'நாங்கள் திரும்பி வந்துவிட்டோம்!' - ரசிகர்கள் முன் கண் கலங்கிய தோனி!

நினைத்துப் பார்க்கும் போது வேதனையாக இருக்கிறது...' என்று சொல்லி முடித்தவுடன் ஐந்து நொடிகள் வரை அவரால் பேச முடியவில்லை

இரண்டு ஆண்டு தடை காலத்திற்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மீண்டும் இந்தாண்டு ஐபிஎல் தொடரில் களமிறங்க உள்ளது. முடிந்தளவு பழைய அணியை கட்டமைத்துள்ளது சிஎஸ்கே நிர்வாகம்.

2016ல், புனே அணிக்காக தேர்வு செய்யப்பட்ட பின் தோனி உதிர்த்த வார்த்தைகள் இவை, “கிரிக்கெட் எங்களுக்கு தொழில்ரீதியிலான விளையாட்டு. புனே அணியின் கேப்டனாக என்னை நியமித்ததை நான் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், இத்தனை ஆண்டுகளாக சென்னை அணிக்காக விளையாடியதை நான் என்றுமே மறக்க முடியாது. அந்த நினைவுகள் எப்போதும் பசுமையாக என் மனதில் நிலைத்திருக்கும்” என்றார்.

ஆனால், 2016ம் ஆண்டு தோனி தலைமையிலான புனே அணி தகுதிச் சுற்றோடு வெளியேறியது. தோனியின் ஐபிஎல் சரித்திரத்தில் அவரது தலைமையில் விளையாடிய அணி, பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியாமல் போனது அதுவே முதன் முறை.

இதனால், 2017ம் ஆண்டு தோனியை கேப்டன் பதவியில் இருந்து நீக்கிய புனே நிர்வாகம், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்தை கேப்டனாக்கியது. இதனால் ஒன்றும் பிரச்சனையில்லை. ஆனால், மும்பை அணியுடனான முதல் போட்டியில், புனே வென்ற பிறகு, அந்த அணி உரிமையாளரின் சகோதரர் ஹர்ஷ் கோயங்கா, ‘நான் தான் காட்டுக்கு உண்மையான ராஜா என்பதை ஸ்டீவ் ஸ்மித் நிரூபித்துவிட்டார். இவர் தான் சிறந்த தலைவர்’ என்று தோனியை மிகவும் காயப்படுத்தும் விதமாக ட்வீட் செய்திருந்தார். ஆனால், தோனி இதற்கு எதுவுமே பதில் அளிக்காமல் மவுனம் காத்தார். இவர் தான் எதுக்குமே ரியாக்ட் செய்யாதவர் ஆச்சே!

ஹர்ஷ் கோயங்கா ‘சிறந்த லீடர்’ என்று சர்டிபிகேட் கொடுத்த ஸ்டீவ் ஸ்மித் தான், இன்று பந்தை திட்டம் போட்டு சேதப்படுத்தி, கிரிக்கெட் மீதான நம்பிக்கையை சிதைத்து, ஆஸ்திரேலிய தேசத்திற்கு அவமானத்தை தேடித் தந்து, இன்று ஓராண்டு கிரிக்கெட் விளையாடவே தடை செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், மீண்டும் தற்போது களமிறங்கி இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக, மீண்டும் டாஸ் போடவிருக்கிறார் தமிழக மக்களின் செல்லப் பிள்ளை, கிரிக்கெட்டில் ரசிகர்களின் ‘தல’ மகேந்திர சிங் தோனி. வரும் ஏப்ரல் மாதம் 7ம் தேதி மும்பையுடன், சென்னை தனது முதல் போட்டியில் மோதவிருக்கிறது.

இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் தோனி உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் மல்க உரையாற்றியுள்ளார். ரசிகர்கள் முன்பு அவர் பேச ஆரம்பிக்கையில், ‘இதற்கு முன்பு நடந்த விஷயங்களை நினைத்துப் பார்க்கும் போது வேதனையாக இருக்கிறது…’ என்று சொல்லி முடித்தவுடன் ஐந்து நொடிகள் வரை அவரால் பேச முடியவில்லை. கண்ணீரை அடக்கிக் கொண்டு, பேச முயற்சிக்கும் போது, மீண்டும் பேச தடுமாறினார் தோனி. அதன் பிறகு, ‘நாங்கள் மீண்டும் வந்துவிட்டோம்.. இனி என்ன செய்யப் போகிறோம் என்பதே முக்கியம். மீண்டும் அதே சென்னை அணியை கட்டமைத்துக் கொடுத்த நிர்வாகிகளுக்கு நன்றி’ என அவர் சொன்ன போது அரங்கமே அதிர்ந்தது.

தோனி இவ்வளவு உணர்ச்சிவசப்பட்டு நாம் இதுவரை பார்த்திருக்க முடியாது. நேற்று பயிற்சிக்கு சென்ற சென்னை அணி வீரர்களுக்கு, சென்னை ரசிகர்கள் அளித்த உற்சாக வரவேற்பே, தோனி இந்தளவிற்கு கண் கலங்கவே வைத்து விட்டது எனலாம்.

தோனியை ஏன் தமிழகம் அதிகம் விரும்புகிறது தெரியுமா?

‘மீண்டும் அதே அணியை கட்டமைத்து தந்த நிர்வாகிகளுக்கு நன்றி’ என தோனி சொன்னது தான் இதற்கு விடை. தமிழர்கள், தங்களுக்கு ஒருவரை பிடித்துவிட்டால், அவரை யாருக்காகவும் விட்டுக் கொடுக்கவே மாட்டார்கள். அவர்கள் யாராக இருந்தாலும் சரி! உணர்ச்சிகளுக்கு அதிகம் மதிப்பளிப்பவர்கள் தமிழர்கள்.

அதே போன்றதொரு குணாதிசயம் கொண்டவர் தான் தோனி. தனக்கு கீழ் ஒரு அணி உருவாகி விளையாடுகிறது என்றால், எப்போதும் அதே அணி தான் தனக்கு வேண்டும் என அடம்பிடித்து கேட்பவர் தோனி. இத்தனைக்கு வீரர்கள் மிகப்பெரிய சாதனையாளர்களாக கூட இருக்கமாட்டார்கள். ஆனாலும், அதே வீரர்கள் தான் வேண்டும் என்பார்.

இப்படியொரு பிணைப்பில் தான் அவர் தமிழகத்துடன் உள்ளார். இதனால் தான் சென்னை எனது இரண்டாவது வீடு என்று எப்போதும் தோனி சொல்வதுண்டு. இதனால் தான், ரசிகர்கள் முன்பு தோனி கண் கலங்கியுள்ளார்.

எதுக்குமே கரையாத நம்ம தோனியையே கரைத்த பெருமை சென்னை ரசிகர்களையே சாரும்!.

தோனி, உணர்ச்சிவசப்பட்டு பேசிய வீடியோ இதோ,

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Sports news in Tamil.

×Close
×Close