டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழந்து 172 ரன்களை பெற்றுள்ளது.
டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி துபாயில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது.
நியூசிலாந்து பேட்டிங்
இதனையடுத்து நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக கப்டில் மற்றும் மிட்செல் களமிறங்கினர். கப்டில் நிதான ஆட்டத்தை ஆரம்பிக்க, அடித்து ஆட நினைத்த மிட்செல் 1 சிக்சர் மட்டுமே அடித்து 11 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டானார். அவர், ஹேசல்வுட் பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
பின்னர் களமிறங்கிய கேப்டன் கேன் வில்லியம்சன், கப்டில் உடன் சேர்ந்து 48 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். பொறுமையாக விளையாடிய கப்டில் 35 பந்துகளை சந்தித்து 28 ரன்கள் எடுத்து அவுட்டானார். கப்தில், ஸாம்பா பந்தில் ஸ்டாய்னிஸிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
8 ஓவர்கள் முடிவில் 40 ரன்கள் எடுத்து ஒரு விக்கெட் மட்டுமே இழந்திருந்த நியூசிலாந்து அணி, அடுத்த 7 ஓவர்களில் அதிரடியாக விளையாடி 74 ரன்களை சேர்த்து ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்தது. 15 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 114 ரன்களை எடுத்தது.
வில்லியம்சன் அரை சதம்
கேப்டன் வில்லியம்சன் 32 பந்துகளில் 51 ரன்களை சேர்த்தார். இது டி20 ஆண்கள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அதிவேக அரைசதமாக அமைந்தது.
இருப்பினும் 18-வது ஓவரை வீசிய ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஹேசல்வுட், கிளென் பிலிப்ஸ் மற்றும் வில்லியம்சன் விக்கெட்டை வீழ்த்தினார். பிலிப்ஸ் 18 ரன்களில் ஆட்டமிழந்தார். கேன் வில்லியம்சன் 48 பந்துகளில் 85 ரன்களை சேர்த்து அவுட்டானார். அவரது இன்னிங்ஸில் 10 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும்.
ஹேசல்வுட் 4 ஓவர்கள் வீசி 16 ரன்களை மட்டுமே கொடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவரை தவிர மற்ற அனைத்து ஆஸ்திரேலிய பவுலர்களும் ரன்களை வாரி வழங்கினர். அதில் ஸ்டார்க் 60 ரன்களை வாரி கொடுத்திருந்தார்.
173 ரன்கள் இலக்கு
இதனையடுத்து ஆஸ்திரேலிய அணிக்கு 173 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது. நியூசிலாந்து வீரர் போல்ட் தனது மிரட்டலான பந்து வீச்சால், ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்சை வீழ்த்தினார். பிஞ்ச் 5 ரன்கள் மட்டுமே எடுத்து மிட்செலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
பின்னர் வார்னருடன் மிட்செல் மார்ஷ் ஜோடி சேர்ந்தார். இருவரும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருவரும் பவுண்டரிகளாக விளாசி நியூசிலாந்து பந்து வீச்சை நொறுக்கினர். 10 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய அணி 1 விக்கெட் இழப்புக்கு 82 ரன்கள் குவித்தது.
வார்னர் அரை சதம்
நன்றாக அடித்து ஆடி வந்த வார்னர் 38 பந்தில் 53 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். போல்ட் வார்னரை போல்டாக்கினார். வார்னர் 4 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர் அடித்தார். மார்ஷ் மற்றும் வார்னர் இருவரும் 2 ஆவது விக்கெட்டுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்து 92 ரன்கள் எடுத்தனர்.
மார்ஷ் அதிரடி
பின்னர் களமிறங்கிய மாக்ஸ்வெல், மார்ஷூடன் ஜோடி சேர்ந்து நியூசிலாந்து பவுலர்களை அடித்து ஆடினர். அதிரடியாக ஆடிய மார்ஷ் அரை சதம் அடித்தார். மற்றொரு புறம் மாக்ஸ்வெல்லும் அதிரடியாக ஆடினார்.
ஆஸ்திரேலியா அணி 17 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. 18 ஆவது ஓவரை வீசிய மில்னே 3 ரன்கள் மட்டுமே கொடுத்து, ஆஸ்திரேலியாவின் ரன் வேட்டையை கட்டுப்படுத்தினார்.
ஆனால் அடுத்த ஓவரை சௌதி வீச, ஆஸ்திரேலிய அணி வெற்றி இலக்கை எட்டியது. மார்ஷ் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 50 பந்துகளில் 77 ரன்கள் விளாசியிருந்தார். இதில் 6 பவுண்டரிகளும் 4 சிக்சர்களும் அடங்கும்.
மாக்ஸ்வெல் 18 பந்துகளில் 28 ரன்கள் விளாசினார். அவர் 4 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்சர் அடித்தார். இதன் மூலம் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.
நியூசிலாந்து தரப்பில் போல்ட் மட்டுமே சிறப்பாக பந்து வீசினார். அவர் 4 ஓவர்கள் வீசி 18 ரன்கள் மட்டுமே கொடுத்து, 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.