Delhi police files chargesheet against WFI chief Brij Bhushan Sharan Singh Tamil News: இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பா.ஜ.க. எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண்சிங் மீது 7 மல்யுத்த வீராங்கனைகள் கொடுத்த பாலியல் புகார் குறித்து டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, பிரிஜ் பூஷனை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த 23ம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாக்கூரை மல்யுத்த வீரர்கள், ஒலிம்பிக் பதக்கம் வென்ற பஜ்ரங் புனியா மற்றும் சாக்ஷி மாலிக் ஆகியோர் சந்தித்தனர். இதனையடுத்து, ஜூன் 15 வரை தங்களது போராட்டத்தை இடைநிறுத்த ஒப்புக்கொண்டனர். இந்த தேதியில் டெல்லி காவல்துறை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யும் என்றும் அமைச்சர் தாக்கூர் உறுதியளித்து இருந்தார்.
இந்நிலையில், இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பதவியில் இருந்து விலக உள்ள பிரிஜ் பூஷண் சரண் சிங்கிற்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் வழக்கில் டெல்லி போலீசார் இன்று (வியாழக்கிழமை) டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.
மேலும், ஒரு மைனர் மல்யுத்த வீராங்கனையின் தந்தை அளித்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், பிரிஜ் பூஷண் சரண் சிங்கிற்கு எதிரான போக்சோ வழக்கை ரத்து செய்ய பரிந்துரை செய்யும் அறிக்கையையும் போலீசார் சமர்ப்பித்தனர். மைனர் மல்யுத்த வீராங்கனையின் தந்தை பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளை வாபஸ் பெற்று புதிய அறிக்கையை பதிவு செய்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக டெல்லி காவல்துறை செய்தித் தொடர்பாளர் சுமன் நல்வா பேசுகையில், "மல்யுத்த வீராங்கனைகள் பதிவு செய்த எப்.ஐ.ஆரின் விசாரணை முடிந்ததும், குற்றம் சாட்டப்பட்ட பிரிஜ்பூஷன் சரண் சிங்குக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 354 (மூர்க்கத்தனமான அடக்கம்), 354D (பின்தொடர்தல்), 354A (பாலியல் கருத்துக்கள்) & 506 (1) (குற்றம் சார்ந்த மிரட்டல்) ஆகியவற்றின் கீழ் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்கிறோம்.
விசாரணை முடிந்த பிறகு, புகார்தாரரின் தந்தை மற்றும் பாதிக்கப்பட்ட பெண்ணின் அறிக்கைகளின் அடிப்படையில் வழக்கை ரத்து செய்யக் கோரி, பிரிவு 173 Cr PC இன் கீழ் அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளோம்." என்று கூறியுள்ளார்.
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை கோரி போராட்டம் நடத்திய மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு மத்திய அரசு உறுதியளித்த ஜூன் 15 காலக்கெடுவிற்குள் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil