ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து 2018: கபடி... கபடி... என பாடிக் கொண்டே களத்தில் இறங்கும் இங்கிலாந்து அணி!

இங்கிலாந்து அணியை 'An inexperienced squad' என்றே...

ஆசைத் தம்பி

FIFA World Cup Foot Ball 2018: ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் வரும் ஜூன் 14-ம் தேதி ரஷ்யாவில் தொடங்குகிறது. சுமார் ஒருமாத காலம் நடக்கும் இந்த தொடர் ஜூலை 15ம் தேதி முடிகிறது.

ஆஸ்திரேலியா, ஈரான், ஜப்பான், சவூதி அரேபியா, தென் கொரியா, எகிப்து, மொரோக்கோ, நைஜீரியா, செனெகல், துனிசியா, கோஸ்டா ரிக்கா, மெக்சிகோ, பனாமா, அர்ஜென்டினா, பிரேசில், கொழும்பியா, பெரு, உருகுவே, பெல்ஜியம், குரோஷியா, டென்மார்க், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஐஸ்லாந்து, போலந்து, போர்ச்சுகல், ரஷிய, செர்பியா, ஸ்பெயின், சுவீடன், ஸ்விட்சர்லாந்து உள்ளிட்ட 32 அணிகள் இந்த தொடரில் களமிறங்குகின்றன.

போட்டியை நடத்தும் நாடு என்பதால் ரஷ்யா நேரடியாக உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது. மற்ற 31 அணிகளும் தகுதி சுற்றின் அடிப்படையில் தேர்வாகி உள்ளன.

உலகம் முழுவதிலும் உள்ள கால்பந்து ரசிகர்களின் உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த தொடரில் பங்கேற்க இருக்கும் ஒவ்வொரு அணிகள் குறித்தும் தினம் நாம் இங்கே அலசி வருகிறோம். அதன்படி, இன்று இங்கிலாந்து அணியைப் பற்றி பார்க்கலாம்.

உலகின் மிக பழமையான இரண்டு கால்பந்து அணிகளில் ஒன்று இங்கிலாந்து, மற்றொன்று ஸ்காட்லாந்து. 1872ம் ஆண்டில் தனது முதல் சர்வதேச கால்பந்தாட்ட போட்டியில் இங்கிலாந்து விளையாடியது. லண்டன் நகரில் இப்போட்டி நடைபெற்றது.

சர்வதேச கால்பந்து அரங்கில் பலம் வாய்ந்த அணியாக திகழ்ந்தாலும், பல நட்சத்திர வீரர்களை உருவாக்கி இருந்தாலும், கடந்த 64 வருட கால்பந்து வரலாற்றில், 17 முறை உலகக் கோப்பைத் தொடரில் பங்கேற்றுள்ளது. ஆனால், இதில் 1966ல் நடந்த உலகக் கோப்பைத் தொடரில் மட்டும் இங்கிலாந்து சாம்பியன் பட்டம் வென்றது. அந்த இறுதிப் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்றது. அதைத் தவிர, 1990ல் நடந்த உலகக் கோப்பையில் நான்காம் இடம் பிடித்தது. ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் இங்கிலாந்து அணியின் மிகச் சிறந்த செயல்பாடுகள் இந்த தொடர்களில் மட்டும் தான் அரங்கேறியது.

உலகக் கோப்பையை தவிர்த்து, ஃபிபா அங்கீகரிக்கும் இரண்டு மிகப் பெரிய கால்பந்து தொடர்கள் UEFA ஐரோப்பிய சாம்பியன்ஷிப் தொடர் மற்றும் ஃபிபா கான்பெடரேஷன்ஸ் கோப்பை. இவ்விரு தொடர்களில் UEFA ஐரோப்பிய சாம்பியன்ஷிப் தொடரில் மட்டும் இங்கிலாந்து பங்கேற்றுள்ளது. ஆனால், ஃபிபா கான்பெடரேஷன்ஸ் கோப்பைக்கு இங்கிலாந்து ஒருமுறை தகுதி பெறவில்லை.

அதேசமயம், கடந்த 56 வருடங்களில் 15 முறை UEFA ஐரோப்பிய சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்றுள்ள இங்கிலாந்து ஒருமுறை  கூடடைட்டில் வெல்லவில்லை என்பது மற்றொரு சோகமான தகவல்!. 1968 மற்றும் 1996களில் நடந்த ஐரோப்பிய சாம்பியன்ஷிப் தொடரில் அரையிறுதி வரை முன்னேறியதே இங்கிலாந்து அணியின் சிறந்த செயல்பாடாகும்.

கடந்த 2014 உலகக் கோப்பையில், இங்கிலாந்து அணி வெறும் ஒரேயொரு புள்ளியோடு லீக் சுற்றுடன் வெளியேறியது. தொடக்க போட்டியில் இத்தாலிக்கு எதிராக 2-1 என இங்கிலாந்து தோற்றது. இந்த வலியை இங்கிலாந்து ரசிகர்கள் இன்றும் மறக்கவில்லை.

ஆகையால், இந்த உலகக் கோப்பையில் எப்படியும் கோப்பையை வென்றுவிட வேண்டும் என மிகத் தீவிரமாக உள்ளது இங்கிலாந்து அணி.

2018 கால்பந்து உலகக் கோப்பைக்கான இங்கிலாந்து அணி வீரர்கள் விவரம்:

கோல் கீப்பர்கள்:

ஜோர்டன் பிக்ஃபோர்ட், ஜாக் பட்லான்ட், நிக் போப்

டிஃபென்டர்:

கைல் வாக்கர், டேனி ரோஸ், ஜான் ஸ்டோன்ஸ், ஹேரி மேகிர், கிரண் ட்ரிப்பர், கேரி கேஹில், ஃபில் ஜோன்ஸ், ஃபேபியன் டெல்ஃப், ஆஷ்லே யங், ட்ரென்ட் அலெக்சாண்டர்-யங்

மிட் ஃபீல்டர்:

எரிக் டயர், ஜெஸ்ஸி லிங்கார்ட், ஜோர்டன் ஹெண்டெர்சன், டெலே அல்லி, ரூபென் லோஃபட்ஸ் – சீக்

ஃபார்வேர்ட்ஸ்:

ஹேரி கேன் (கேப்டன்), ரஹீம் ஸ்டெர்லிங், ஜேமி வெர்டி, டேனி வெல்பெக், மார்க்ஸ் ராஷ்ஃபோர்ட்.

மேனேஜர், தலைமை கோச் – கேரத் சவுத் கேட்.

இந்த அணியுடன் உலகக் கோப்பையில் காலடி எடுத்து வைக்க உள்ளது இங்கிலாந்து அணி. கடந்த இரு ஆண்டுகளில் இங்கிலாந்து விளையாடிய எந்த போட்டியிலும் தோற்கவில்லை என்பது மிகப் பெரிய பிளஸ்ஸாக பார்க்கப்படுகிறது.

சமீபத்திய ஃபார்மை ஆராயும் நோக்கில் நாம் பார்க்கும் பொழுது, கடந்த 2017ம் ஆண்டில் நான்கு உலகக் கோப்பை தகுதிப் போட்டிகளில் இங்கிலாந்து ஆடியது. இதில், மால்டா அணியுடனான போட்டியில் 4-0 என்ற கோல் கணக்கிலும், ஸ்லோவேகியா அணிக்கு எதிராக 2-1 எனும் கோல் கணக்கிலும், ஸ்லோவேனியா அணிக்கு எதிராக 1-0 என்ற கோல் கணக்கிலும், லித்தானியா அணியுடனான போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கிலும் இங்கிலாந்து வெற்றிப் பெற்றுள்ளது.

அதேசமயம், மிக பலம் வாய்ந்த அணிகளான ஜெர்மனி மற்றும் பிரேசில் உடனான நட்பு ரீதியிலான போட்டியில் 0-0 என டிரா செய்தது. ஒரே நல்ல விஷயம் தோற்கவில்லை.

இந்தாண்டில் இங்கிலாந்து அணியின் ஃபார்மை பார்க்கும் பொழுது, நெதர்லாந்து அணிக்கு எதிராக கடந்த மார்ச் மாதத்தில் நடந்த போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கிலும், நைஜீரியாவுக்கு எதிராக 2-1 என்ற கோல் கணக்கிலும், கோஸ்டா ரிகா அணிக்கு எதிராக 2-0 என்ற கோல் கணக்கிலும் இங்கிலாந்து வென்றுள்ளது.

ஆனால், மீண்டும் இங்கு நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், பலம் வாய்ந்த இத்தாலி அணிக்கு எதிரான போட்டியில் 1-1 என டிரா செய்துள்ளது இங்கிலாந்து.

ஆக, 2017ம் ஆண்டு முதல் எந்த போட்டியிலும் தோற்கவில்லை என்றாலும், உலகின் தலை சிறந்த அணிகளுக்கு எதிரான போட்டிகளில் வெற்றியும் பெறவில்லை. இது இங்கிலாந்து அணிக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்து அணி குரூப் G-ல் இடம் பெற்றுள்ளது. இதில், பெல்ஜியம், பனாமா, துனீசியா உள்ளிட்ட அணிகள் இடம் பெற்றுள்ளன. இதனால், லீக் போட்டிகளில் அனாயசமாக இங்கிலாந்து வெல்லும் என கணிக்கப்படுகிறது.

இங்கிலாந்து மோதும் போட்டி நடைபெறும் நாள்:

ஜூன் 18 – துனிசியா vs இங்கிலாந்து

ஜூன் 24 – இங்கிலாந்து vs பனாமா

ஜூன் 28 – இங்கிலாந்து vs பெல்ஜியம் .

பயிற்சியில் பல புது யுக்திகளை இங்கிலாந்து கையாண்டு வருகிறது. அந்நாட்டு கால்பந்து அணி வீரர்கள் அனைவரும், இரண்டு அணிகளாக பிரிந்து கபடி விளையாடி தங்கள் மைண்டை ஃப்ரீயாக, ரிலாக்ஸாக வைத்துக் கொள்கின்றனர். இந்தியா உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்களோ, தங்கள் பயிற்சிகளின் போது கால்பந்து விளையாடி ரிலாக்ஸ் செய்து கொள்ளும் சூழலில், சர்வதேச இங்கிலாந்து கால்பந்து அணியினர் கபடி விளையாடி தங்களை ரிலாக்ஸ் செய்கின்றனர்.

உலகக் கோப்பைக்கான இங்கிலாந்து அணியை ‘An inexperienced squad’ என்றே வல்லுனர்கள் அழைக்கின்றனர். கேப்டன் உட்பட பெரும்பாலான வீரர்கள் அதிக அனுபவமில்லாத வீரர்களாக உள்ளனர். இருப்பினும், ஏற்கனவே உலக கோப்பை தகுதி சுற்றில் அணியை வழிநடத்திய அனுபவம், 24 வயதான கேப்டன் ஹேரிக்கு உள்ளது. ஹேரி கேன் இதுவரை, 23 ஆட்டங்களில் விளையாடி 12 கோல்கள் அடித்துள்ளார். இதனால், இங்கிலாந்து அணி நிச்சயம் சாதிக்கும் என தலைமை பயிற்சியாளர் கேரத் சவுத் கேட் கூறியுள்ளார்.

சமீபத்தில், மைதானத்திற்கு ரசிகர்கள் வந்து இந்திய கால்பந்து அணியை ஆதரிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்து, ஒரு வாரத்திற்கு இணையத்தை கலக்கிய இந்திய கேப்டன் சுனில் சேத்ரியிடம் ரஷ்ய உலகக் கோப்பையில் எந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு என்று கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த சுனில், ஜெர்மனி, ஸ்பெயின், இங்கிலாந்து, பிரேசில் ஆகிய நான்கு அணிகளுக்கு அதிக வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளார். சுனிலின் கணிப்பு படி, கோப்பை வெல்லும் அணியில் ஒன்றாக இங்கிலாந்து இருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

×Close
×Close