ஆண்டர்சன் வீசிய அடுத்த ஓவரிலேயே ஆட்டமிழந்த ரிஷப்

ரசிகர்களுக்கு ஏமாற்றைத்தை அளித்தார். இருந்தபோதிலும் அந்த நேரத்தில் ரிஷப் பந்தின் அதிரடியில் இந்திய அணி வலுவான ரன்களை எட்டி இருந்தது.

இங்கிலாந்தின் பிழை, இந்தியாவின் ஆதாயம்

இங்கிலாந்து அணியின் பலமும் பலவீனமும் அவர்களின் பந்து வீச்சுதான் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கூறுகிறார்கள். ஏனெனில் இந்த தொடரில் முதல் 3 போட்டிகளில் நாள் ஒன்றுக்கு 19 ஓவர்கள் மட்டுமே வீசிய இ\ங்கிலாந்து அணியின் ஆல் - ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், நேற்றைய தினம் கூடுதலாக ஒரு ஓவர் வீசி இருந்தார். இந்திய சூழ்நிலைகளில் அதே வேகத்துடனும், அதே ஆற்றலுடனும் ஒரு நாளில் 20 ஓவர்கள் வீசுவது என்பது கடினமான ஒன்றாகும். இருப்பினும் சிறப்பாக பந்து வீசி இந்திய அணியின் கேப்டன் கோலியை பூஜ்ய ரன்னில் பெவிலியன் அனுப்பினார். அதே போல் நீண்ட நேரம் களத்தில் தாக்குப்பிடித்து துவக்க வீரர் ரோகித் சர்மாவை எல்பிடபிள்யூ செய்தார். அதே போன்று உணவு இடைவேளைக்கு முன்னர் மிக உக்கிரமாக பந்து வீசிய ஆண்டர்சன் துணை கேப்டன் ரஹானேவின் விக்கெட்டை வீழ்த்தி இருந்தார்.

2ம் நாள் ஆட்ட தொடக்கத்தில் மிக துல்லியமாக பந்துகளை வீசிய ஆண்டர்சன் மற்றும் பென் ஸ்டோக்ஸ் முதல் 13 ஓவரில் வெறும் 16 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். மொத்தத்தில் இந்த இரண்டு பந்துவீச்சாளர்களும் தங்களுக்கு கொடுத்த பணியை செவ்வனே செய்தனர். ஆனால் இந்த இரு வீரர்களுக்கும் ஒய்வு கொடுக்க மாற்று வீரர் ஒருவரை தேர்வு செய்யாமல் அந்த அணி தவறிழைத்து விட்டது . ஒல்லி ஸ்டோன் அல்லது மார்க் வூட் ஆகிய இரு வீரர்களில் ஒருவரை அவர்கள் தேர்வு செய்திருக்கலாம்.

அந்த அணிக்கு ஆறுதல் தரும் விதமாக நேற்றைய ஆட்ட தொடக்கத்தில் இடது கை சுழல் பந்து வீச்சாளர் ஜாக் லீச் 4 வது முறையாக புஜாராவின் விக்கெட்டை வீழ்த்தினார். ஆனால் தொடர்ந்து பந்து வீசியதால் அவரும் சோர்வடைந்தார். இவருக்கு கைகொடுக்க வந்த மற்றொரு ஆப்-ஸ்பின் பந்து வீச்சாளர் டாமினிக் பெஸினின் பந்து வீச்சு எடுபடவில்லை. அதோடு புள் டாஸ் (68) பந்துகளை மிக தாராளமாக வழங்கினார். மற்றும் 15 ஓவர்களில் 56 ரன்கள் வாரிக் கொடுத்தார்.

முதல் இன்னிங்க்ஸை பொறுத்தவரை இங்கிலாந்து அணிக்கு வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. ஆனால் பந்து வீச்சில் அந்த அணி சொதப்பியதால் போட்டியில் தடுமாறியுள்ளது. இருப்பினும் 2வது இன்னிங்ஸில் அந்த அணி எப்படி விளையாடும் என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  " t.me/ietamil

Indian Cricket Team Rishabh Pant Indvseng Motera Test
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment