காமன்வெல்த் 2018: இந்தியாவுக்கு தங்கம் வென்ற மேரி கோம்!

ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்திய வீராங்கனை மேரிகோம் தங்கம் வென்றார்.

21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி, ஆஸ்திரேலியாவின் கோல்ட்கோஸ்டில் கடந்த 4ம் தேதி துவங்கியது. இப்போட்டியில் 71 நாடுகளைச் சேர்ந்த 4,500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 218 பேர் களம் கண்டுள்ளனர்.

இதில் இன்று நடைபெற்ற மகளிருக்கான 45-48 கிலோ எடை பிரிவு குத்துச் சண்டை போட்டியில், இந்திய வீராங்கனை மேரிகோம் தங்கப்பதக்கம் வென்று அசத்தினார். அவர் இறுதிப்போட்டியில் வடக்கு அயர்லாந்து வீராங்கனை கிறிஸ்டினா ஒஹாராவை 5-0 என வீழ்த்தினார். மேலும், இன்று நடைபெற்ற ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் பிரிவு போட்டியில் இந்திய வீரர் சஞ்சீவ் ராஜ்புட் தங்கப்பதக்கம் வென்றார்.
இது தவிர, ஆண்களுக்கான 51 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் கவுரவ் சொலாங்கி தங்கப்பதக்கம் வென்றார். அவர் இறுதிப்போட்டியில் வடக்கு அயர்லாந்து வீரர் பிரண்டன் இர்வினை 4-1 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தினார்.

மேலும், ஆண்களுக்கான மல்யுத்த போட்டியின் 125 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் சுமித் மாலிக் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். அவர் இறுதிப்போட்டியில் நைஜீரியாவின் சினிவீ போல்டிக்கை எதிர்கொள்வதாக இருந்தது. ஆனால் நைஜீரியா வீரர் காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகியதால், சுமித் மாலிக் தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார்.

இதன்பின் தடகள போட்டிகள் நடைபெற்றன. இதில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வென்று அசத்தினார். அவர் 86.47 மீட்டர் தூரம் வீசி முதலிடம் பிடித்தார். இரண்டாவது இடத்தை ஆஸ்திரேலியாவின் ஹமிஷ் பீகாக் பிடித்தார்.

மேலும், குத்துச்சண்டை போட்டியில் ஆண்களுக்கான 46-49 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரர் அமிட் வெள்ளிப்பதக்கம் வென்றார். அவர் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து வீரர் கலால் யபாய் எனும் வீரரிடம் 3-1 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வியடைந்தார். அதேபோல், ஆண்களுக்கான 60 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் மணிஷ் கவுஷிக் வெள்ளிப்பதக்கம் வென்றார். அவர் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் ஹாரி கார்சைட்டிடம் 3-2 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வியடைந்தார்.

இதன்மூலம், இந்தியா 21 தங்கம், 13 வெள்ளி, 14 வெண்கலம் என மொத்தம் 48 பதக்கங்கள் வென்று தொடர்ந்து மூன்றாவது இடத்தில் நீடிக்கிறது.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Sports news in Tamil.

×Close
×Close