தைரியமாக, ஆக்ரோஷமாக இங்கிலாந்து விளையாட வேண்டும்! - கேப்டன் ஹேரி கேன்

தொடக்கம் முதலேயே ஆதிக்கம் செலுத்த விரும்புகிறோம்

FIFA World Cup Foot Ball 2018: ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் வரும் ஜூன் 14-ம் தேதி ரஷ்யாவில் தொடங்குகிறது. சுமார் ஒருமாத காலம் நடக்கும் இந்த தொடர் ஜூலை 15ம் தேதி முடிகிறது.

32 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில், போட்டியை நடத்தும் நாடு என்பதால் ரஷ்யா நேரடியாக தகுதிப் பெற்றது. மற்ற 31 அணிகளும் தகுதி சுற்றின் அடிப்படையில் தேர்வாகி உள்ளன. அந்த 32 அணிகளில் இங்கிலாந்தும் ஒன்று. குரூப் G-ல் இடம் பெற்றுள்ள இங்கிலாந்து, பெல்ஜியம், பனாமா, துனீசியா உள்ளிட்ட அணிகளை லீக் போட்டிகளில் எதிர்கொள்கிறது.

ஜூன் 18 – துனிசியா vs இங்கிலாந்து

ஜூன் 24 – இங்கிலாந்து vs பனாமா

ஜூன் 28 – இங்கிலாந்து vs பெல்ஜியம்

உலகக் கோப்பைக்கான இங்கிலாந்து அணியை ‘An inexperienced squad’ என்றே வல்லுனர்கள் அழைக்கின்றனர். கேப்டன் உட்பட பெரும்பாலான வீரர்கள் அதிக அனுபவமில்லாத வீரர்களாக உள்ளனர். இருப்பினும், ஏற்கனவே உலக கோப்பை தகுதி சுற்றில் அணியை வழிநடத்திய அனுபவம், 24 வயதான கேப்டன் ஹேரிக்கு உள்ளது. ஹேரி கேன் இதுவரை, 23 ஆட்டங்களில் விளையாடி 12 கோல்கள் அடித்துள்ளார். இதனால், இங்கிலாந்து அணி நிச்சயம் சாதிக்கும் என தலைமை பயிற்சியாளர் கேரத் சவுத் கேட் கூறியுள்ளார்.

இந்த நிலையில், இங்கிலாந்து கேப்டன் ஹேரி கேன் அளித்துள்ள பேட்டியில், “இந்த உலகக் கோப்பையில் இங்கிலாந்து அணி தைரியமாகவும், ஆக்ரோஷமாகவும் களமிறங்க வேண்டும். நாங்கள் தொடக்கம் முதலேயே இந்தத் தொடரில் ஆதிக்கம் செலுத்த விரும்புகிறோம். கடினமான தருணங்கள் ஏற்படலாம். ஏற்றம் இறக்கம் உண்டாகலாம். பெரிய தொடர்களுக்கு செல்லும் போது நாம் தாக்குதலான கால்பந்தாட்டத்தை ஆட வேண்டும். முதலில் முதல் போட்டியை வெல்ல வேண்டும். அடுத்ததாக இரண்டாவது போட்டியை டார்கெட் செய்ய வேண்டும். அப்படியே படிப்படியே சென்று கோப்பையை தட்ட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

×Close
×Close