Advertisment

தன்னை எதிர்ப்பவர்களுக்கு மட்டும் தோனி பதில் தரவில்லை; கூடவே இருக்கும் அந்த வீரருக்கும் சேர்த்து தான்!

இங்கே, ஆர்சிபிடா.... சிஎஸ்கேடா.... என்பதற்கெல்லாம் வேலை இல்லை

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
தன்னை எதிர்ப்பவர்களுக்கு மட்டும் தோனி பதில் தரவில்லை; கூடவே இருக்கும் அந்த வீரருக்கும் சேர்த்து தான்!

'I am not a man who wants revenge. But Love to reply' இந்த பழமொழி வெகு சிலருக்கே பொருந்தும். அந்த வெகு சிலரில் மகேந்திர சிங் தோனியும் ஒருவர். நேற்று நடந்து முடிந்த பெங்களூரு அணிக்கு எதிரான மேட்சில் சென்னை அணி வெற்றிப் பெற்றது முக்கியமல்ல.. ஆனால், தோனியின் அனல் பறந்த அதிரடி ஆட்டம் இருக்கிறதே... அதுதான் விஷயமே!

Advertisment

'இதுல என்னய்யா முக்கியத்துவம் இருக்கு? அவரு அதிரடி பிளேயர் தானே!. எப்படியோ, பெங்களூருவை தோற்கடிச்சிடோம்'-னு நினைச்சு கடந்திட முடியாது. ஏனெனில், இதற்கு பின்னால் அவ்வளவு வலி இருக்கு.

எவ்வளவோ பேர் தோனியின் பேட்டிங்கில் அதிரடி போச்சு என கடுமையாக விமர்சித்தனர். ஏன், நாம் கூட அப்படித் தான் உணர்ந்தோம். அதற்கு காரணம் தோனி தான். கடந்த சில ஆண்டுகளாக ஒருநாள் போட்டியாக இருந்தாலும் சரி, டி20 போட்டியாக இருந்தாலும் சரி... பேசும்படி அவர் எங்கேயும் அடிக்கவில்லை. இந்த சமயத்தில் கோலி, பெரும்பாலான சுமைகளை தன் தலையில் ஏற்றிக் கொண்டு, வெற்றியையும் பறித்துக் கொடுத்துக் கொண்டே இருந்தார். இதனால், ஆட்டோமேட்டிக்காக அணியில் தோனி நீடிக்க வேண்டுமா? என கேள்வி எழுந்தது. இதை மறுக்கவே முடியாது. தவறு என்று நியாயம் கற்பிக்கவும் முடியாது.

எவ்வளவு விமர்சனங்கள்...! முன்னாள் வீரர்கள் அகர்கர், லக்ஷ்மண் தொடங்கி நம்ம தாதா கங்குலி வரை தோனியை விமர்சிக்கத் தொடங்கினர். ஆதரவுக் கரம் நீட்டிய சேவாக் கூட, ஒருக் கட்டத்தில் பொறுமையிழந்து பட்டும் படாமல் தோனியை விமர்சித்தார்.

இது எல்லாவற்றிற்கும் மேலாக, கடந்த ஆண்டு ஐபிஎல்-லின் போது, புனே சூப்பர் ஜெயண்ட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்ட தோனி, அந்த அணி உரிமையாளரின் சகோதரரால் விமர்சிக்கப்பட்டார். போன ஐபிஎல்-லின் முதல் மேட்சில் மும்பை அணிக்கு எதிராக கடைசி ஓவரில் சிக்ஸ் அடித்து ஸ்மித் வெற்றித் தேடித் தர, 'யார் காட்டுக்கு உண்மையான ராஜா என்பதை ஸ்மித் நிரூபித்து விட்டார். உண்மையில், தோனியை முற்றிலும் காணாமல் போகச் செய்துவிட்டார்' என மிக மிக வெளிப்படையாக தோனியை விமர்சனம் செய்தார்.

இவர்கள் அனைவருக்கும், மீண்டும் சிஎஸ்கே ஜெர்ஸி அணிந்திருக்கும் தோனி 2018 ஐபிஎல்-ல் பதில் சொல்லி வருகிறார். பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கடுமையான முதுகு வலிக்கும் இடையே காட்டு காட்டு என காட்டிய தோனி, வெற்றியை பறிக் கொடுத்தாலும், நான் ஃபார்மில் இருக்கிறேன் என உரக்கச் சொன்னார்.

ஆனால், நேற்று பெங்களூரு மண்ணில், பெங்களூரு அணிக்கு எதிராக 206 ரன்கள் இலக்கை சேஸிங் செய்து, ஜீரணிக்கவே முடியாத தோல்வியை கோலிக்கு கொடுத்துள்ளார். இங்கே, ஆர்சிபிடா.... சிஎஸ்கேடா.... என்பதற்கெல்லாம் வேலை இல்லை. ஆனால், அதிரடி போச்சோ!...னு நினைத்த போது, 7 சிக்ஸர்களை பறக்கவிட்டு, எப்படி இது சாத்தியம்-னு சிந்திக்க வைத்துவிட்டார் மனுஷன்.

எவ்வளவு உழைப்பு வேண்டும் இதற்கு! எவ்வளவு மன உறுதி வேண்டும் இதற்கு! எவ்வளவு கான்ஃபிடன்ட் வேண்டும் இதற்கு! இவையனைத்தையும் இந்த 36 வயதில் தோனியால் செய்ய முடிகிறது என்றால், அவர் இன்னும் பழைய தோனியாக தான் இருக்கிறார். அவர், பழைய 'பன்னீர் செல்வமா திரும்பி-லாம் வரல... அதே அதிரடி பன்னீர் செல்வமாக தான் இருக்கிறார்.

அதிலும், குறிப்பாக தோனி அடித்த ஒவ்வொரு அடியையும் மிக உன்னிப்பாக அமைதியாக கவனித்து வந்தார் மஞ்சள் ஜெர்ஸி போட்ட வீரர் ஒருவர். வேறு யாரும் அல்ல ஹர்பஜன் சிங் தான் அது!.

கடந்த ஆண்டு, பஞ்சாபில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், "தோனியால் முன்பு போல் அதிரடி ஷாட்களை அடிக்க முடியவில்லை என்பதை கண்கூடாக நாம் பார்க்கிறோம். ஆனால், அவருக்கு மட்டும் அணியில் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கிறது. மூத்த வீரர், கேப்டனாக இருந்தவர், நல்ல அனுபவம் உடையவர்... அது களத்தில் தடுமாறும் இளம் வீரர்களுக்கு நிச்சயம் உதவும் என்றால், 19 வருடங்களாக இந்திய அணிக்காக ஆடி வரும் என்னாலும் அதைச் செய்ய முடியும். ஆனால், தோனிக்கு மட்டும் தான் வாய்ப்புகள் கொடுக்கப்படுகிறது. அந்த சிறப்பு அந்தஸ்து எனக்கு, கம்பீர் போன்றவர்களுக்கு கிடைப்பதில்லை" என்றார்.

இதை தோனி மீதான காழ்ப்புணர்ச்சியில் அவர் சொல்லவில்லை. ஒரு ஆதங்கத்தில் சொன்னார் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், சொன்னார். அதன்பிறகு, மீடியா தான் சொன்னதை திரித்து கூறிவிட்டது என்று அவர் குறைபட்டுக் கொண்டாலும், இந்த வார்த்தைகளை அவர் சொன்னது என்னவோ நிதர்சன உண்மை.

அந்த புலம்பலுக்கு தான் தோனி, நேற்று நேருக்கு நேர் பதில் சொன்னார். தோனியின் ஒவ்வொரு சிக்ஸின் போதும், கேமரா ஹர்பஜனையும் நோக்கியது. ஒருவேளை, அங்கிருந்த கேமரா மேன் கூட நமது மனநிலையில் இருந்தாரோ என்னவோ!.

மனிதன் தடுமாறுவது இயல்பு. ஆனால், அதில் எத்தனை பேர் வலிமையாக மீண்டு வந்திருக்கிறார்கள்? அப்படி மீண்டு வரும் ஒரு வீரனாக தோனி இருப்பதில் நமக்கு ஆச்சர்யமில்லை. இதனை ஹர்பஜன் சிங் அனுபவப்பூர்வமாக நேற்று உணர்ந்திருப்பார்.

அதற்கு ஆதாரம், அவர் தனது ட்விட்டரில் உதிர்த்திருக்கும், 'சபாஷ் தோனி! இதனால் தான் நீங்கள் தலைசிறந்த பினிஷர் என்று அழைக்கப்படுகிறீர்கள்' எனும் வார்த்தைகள் தான்.

publive-image

ஒன்று மட்டும் உறுதி.. தன்னை நோக்கி வரும் எந்தவொரு தனி மனித விமர்சனத்துக்கும் தோனி பதில் கொடுத்ததேயில்லை. அவரது பதில், அமைதியிலும், பொறுமையிலும், அவர் பேட்டிலும் தான் உள்ளது. பழிவாங்குதலில் தோனிக்கு நம்பிக்கை கிடையாது. ஆனால், பதில் கொடுப்பதில் தோனிக்கு அலாதி பிரியம் உண்டு.

Harbhajan Singh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment