பேட்ஸ்மேன் தோனி வேண்டாம்; பினிஷர் தோனி வேண்டும் - #CSK ரசிகனின் வேண்டுகோள்!

எங்களுக்கு பேட்ஸ்மேன் தோனியை விட, பினிஷர் தோனி தான் வேண்டும்

‘ஒரு பேட்ஸ்மேனாக தோனி இந்த ஐபிஎல் தொடரில் முக்கிய பங்கு வகிப்பார்’ என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் நேற்று கூறியிருப்பதை அவ்வளவு சாதாரணமாக நாம் கடந்து விட முடியாது.

முதலில், பிளமிங் என்ன சொன்னார் என்பதை தெளிவாகச் சொல்லி விடுகிறேன்.

‘இந்த ஐபிஎல் தொடரில், கேப்டன் தோனி ஒரு பேட்ஸ்மேனாகவும் மிக முக்கிய பங்காற்றுவார். மிடில் ஆர்டரில் நம்மிடம் கேதர் ஜாதவ், அம்பதி ராயுடு ஆகியோர் உள்ளனர்’ என்று தெரிவித்துள்ளார்.

அப்படியெனில், அவர் சொல்வதில் இருந்து, தோனி ஒன் டவுன் அல்லது டூ டவுன் வீரராக களமிறக்கப்படலாம் என்பதை நாம் அறிய முடிகிறது. இது உண்மையில் நல்ல முடிவா? என்பதே கேள்வி.

இந்த உலகிற்கு தன்னுடைய பெயரை தோனி உரக்கச் சொன்ன ஆட்டம், பாகிஸ்தானுக்கு எதிராக 2005ம் ஆண்டு விசாகப்பட்டினத்தில் ஆடிய ஆட்டம் தான். நீண்ட சடை வைத்துக் கொண்டு களத்தில் இறங்கியவரை பார்த்தவர்கள், ‘யார்ரா இவன்?’-னு நினைத்து முடிப்பதற்குள் 148 ரன்களை விளாசித் தள்ளினார். அந்தப் போட்டியில் அவர் களமிறங்கியது ஒன் டவுன் வீரராக.

அதே ஆண்டு, ஜெய்ப்பூரில் நடந்த இலங்கைக்கு எதிரான சேசிங்கில் 183 ரன்களை நொறுக்கித் தள்ளிய போதும், அவர் களமிறங்கியதும் ஒன் டவுன் வீரராக.

அதன் பிறகு, கேப்டனாவுடன் தனது ஆட்ட முறையையே மாற்றிக் கொண்ட தோனி, களமிறங்கும் இடத்தையும் நிரந்தரமாக மாற்றிக் கொண்டார். 7வது பேட்ஸ்மேனாக களமிறங்கி, கணக்கே வைத்துக் கொள்ள முடியாத அளவிற்கு மேட்ச் வின்னிங் பெர்பாமன்ஸ் கொடுத்துள்ளார். மிக அரிதாக, தனது இடத்தை மாற்றி முன்னதாகவே களமிறங்குவார்.

இறுதியில் இறங்குவதால் தான், ‘மேட்ச் வின்னர்’ என்ற பெயரே அவருக்கு கிடைத்தது. தவிர, என்ன தான் மற்றவர்கள் அதிரடியாக ஆடினாலும், தோனியை ரசிகர்கள் நம்புவது போன்று, வேறு எந்த வீரரையும் இறுதிக் கட்டத்தில் நம்புவதில்லை.

இதைவிட இன்னொரு முக்கியமான விஷயம், தோனி தனது அதிரடியையே குறைத்து விட்டார் என்பதே. கடந்த இரண்டு ஆண்டுகளாக தனக்கு ஏதுவாக வரும் பந்துகளை மட்டுமே மைதானத்திற்கு வெளியே அனுப்பும் தோனி, மற்ற பந்துகளில் குறைந்தபட்ச ரிஸ்க் கூட எடுப்பதில்லை.

இந்த ரிஸ்கை எடுக்க பல வீரர்கள் டாப் ஆர்டரில் உள்ளனர். பினிஷிங் நேரத்தில் தோனி தான் நமக்கு தேவை. ஐபிஎல் மாதிரியான சவால்கள் நிறைந்த களத்தில், டாப் ஆர்டரில் இறங்கும் வீரர்கள் ஆக்ரோஷத்தின் உச்சியில் நின்று ஆட வேண்டும். அப்போது தான் எதிரணிகளை சிஎஸ்கே சமாளிக்க முடியும். களமிறங்கியவுடன் தோனியின் ஆட்ட வேகம் என்பது, 11 பந்துக்கு 5 ரன்கள் தான். கடைசிக் கட்டத்தில் தோனி சிக்ஸர்கள் தூக்குவார் என்பது தெரிந்தது தான். ஆனால், தொடக்கம் மிகச் சிறப்பாக இருக்க வேண்டுமெனில், அம்பதி ராயுடுவை ரெய்னாவுக்கு பிறகு களமிறக்க வேண்டும். அதன் பிறகு கேதர் ஜாதவ் களமிறங்க, அப்புறம் தான் தோனி இறங்கனும்.

ஒவ்வொரு ஆட்டத்தின் சூழலுக்கு ஏற்றவாறு வீரர்களை களமிறக்குவது வழக்கமானது தான். அப்போது தோனி ஒன் டவுன் கூட இறங்கலாம். தவறில்லை. ஆனால், ரெய்னாவுக்கு அடுத்த படியாக தோனியை தான் களம் இறக்கவேண்டும் என பிளமிங் நினைத்தால், அது அந்தளவிற்கு சரியான முடிவாக இருக்குமா? என்று தெரியவில்லை.

எங்களுக்கு பேட்ஸ்மேன் தோனியை விட, பினிஷர் தோனி தான் வேண்டும். தோனியும் பேர் வாங்கணும், சிஎஸ்கே-வும் ஜெயிக்க வேண்டுமெனில், தோனி லோ ஆர்டரில் களமிறங்கினால் மட்டுமே அது சாத்தியமாகும்.

 

×Close
×Close