Advertisment

ரத்தத்தின் ரத்தமே… தமிழ்நாடு ஹாக்கியில் களமாடும் அண்ணன் - தங்கை: சிறப்பு நேர்காணல்

ஸ்ரீனிவாசன் - கனிமொழியின் தந்தை முருகன் - தாய் கவிதா இருவரும் பாலக்கோடு பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.

author-image
Martin Jeyaraj
புதுப்பிக்கப்பட்டது
New Update
Hockey, HUTN Junior men captain Srinivasan and women player kanimozhi interview in tamil

Hockey Unit of Tamilnadu Men Captain Srinivasan and Women player Kanimozhi (Express Photo: S. Martin Jeyaraj)

ச.மார்ட்டின் ஜெயராஜ் – ராமநாதபுரம் மாவட்டம்

Advertisment

Ramanathapuram, Hockey India Junior Men and women south zone Championship 2023 Tamil News: ‘ஹாக்கி இந்தியா’ நடத்தும் முதலாவது தென்னிந்திய ஜூனியர் ஆடவர் மற்றும் மகளிர் ஹாக்கி சாம்பியன்ஷிப் 2023 போட்டிகள் ராமநாதபுரத்தில் கோலாகலமாக அரங்கேறி வருகிறது. இந்த தொடருக்கான இறுதிப்போட்டிகள் நாளை மறுநாள் (ஞாயிற்றுகிழமை - மார்ச் 26ம் தேதி) நடக்கிறது. இந்த இறுதிப்போட்டியில், தமிழ்நாட்டின் ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் கர்நாடகாவின் ஆடவர் மற்றும் மகளிர் அணிகளுடன் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்நிலையில், தமிழ்நாடு ஹாக்கி அணியில் அண்ணன் - தங்கை இடம்பிடித்து விளையாடி வருவது இங்குள்ள ஹாக்கி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இவர்களில், அண்ணன் ஸ்ரீனிவாசன் (18) தமிழ்நாடு ஆடவர் அணியை கேப்டனாக வழிநடத்தி வருகிறார். தங்கை கனிமொழி (16) இளம் மகளிர் அணியில் முக்கிய வீராங்கனையாக விளையாடி வருகிறார். அவர்களை நாம் நேரில் சந்தித்து பேசினோம்.

publive-image

தமிழ்நாடு ஆடவர் அணி கேப்டன் ஸ்ரீனிவாசன் - இளம் மகளிர் அணி வீராங்கனை கனிமொழி (Express Photo: S. Martin Jeyaraj) 

நேர்காணலைத் தொடங்கும் முன் பதற்றம் கலந்த குரலுடன் புன்னகை தவழ வரவேற்று கை குலுக்கினார் ஸ்ரீனிவாசன். "ஸ்கூல்ல பசங்க ஹாக்கி ஆடுவதை பார்த்து தான் நானும் விளையாட ஆரம்பிச்சேன். அது நல்லா ஜாலியா இருந்துச்சு. அப்பறம் 8ம் வகுப்பு முடிச்ச கையோட திருநெல்வேலில செலக்சன் ட்ரயல்ஸ் அட்டன் பண்ண போனேன். லிஸ்ட்ல பெயர் வந்துச்சு. சென்னைல கவுன்சலிங் முடிந்ததும், திருச்சி தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டல்ல (SDAT) சேர்ந்தேன். அங்க 9ம் வகுப்புல இருந்து ப்ளஸ் 2 வர படிச்சேன். இப்ப கோவில்பட்டி செண்டர் ஆஃப் எக்ஸலன்ஸ்ல (SHE) முதலாம் ஆண்டு படிக்கிறேன்." என்று நம்மிடம் கடகடவென பேசத் தொடங்கினார் ஸ்ரீனி.

ஸ்ரீனிவாசன் - கனிமொழி தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். தந்தை முருகன் - தாய் கவிதா ஆகிய இருவரும் பாலக்கோடு பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இருப்பினும், அவர்கள் ஒருபோதும் தங்களது குழந்தைகளின் கனவுக்கு தடை போட்டதில்லை. எப்போதும், எந்த சூழலிலும் அவர்களுக்கு தட்டிக் கொடுத்து உற்சாகமூட்டும் பெற்றோர்களாகவே இருந்து வருகின்றனர்.

publive-image

"9ம் வகுப்பு முடிச்சப்ப ஃபர்ஸ்ட் ஹாஸ்டல்ல தங்கி ஒரு நார்மலான ஸ்கூல்ல சேர்த்து விட தான் பிளான் பண்ணாங்க. ஹாக்கில கப், மெடல் ஜெயிக்கிறத பார்த்துட்டு, இந்த லைன்ல பையன் போகட்டும்னு அம்மா சப்போர்ட் கொடுத்தாங்க. அப்பறம் ரெகுலரா மேட்ச் ஆட போனேன். ஆனா, சில சமயம் கையில சுத்தமாக காசு இருக்காது. ஒரு மேட்ச்ல வின் பண்ண பைசாவ வச்சுத் தான் அடுத்த மேட்ச்க்கு போக செலவு பண்ணுவேன்.

சமீபத்தில சப்-ஜூனியர் லெவல்ல மெடல் பண்ணேன். அத கேட்டு அம்மா சந்தோஷப் பட்டாங்க. இப்ப தான் அவங்களுக்கு எம்மேல கொஞ்சம் கூடுதலா நம்பிக்கை வந்துருக்கு. கேட்குறத வாங்கி கொடுக்குறாங்க. வெளில போக அலோ பண்ணுறாங்க." என ஸ்ரீனி கூறினார்.

publive-image

பெண் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பல ஆண்டுகால இடைவெளியை எடுத்துக்கொண்ட நமது சமூகம், அதே அளவு இடைவெளியைத் தான் தற்போது விளையாட்டுகளில் பங்கேற்கவும் எடுத்து வருகிறது. அதற்கு சில பெற்றோர்கள் விதிவிலக்காக இருக்கிறார்கள். கனிமொழி தனது ஹாக்கி பயணத்தை தொடங்க பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்தது எப்படி? என்று கேட்டபோது, "முதலில் அம்மா கொஞ்சம் தயங்கினாங்க. அப்பறம் கோச் எடுத்து சொன்னாங்க. செலக்சன் நடந்தப்ப அம்மா நேர்ல வந்து பாத்தாங்க. என்னென்ன நடைமுறைன்னு அங்க பாத்து தெரிஞ்சிக்கிட்டாங்க. இப்ப ரொம்ப நல்லா சப்போர்ட் பண்ணுறாங்க. அப்பா எப்பவுமே எனக்கு சப்போர்ட் பண்ணுவாங்க." என்று கூறுகிறார்.

publive-image

கனிமொழி தற்போது கர்நாடகா அணிக்கு எதிராக சனிக்கிழமை நடக்கும் லீக் ஆட்டத்திற்கும், மறுநாள் ஞாயிற்றுகிழமை நடக்கும் இறுதிப்போட்டிக்கு ஆயத்தமாகி வருகிறார். இதேபோல், அவரது அண்ணன் ஸ்ரீனி கர்நாடகாவுக்கு எதிராக ஞாயிற்றுகிழமை நடக்கும் இறுதிப்போட்டிக்கு தயாராகி வருகிறார். நேற்று வியாழக்கிழமை நடந்த லீக் ஆட்டத்தில் கர்நாடக அணியிடம் தமிழகம் 4-2 என்ற கணக்கில் தோல்வி கண்டது. அதற்கு இறுதிப்போட்டியில் பதிலடி கொடுத்து கோப்பையை கைப்பற்றுவோம் என்று கேப்டன் ஸ்ரீனி நம்பிக்கை தெரிவித்தார்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Tamilnadu Sports Hockey Indian Hockey
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment