தொடர்ந்து வாய்ப்பு வழங்கும்பட்சத்தில் ஜடேஜா நன்றாக வருவார்: தோனி நம்பிக்கை பேச்சு

"ஜடேஜா மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. தொடர்ந்து வாய்ப்பு வழங்கும்பட்சத்தில் அவர் நன்றாக வருவார் என்று நான் நம்புகிறேன்.” தோனி

கடந்த 15ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக கிங்ஸ் XI பஞ்சாப் அணி களமிறங்கியது. பஞ்சாப் மொஹாலி அரங்கத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், 4 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை பஞ்சாப் அணி வீழ்த்தியது.

இந்தப் போட்டியில், முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு மொத்தம் 197 ரன்கள் குவித்தது. இதனைத் தொடர்ந்து 198 ரன்கள் இலக்குடன் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில், 4 ரன்கள் வித்தியாசத்தில் 5 விக்கெட்கள் இழந்து மொத்தம் 193 ரன்கள் எடுத்து வெற்றியை இழந்தது. இந்த ஆண்டின் ஐபிஎல் போட்டியில், சென்னை அணி விளையாடிய 3 ஆட்டங்களும் மிக நெருக்கடியாக அமைந்துள்ளது. முதல் இரண்டு போட்டிகளிலும் நெருக்கமான வெற்றியை எட்டிய சென்னை அணி, 3வது ஆட்டத்தில், 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்தத் தோல்விக்கு காரணம், ஜடேஜாவை இறுதியில் களமிறக்கியது தான் என்று கூறப்பட்டு வருகிறது. மேலும், சுரேஷ் ரைனா அல்லது பிராவோவை களமிறக்கி இருந்தால் நிச்சயம் வெற்றி பெற்றிருக்கலாம் என்றும் பலர் கூறி வருகின்றனர்.

போட்டிகள் முடிந்த பின்னர், சென்னை அணி கேப்டன் தோனி செய்தியாளர்களை நேற்று சந்தித்தார். அப்போது:
“இது மிகவும் நெருக்கமானப் போட்டி. நாம் மற்ற அணிக்குச் சவாலாக உள்ளோம் என்பதற்கு இது போன்ற நெருக்கமான போட்டிகளே ஒரு உதாரணம். பாதுகாப்பான முறையில் ஃபீல்டிங் செய்யும் அணியாகவே நாங்கள் இருந்து வருகிறோம். எதிரணியினர் அடிந்த பவுண்டரிகளில் எதை நாம் தவிர்த்திருக்கலாம் மற்றும் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு எந்த முறையில் எளிமையான பந்துகளை வீசினோம் என்பது போன்ற விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

அனைத்துப் போட்டிகளும் நெருக்கமாக இருப்பதால் அணி வீரர்கள் நிறைய கற்றுக் கொள்ள முடியும். ஆனாலும் ஒட்டுமொத்தமாக நாங்கள் இன்னும் மேம்பட வேண்டும். ஜடேஜா மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. இந்த நேரத்தில்தான் அவர், தன்னை வெளிப்படுத்திக் கொள்ள வாய்ப்பு வழங்க வேண்டும். தொடர்ந்து வாய்ப்பு வழங்கும்பட்சத்தில் அவர் நன்றாக வருவார் என்று நான் நம்புகிறேன்.” என்று தோனி பேசினார்.
மேலும், தோனிக்கு முதுகு காயம் மோசமாக இருந்த போதிலும், கடவுள் அவருக்கு நிறையச் சக்தியை கொடுத்துள்ளதால் முதுகை அதிகம் பயன்படுத்த தேவை ஏற்படவில்லை என்றும் கூறினார். மேலும் தனது காயத்தை நன்கு அறிந்தால் அதிலிருந்து எப்படி வெளிவர வேண்டும் என்று எளிதாக தெரிந்து கொள்ளலாம் என்று நம்பிக்கையாக தோனி பேசியுள்ளார்.

×Close
×Close