சாதாரண பயிற்சிக்கு இவ்வளவு ரசிகர் கூட்டமா? சிஎஸ்கேவின் புதிய வீரர்கள் ஆச்சர்யம்!

அம்பதி ராயுடு, ஹோட்டலில் இருந்து ரசிகர்கள் காண்பித்த வரவேற்பை பார்த்து வெளிறிப் போய்விட்டார். இறுதி வரை, அவரது கண்கள் பலிங்கி சைஸில் தான் இருந்தது

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் நேற்று தங்களது ஹோட்டலில் இருந்து ஸ்டேடியத்துக்கு திறந்த வெளி பேருந்தில் பயிற்சியில் ஈடுபடுவதற்காக சென்றனர். அப்போது, ஹோட்டலில் இருந்து பேருந்தை ரவுண்டு கட்டிய சிஎஸ்கே ரசிகர்கள், ஸ்டேடியம் வரை, கான்வாய் போன்று தோனி உட்பட சிஎஸ்கே படையை அழைத்துச் சென்றனர்.

தோனி, ரெய்னா, பிராவோ போன்றவர்களுக்கு சென்னை ரசிகர்களின் வரவேற்பு எப்படி இருக்கும் என தெரியும். ஆனால், ஹர்பஜன், ஷேன் வாட்சன் உள்ளிட்ட அணியில் புதிதாக இணைந்துள்ள வீரர்கள், ‘என்னங்க இது! பிராக்டீஸுக்கு நாம போறதுக்கே இவ்ளோ ரெஸ்பான்ஸ் தராங்க?’-னு ஓப்பனாகவே சீனியர் வீரர்களிடம் ஆச்சர்யப்பட்டு கேட்டிருக்கின்றனர்.

சீனியர் வீரர்களும் சிலாகித்து அதைப் பற்றி விளக்கிக் கொண்டிருக்க, ஸ்டேடியம் சென்ற ஒட்டுமொத்த வீரர்களுக்கும் கடும் ஷாக்! ஸ்டேடியம் முன்பு நூற்றுக் கணக்கான ரசிகர்கள் குவிந்திருந்தனர். வீரர்கள் பயிற்சி செய்து முடிக்கும் வரை, ஏதோ சிக்ஸர், பவுண்டரிகள் அடித்தது போன்று ஸ்டேடியத்தையே அலற விட்டனர்.

ரசிகர்களின் இந்த ஆதரவைப் பார்த்த, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை கோச் ஸ்டீபன் பிளமிங் தனது ட்விட்டரில், ‘சாதாரணமாக நாங்கள் பயிற்சி செய்ய வந்ததற்கே ரசிகர்கள் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்துள்ளனர். சென்னை ரசிகர்கள் எங்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்துவிட்டனர்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

சும்மா சொல்ல கூடாது, தோனி சும்மா கேட்ச் பிடிச்சதுக்கெல்லாம், சென்னை சேப்பாக்கமே உறுமியது! எவ்வளவோ வீரர்கள் இருந்தும், தோனியை மட்டும் எல்லையே இல்லாமல் ரசிகர்கள் நேசித்ததை அந்த இடத்தில் நம்மால் கண் கூடாக பார்க்க முடிந்தது. இத்தனைக்கும் அந்த மனிதரிடம் இருந்து ஒரு சின்ன சிரிப்பும், கை அசைவும் தான் பதிலாக வரும். ஆனால், அதற்கே ரசிகர்கள் அலற விடுகின்றனர்.

இதில், என்ன ஒரு காமெடி என்றால், நம்ம பக்கத்து மாநிலத்துக்காரரான (ஆந்திரா)  அம்பதி ராயுடு, ஹோட்டலில் இருந்து ரசிகர்கள் காண்பித்த வரவேற்பை பார்த்து வெளிறிப் போய்விட்டார். இறுதி வரை, அவரது கண்கள் பலிங்கி சைஸில் தான் இருந்தது. ‘என்னடா இவனுங்க, இப்படி இருக்கானுங்க!! இத்தனை வருஷமா ஐபிஎல்-லையே வீணடித்து விட்டோமோ!?’ என்கிற மோடிலேயே இருந்தது அவரது முகபாவம். இவர் பீல்டிங் பயிற்சி மேற்கொண்டிருந்த போது, திடீரென்று ரசிகர்கள் கூச்சலிட, பதட்டப்பட்டவர் பந்தை பதட்டத்துடன் எப்படியோ கேட்ச் பிடித்து விட்டு, திரும்பிப் பார்த்தால், தோனி தண்ணீர் குடித்துக் கொண்டு, ரசிகர்களை பார்த்து லைட்டாக கை அசைத்துக் கொண்டிருக்கிறார். ‘இதுக்காடா இந்த சவுண்டு!?’ என்ற அவரது முகபாவனை நமக்கு அப்பட்டமாக தெரிந்தது.

‘எப்படியோ, சரியான இடத்துக்கு வந்துவிட்டோம்! இதை அப்படியே மெயின்டெய்ன் செஞ்சு பொழச்சுக்குடா கைப்புள்ள’ என்று நிச்சயம் அவர் நினைத்திருப்பார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

×Close
×Close