ராணுவ உடையில் விருது பெற்றதால் 10 மடங்கு உற்சாகம்! - பத்மபூஷண் தோனி

இந்த சீருடையை அணிந்துள்ள எல்லா ஆண்கள் மற்றும் பெண்களுக்கும், தியாகம் செய்யும் அவர்களது குடும்பத்தினருக்கும் நன்றி

இந்திய கிரிக்கெட் அணியின் வீரரும், முன்னாள் கேப்டனுமான மகேந்திர சிங் தோனிக்கு நேற்று பத்ம பூஷண் விருது அளித்து கௌரவிக்கப்பட்டது. ராணுவ சீருடையில் விருதை பெற்றதால் பத்து மடங்கு எனது உற்சாகம் அதிகரித்து இருந்தது என தோனி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகசேவை, அறிவியல், பொறியியல், பொது நிர்வாகம், குடியுரிமை பணி, வர்த்தகம், தொழில் துறைகளில் குறிப்பிடத்தக்க அளவில் சாதனை படைத்தவர்களுக்கு ‘பத்ம’ விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது. அதன்படி, ‘இசைஞானி’ இளையராஜா உள்ளிட்ட பலருக்கு, கடந்த மாதம் 20-ம் தேதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்கினார். இந்நிலையில், இரண்டாவது கட்டமாக விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று மாலை நடைபெற்றது.

இதில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது. ராணுவ சீருடையில் பத்ம பூஷண் விருதை ஜனாதிபதியிடம் இருந்து அவர் பெற்றுக்கொண்டார். இந்திய ராணுவத்தில் தோனிக்கு லிட்டினட் கலனல் சிறப்பு பதவி வழங்கப்பட்டுள்ளது. இதனால், விருதை வாங்க முழு ராணுவ சீருடையில் வந்திருந்த தோனி, ராணுவ வீரர்களுக்கே உரித்தான கம்பீரமான மார்ச் பாஸ்ட்டுடன் நடந்து வந்து, ராயல் சல்யூட் அடித்து, தனது பத்ம பூஷண் விருதை பெற்றுக் கொண்டார். இதனை, அவரது ரசிகர்கள் மட்டுமல்லாது, அனைவரும் பார்த்து ஆச்சர்யப்பட்டு போனார்கள். நேற்று மாலை முதல், அவரது மார்ச் பாஸ்ட் வீடியோ தான் சமூக தளங்களில் ஆக்கிரமித்துள்ளது.

இந்த நிலையில், தோனி தனது இன்ஸ்டாகிராமில், “பெருமைக்குரிய பத்ம பூஷண் விருதை, ராணுவ உடையில் பெற்றது எனக்கு பத்து மடங்கு உற்சாகமாக இருந்தது. இந்த சீருடையை அணிந்துள்ள எல்லா ஆண்கள் மற்றும் பெண்களுக்கும், தியாகம் செய்யும் அவர்களது குடும்பத்தினருக்கும் நன்றி. அவர்களால் தான் நாம் நமது அரசியலமைப்பு உரிமைகளை அனுபவித்து வருகிறோம். ஜெய் ஹிந்த்!” என்று பதிவிட்டுள்ளார்.

×Close
×Close