Cricket news in tamil: ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்திய அணி, வரும் ஜூன் 18 முதல் 22-ந்தேதி வரை இங்கிலாந்தின் சவுத்தம்டன் நகரில் நடக்கவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. அதனைத் தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கெதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.
இங்கிலாந்து மண்ணில் கடைசியாக 2007-ம் ஆண்டு ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய அணி டெஸ்ட் தொடரை (1-0) வென்றது. அதன் பிறகு 3 முறை இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, படுதோல்வியுடனே தாயகம் திரும்பியது. ஆனால் இந்த முறை தொடரை இந்திய அணி வெல்லும் என்று முன்னாள் இந்திய அணி கேப்டனும், தேசிய கிரிக்கெட் அகாடமியின் (என்.சி.ஏ) தலைவருமான ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
ஈஎஸ்பிஎன்கிரிக் இன்போ இணைய பக்கத்திற்கு அவர் அளித்த பேட்டியில், “இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பந்து வீச்சில் அந்த அணி கண்டிப்பாக அசத்தும். குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்கள் மிகத் துல்லியமாக பந்துகளை வீசுவார்கள். ஏனென்றால் வேகப்பந்து வீச்சிற்கு கைகொடுக்கும் பந்து வீச்சாளர்களை அவர்கள் கொண்டுள்ளார்கள்.
வலுவான பேட்டிங் வரிசையை கொண்டுள்ள இங்கிலாந்து அணியில், டாப் 6-7 பேட்ஸ்மேன்களை பார்த்தால் அதில் உலகத்தரம் வாய்ந்த மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக ஜோ ரூட் விளங்குகிறார். அதே போல் அந்த அணியின் ஆல்ரவுண்டர் வீரர் பென் ஸ்டாக்கையும் குறிப்பிடலாம். அவரை தனது சுழலில் தொடர்ந்து சிக்க வைத்து வருகிறார் நமது அணியின் அஸ்வின். அந்த வகையில் இந்த இரு வீரர்களுக்கும் இடையேயான போட்டி தொடரில் சுவாரஷ்யத்தை ஏற்படுத்தும்.
ஆஸ்திரேலிய மண்ணில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை பதிவு செய்த இந்திய அணி, இங்கிலாந்து அணிக்கெதிரான தொடரிலும் கண்டிப்பாக வெளிப்படுத்தும் என நம்புகிறேன்.
இந்திய அணியில் சில வீரர்கள் இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட வீரர்களாக உள்ளனர். அணியில் வலுவான பேட்டிங் வரிசையும் உள்ளது. மேலும் சமீபத்திய போட்டிகளில் சிறந்த அனுபவத்தை கொண்டுள்ள இந்திய அணி தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றலாம்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு பிறகு இந்திய அணிக்கு ஒரு மாத கால இடைவெளி உள்ளது. எந்த அணிக்கும் இப்படி ஒரு நல்ல வாய்ப்பு அமைத்தது இல்லை. எனவே இந்திய அணிக்கு இது ஒரு சாதகமான நிலை ஆகும்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா போன்று அல்லாமல் இங்கிலாந்தின் சீதோஷண நிலை நன்றாக இருக்கும். எனவே நாம் அதற்கு மதிப்பு கொடுக்க வேண்டும். மேலும் அங்குள்ள வானிலை மாறும் போது, ஆடுகளத்தின் சூழலும் மாறும். நீண்ட நேரம் நிலைத்து ஆடிய வீரருக்கு கூட நெருக்கடி கிடைக்கும். அதோடு 40-50 ஓவர்களுக்கு பிறகு கூட பந்து ஸ்விங் ஆகும்” என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற ” (https://t.me/ietamil)