சென்னை சூப்பர் கிங்ஸின் பிராண்ட் வேல்யூ உயருமா? முடிவு ரசிகர்களின் கையில்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிராண்ட் வேல்யூ ஆரம்பக்கட்டத்தில் தாறுமாறாகவே இருந்தது. ஆனால், இப்போது...

சூதாட்ட புகார் காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக தடை செய்யப்பட்டிருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், நடைபெறவுள்ள 11வது ஐபிஎல் தொடரில் களம் காணுகின்றன. கடந்த ஜனவரி 27, 28ம் தேதி வீரர்கள் ஏலம் முடிந்திருக்கும் நிலையில், இரு அணிகளும் தங்களால் முடிந்த அளவிற்கு சிறந்த வீரர்களை கொண்டு அணியை கட்டமைத்துள்ளன.

ஆனால், இவ்விரு அணிகளும் மீண்டும் தங்களது பிராண்ட் வேல்யூவை எவ்வாறு உயர்த்தப்போகின்றன என்பது தான் இங்கு முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது.

பொதுவாக ஐபிஎல் அணிகளின் பிராண்ட் மதிப்பானது ஸ்பான்சர்ஷிப், ரசிகர்களின் தொடர் ஆதரவு, சோஷியல் மீடியா, பிரபலங்கள், விளையாட்டில் காட்டப்படும் செயல்திறன், சந்தைப்படுத்துதல், முன்னணி வீரர்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளிடம் இருந்து பெறப்படுகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிராண்ட் வேல்யூ ஆரம்பக்கட்டத்தில் தாறுமாறாகவே இருந்தது. ஆனால், இடையில் கொஞ்சம் சறுக்க, இப்போது மீண்டும் அந்த வேல்யூவை சென்னை எப்படி மீட்டெடுக்கப் போகிறது என்பதை பார்க்கவேண்டும்.

சென்னை அணியைப் பொறுத்தவரை இந்தியா சிமெண்ட்ஸ், ஏசிடி ஃபைபர்நெட் (ACT Fibernet) மற்றும் ஹெச்ஐஎல் லிமிட்டட் (HIL Ltd) ஆகியவை முக்கிய ஸ்பான்சர்களாக இருக்கின்றன. ஆனால், இத்தனை வருடங்களாக சென்னை அணியின் ஸ்பான்சராக இருந்த ஏர்செல், இந்தாண்டு தனது ஸ்பான்சர்ஷிப்பை விலக்கிக் கொண்டுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் கடைசியாக 2015ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடிய போது, அதன் பிராண்ட் வேல்யூ, அதற்கு முந்தைய ஆண்டை விட சரிந்து காணப்பட்டது. அதாவது, 2014ல் 72 மில்லியன் டாலராக இருந்த அதன் பிராண்ட் வேல்யூ, 2015ல் 67 மில்லியன் டாலராக சரிந்தது. அதுமட்டுமின்றி, 2014ல் ஐபிஎல் அணிகளில் அதிக பிராண்ட் வேல்யூ கொண்ட அணிகளில் முதலிடத்தில் இருந்த சென்னை, 2015ல் ஐபிஎல் தொடர் முடிந்த பின் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. சூதாட்ட புகாரில் சிக்கியதே இதற்கு முக்கிய காரணியாக கருதப்படுகிறது.

ஆனால், இங்கு ஒரு ஆச்சர்யமான விஷயம் என்னவெனில், அதே ஆண்டில் (2015), சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் ஃபாலோ செய்த மொத்த ரசிகர்களின் எண்ணிக்கை 11.8 மில்லியனை தொட்டதால், சமூக தளங்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நம்பர்.1 அணி என்ற பெருமையைப் பெற்றது.

இதன் மூலம், மற்ற விஷயங்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிராண்ட் வேல்யூ குறைந்தாலும், ரசிகர்களின் விடாப்பிடியான ஆதரவு மற்ற அணிகளை பிரமிக்க வைத்தது. சக அணிகளை மட்டுமின்றி, ஐபிஎல் மற்றும் அதன் அணிகளின் பிராண்ட் வேல்யூ புள்ளி விவரத்தை அலசும் ‘American Appraisal India and Duff & Phelps’ எனும் நிர்வாகத்தையும் சென்னை அணி பிரமிக்க வைத்தது. இவ்வளவு சறுக்கல்களுக்கு மத்தியிலும் எப்படி இந்த அணியை மட்டும் ரசிகர்கள் தாங்கிப் பிடித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்று தங்களது ஆச்சர்யத்தை அந்நிறுவனும் வெளிப்படுத்தி இருந்தது.

இருப்பினும், இரண்டு ஆண்டுகள் விளையாடாமல் தற்போது மீண்டும் களத்தில் இறங்கவிருக்கும் சென்னை அணியின் பிராண்ட் வேல்யூ, இப்போது விளையாடப் போகும் அணியின் செயல்பாட்டை பொறுத்தே உள்ளது. தோனியின் பெர்ஃபாமன்ஸ் கூட இதில் அடங்கும். ஏனெனில், சென்னை இம்முறை பல புதிய வீரர்களை வாங்கியுள்ளது. அவர்கள் எவ்வாறு செயல்படப் போகிறார்கள் என்பதை இனி தான் தெரிந்து கொள்ள முடியும்.

சூதாட்ட புகாரில் சிக்கிய பிறகு குறைந்த ஒட்டுமொத்த ஐபிஎல்லின் பிராண்ட் வேல்யூ, சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு விதித்த தடைக்குப் பின் 2016ல் 19 சதவிகிதமாக உயர்ந்தது. தற்போது தடை காலம் முடிந்து மீண்டும் இரு அணிகளும் களமிறங்க உள்ளதால், ஒட்டுமொத்த ஐபிஎல்லின் பிராண்ட் வேல்யூ மற்றும் சென்னை அணியின் பிராண்ட் வேல்யூ என்னவாக இருக்கப் போகிறது என்பது வரும் காலங்களில் தெரிந்துவிடும்.

ஆனால், ரசிகர்களின் பேராதரவு இருக்கும்வரை சென்னை அணியின் சந்தை மதிப்பு தொடர்ந்து மற்ற அணிகளை ஏக்கத்துடனேயே வைத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

×Close
×Close