ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து 2018: தொடர் தோல்விகள்... ஜெர்மனி அணி கோப்பையை தக்க வைக்குமா?

ஆசைத் தம்பி

FIFA World Cup 2018: ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் வரும் ஜூன் 14-ம் தேதி ரஷ்யாவில் தொடங்குகிறது. சுமார் ஒருமாத காலம் நடக்கும் இந்த தொடர் ஜூலை 15ம் தேதி முடிகிறது.

ஆஸ்திரேலியா, ஈரான், ஜப்பான், சவூதி அரேபியா, தென் கொரியா, எகிப்து, மொரோக்கோ, நைஜீரியா, செனெகல், துனிசியா, கோஸ்டா ரிக்கா, மெக்சிகோ, பனாமா, அர்ஜென்டினா, பிரேசில், கொழும்பியா, பெரு, உருகுவே, பெல்ஜியம், குரோஷியா, டென்மார்க், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஐஸ்லாந்து, போலந்து, போர்ச்சுகல், ரஷிய, செர்பியா, ஸ்பெயின், சுவீடன், ஸ்விட்சர்லாந்து உள்ளிட்ட 32 அணிகள் இந்த தொடரில் களமிறங்குகின்றன.

போட்டியை நடத்தும் நாடு என்பதால் ரஷ்யா நேரடியாக உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது. மற்ற 31 அணிகளும் தகுதி சுற்றின் அடிப்படையில் தேர்வாகி உள்ளன.

உலகம் முழுவதிலும் உள்ள கால்பந்து ரசிகர்களின் உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த தொடரில் பங்கேற்க இருக்கும் ஒவ்வொரு அணிகள் குறித்தும் தினம் நாம் இங்கே அலசி வருகிறோம். இன்று மூன்றாவது அணியாக ஜெர்மனியைப் பற்றி பார்க்கலாம்.

பிரேசிலைப் போன்றே சர்வதேச கால்பந்து உலகில் வலிமையான மற்றொரு அணி என்றால் அது ஜெர்மனி தான். இதுவரை நான்கு முறை ஃபிபா உலகக் கோப்பையை கைப்பற்றியுள்ளது ஜெர்மனி. 1954, 1974, 1990, 2014 என நான்கு முறை பட்டத்தை ருசித்துள்ளது அந்த அணி. தற்போது ‘நடப்பு சாம்பியன்’ ஜெர்மனி தான்.

அதுமட்டுமின்றி, மூன்று முறை (1972, 1980, 1996) ஐரோப்பா சாம்பியன்ஷிப் பட்டத்தையும், 2017ம் ஆண்டு ஃபெடரேஷன்ஸ் கோப்பையையும் கைப்பற்றியுள்ளது ஜெர்மனி அணி. மேலும், மூன்று முறை ஐரோப்பா சாம்பியன்ஷிப்ஸ்-ல் இரண்டாம் இடமும், உலகக் கோப்பையில் நான்கு முறை இரண்டாம் இடமும் பிடித்துள்ளது ஜெர்மனி கால்பந்து அணி. 1976ம் ஆண்டு கிழக்கு ஜெர்மனி ஒலிம்பிக்கில் தங்கம் வென்றிருந்தது.

தவிர, ஜெர்மனி மட்டும் தான் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரு பிரிவுகளிலும் உலகக் கோப்பையை வென்ற ஒரே அணி என்ற பெருமையைப் பெறுகிறது. மேலும், ஃபிபா அங்கீகரிக்கும் மிக முக்கிய மூன்று தொடர்கள் (உலகக் கோப்பை, கான்ஃபெடரேஷன்ஸ் கோப்பை, ஒலிம்பிக் தொடர்) வென்ற நான்கு உலக அணிகளுள் ஜெர்மனியும் ஒன்று. பிரேசில், அர்ஜென்டினா, பிரான்ஸ் ஆகிய அணிகள் இந்த பெருமையை பெறுகின்றன.

2014ல் நடந்த உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியதை அடுத்து, கால்பந்து வரலாற்றிலேயே அதிக ‘எலோ'(Elo – ஃபிபா தரவரிசை போன்று இதுவும் ஒன்று) ரேட்டிங்கை பெற்ற அணி என்ற சாதனையைப் படைத்தது ஜெர்மனி. 2205 ரேட்டிங் பெற்றது அந்த அணி. அமெரிக்காவில் உலகக் கோப்பை வென்ற ஒரே ஐரோப்பா அணி என்ற பெருமையும் இந்த அணிக்கு உரித்தானதே.

முதன் முதலாக 1954ம் ஆண்டு ஜெர்மனி உலகக் கோப்பையை கைப்பற்றியது இன்றளவும் ரசிகர்கள் மறக்க முடியாத நிகழ்வாகும். அந்தத் தொடரில் மேற்கு ஜெர்மனி எனும் பெயரில் களமிறங்கிய ஜெர்மனி அணி, லீக் போட்டியில் ஹங்கேரி அணியுடன் மோதிய போது 3-8 என்ற கணக்கில் மிக மோசமாக தோற்றது. ஆனால், அதே ஹங்கேரி அணியை இறுதிப் போட்டியில் மீண்டும் சந்தித்த போது, 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.

இப்படி சாதனைகளை தன்வசம் குவித்து வைத்திருக்கும் ஜெர்மனி, தற்போது கையிலிருக்கும் கோப்பையை தவறவிட்டுவிடக் கூடாது என்பதில் மிகத் தீவிரமாக உள்ளது.

2018 உலகக்கோப்பைக்கான ஜெர்மனி அணியில் இடம் பிடித்துள்ள வீரர்களின் விவரம் பின்வருமாறு,

கோல் கீப்பர்கள்:

மானுவல் நியுர், பெர்ன்ட் லெனோ, மார்க்-ஆண்ட்ரே டெர் ஸ்டெஜன், கேவின் டிராப்

டிஃபென்டர்கள்:

மார்வின் பிளாட்டன்ஹார்ட், ஜோனஸ் ஹெக்டர், மாத்தியாஸ் ஜிண்டர், மேட்ஸ் ஹம்மல்ஸ், ஆண்டோனியோ ருடிஜர், ஜெரோம் போடெங், ஜோஷுவா கிம்மிச், ஜோனதான் தா, நிக்லஸ் சுல்.

மிட் ஃபீல்டர்கள்:

சமி கெதிரா, ஜூலியன் டிராக்ஸ்லர், டோனி க்ரூஸ், மெசட் ஓசில், லியோன் கொரெட்ஸ்கா, செபாஸ்டியன் ரூடி, லெராய் சேன், ஜூலியன் பிராண்டட், லிகே குண்டோகன்.

ஃபார்வேட்ஸ்:

டிமோ வெர்னர், மார்கோ ரியோஸ், தாமஸ் முல்லர், மேரியோ கோமெஸ், நில்ஸ் பீட்டர்சன்

ஆகிய இந்த 23 வீரர்களுடன் களமிறங்குகிறது ஜெர்மனி. மானுவல் நியுர் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஜோச்சிம் லோ தலைமை பயிற்சியாளராக உள்ளார். கடந்த ஆண்டு உலகக் கோப்பை வென்றவுடன் அந்த அணியின் மிரோஸ்லாவ் க்ளோஸ் ஓய்வு பெற்றது தற்போது ஜெர்மனிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. 71 கோல்கள் அடித்துள்ள க்ளோஸ், அதிக கோல் அடித்த ஜெர்மனி வீரர் எனும் பெருமையை பெறுகிறார்.

அதேபோல் லூகாஸ் போடல்ஸ்கியும் கடந்த ஆண்டு (2017) ஓய்வு பெற்றுவிட்டார். 2014 ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவுக்கு எதிராக வெற்றி கோல் அடித்த மேரியோ கோட்சேவுக்கு அணியில் இடம் அளிக்கப்படவில்லை. அதேபோல் வாக்னருக்கும் அணியில் வாய்ப்பு தரப்படவில்லை. கோட்சே, வாக்னரின் வெளியேற்றம் ஆச்சர்யம் கலந்த அதிர்ச்சியான விஷயமே.

வெர்னர், முல்லர், மானுவல் நியுர், ஓசில் உள்ளிட்ட சில வீரர்களையே ஜெர்மனி பெரிதும் நம்பியிருக்கிறது.

ஆனால், ஜெர்மனி ரசிகர்களுக்கு அதிர்ச்சியான விஷயம் என்னவெனில், இந்த உலகக் கோப்பைக்கு தயாராகும் விதத்தில் ஜெர்மனி அணி, ஆஸ்திரிய அணிக்கு எதிராக விளையாடிய பயிற்சிப் போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் தோற்றுள்ளது. அதுமட்டுமின்றி, கடைசியாக விளையாடிய ஐந்து நட்பு கால்பந்து போட்டியில் ஒன்றில் கூட ஜெர்மனி வெற்றிப் பெறவில்லை. இங்கிலாந்துக்கு எதிராக 0-0, பிரான்ஸ் 2-2, ஸ்பெயின் 1-1 என டிரா செய்த ஜெர்மனி, பிரேசிலிடம் 1-0 எனவும், ஆஸ்திரியாவுடன் 2-1 என்றும் தோற்றுள்ளது.

இதனால், ரசிகர்கள் மிகுந்த அதிருப்தியில் உள்ளனர். இருப்பினும், இந்த தடைகளையும், அவப் பெயர்களையும் மீறி, ஜெர்மனி அணி சாதிக்கும் என மனதில் இருந்து நம்புகின்றனர் அந்நாட்டு ரசிகர்கள்!.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

×Close
×Close