கற்பழிப்பு புகாரில் சிக்கிய நண்பன்... இலங்கை 'டாப்' ஆர்டர் பேட்ஸ்மேன் சஸ்பென்ட்!

இலங்கை வீரர் தனுஷ்கா குணதிலகா சஸ்பென்ட்

இலங்கை டெஸ்ட் அணியின் தொடக்க வீரர் தனுஷ்கா குணதிலகா, இலங்கை கிரிக்கெட் வாரியத்தால்  அதிரடியாக சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை, தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கொழும்புவில் நடைபெற்றது. நான்காம் நாள் ஆட்டமான இன்று, இலங்கை அணி 199 ரன்கள் வித்தியாசத்தில் வென்று டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றியது. இந்த டெஸ்ட் தொடரில், இலங்கை அணியின் தொடக்க வீரராக களமிறங்கி சிறப்பாக ஆடி வந்தவர் தனுஷ்கா குணதிலகா. இந்த 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 57 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 61 ரன்களும் எடுத்தார். இலங்கை அணியின் முக்கியமான வீரராக வலம் வந்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், இலங்கை கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள சுருக்கமான அறிக்கை ஒன்றில், “தனுஷ்கா குணதிலகா நடத்தை விதிமுறைகளை மீறி நடந்து கொண்டதாக இலங்கை அணி அளித்த புகாரை அடுத்து, அவர் உடனடியாக அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும் சஸ்பென்ட் செய்யப்படுகிறார். அவர் மீதான முதற்கட்ட விசாரணையை இலங்கை கிரிக்கெட் வாரியம் தொடங்கியுள்ளது” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து நாம் மேலும் சில விவரங்களை சேகரித்த போது, அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, நேற்று (ஜூலை 22) இலங்கை வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு, குணதிலகாவும் அவரது நண்பர் ஒருவரும், இரு நார்வே பெண்களை அழைத்துச் சென்றதாக தெரிகிறது. இந்நிலையில், அவ்விரு பெண்களில் ஒருவர், குணதிலகாவின் நண்பர் தன்னை பலவந்தமாக கற்பழித்துவிட்டதாகவும், குணதிலகா அப்போது அதே அறையில் இருந்ததாகவும் போலீசில் புகார் அளித்து இருக்கிறார். இதனைத் தொடர்ந்து, 26 வயதான அந்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆனால், குணதிலகா மீது அந்தப் பெண் புகார் ஏதும் அளிக்கவில்லை.

இருப்பினும், என்ன காரணத்திற்காக குணதிலகா சஸ்பென்ட் செய்யப்பட்டார் என்பது குறித்து இதுவரை இலங்கை கிரிக்கெட் வாரியம் வெளிப்படையாக அறிவிக்கவில்லை.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Sports news in Tamil.

×Close
×Close