டான் பிராட்மேன் 110வது பிறந்தநாள்: டூடுல் வெளியிட்டு கூகுள் மரியாதை!

பிராட்மேன் பிறந்தநாள்

கிரிக்கெட் உலகின் கடவுள் யார்? என்றால், ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேன் பெயரைத் தான் பலரும் உச்சரிப்பார்கள்.

1928 ஆம் ஆண்டில் தனது கிரிக்கெட் பயணத்தை தொடங்கிய பிராட்மேன், ஏறக்குறைய 20 ஆண்டுகள் டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். அவற்றுள் இங்கிலாந்து அணியுடன் மட்டும் 37 போட்டிகளில் விளையாடிய அவர் மொத்தம் 6,996 ரன்களைக் குவித்துள்ளார். அவரது பேட்டிங் ஆவரேஜ் 99.94. தனது கடைசிப் போட்டியில் 0 ரன்னில் அவுட்டானதால், 100-லிருந்து அவரது ஆவரேஜ் 99.94 என்றானது. இருப்பினும்,  பிராட்மேனின் டெஸ்ட் பேட்டிங் சராசரியை யாராலும் இன்னும் நெருங்கக் கூட முடியவில்லை.

டான் பிராட்மேன் 29 சதங்களும், 13 அரைசதங்களும் அடித்துள்ளார். இந்திய அணி 1998-1999 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. அந்தத் தொடரின் போது டான் பிராட்மன் தனது 90வது பிறந்த நாளை கொண்டாடினார். அப்போது இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வார்னே ஆகிய இருவரும் டான் பிராட்மேனின் பிறந்தநாளில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். அப்போது பேசிய டான் பிராட்மேன், ‘சச்சினின் ஆட்டத்தை பார்க்கும்போது அதில் என்னையே பார்ப்பது போல உள்ளது’ என்று கூறியது சச்சினுக்கு மிகப்பெரிய அங்கீகாரமாக அமைந்தது.

2001 ஆம் ஆண்டு, தனது 93வது வயதில் பிராட்மேன் காலமானார். அத்தகைய மகத்தான வீரரின் 110-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை கூகுள் கெளரவிக்கும் வகையில் சிறப்பு டூடுல் வெளியிட்டு பெருமைப்படுத்தியுள்ளது.

கூகுள் வெளியிட்டுள்ள பிராட்மேனின் டூடுல்

கூகுள் வெளியிட்டுள்ள பிராட்மேனின் டூடுல்

 

கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் இதனை ஷேர் செய்து வருகின்றனர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Sports news in Tamil.

×Close
×Close