உலக ஹாக்கி லீக் : அரை இறுதிக்கு முன்னேறியது இந்தியா

ஒடிசாவில் நடைபெறும் உலக ஹாக்கி லீக் போட்டியில் பரபரப்பான ஆட்டத்தில் பெல்ஜியத்தை வீழ்த்திய இந்திய அணி, அரை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

ஒடிசாவில் நடைபெறும் உலக ஹாக்கி லீக் போட்டியில் பரபரப்பான ஆட்டத்தில் பெல்ஜியத்தை வீழ்த்திய இந்திய அணி, அரை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

உலக ஹாக்கி லீக் பைனல்ஸ் தொடர் போட்டிகள் ஒடிசாவின் புவனேஸ்வரில் நடந்து வருகிறது. ஹாக்கியில் சர்வதேச தரவரிசையில் முதல் 8 இடங்களில் உள்ள அணிகள் இதில் பங்கேற்கின்றன. நேற்று (டிசம்பர் 6) நடைபெற்ற காலிறுதி போட்டியில் இந்தியா – பெல்ஜியம் அணிகள் மோதின.

முதல் 30 நிமிட ஆட்டத்தில் இரு அணியினரும் கோல் அடிக்கவில்லை. தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தின் 31-வது நிமிடம் இந்தியாவின் குர்ஜந்த் சிங் முதல் கோல் அடித்தார். அதன்பின் 35-வது நிமிடத்தில் இந்திய வீரர் ஹர்மன்பிரீத் சிங் 2-வது கோல் அடித்தார். இதனால் 2-0 என்ற கோல் கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பின்னர் பெல்ஜியம் அணி விளையாடியது. பெல்ஜியம் அணியின் லைபார்ட் லாயிக் 39-வது மற்றும் 46-வது நிமிடத்தில் அடுத்தடுத்து இரண்டு கோல்கள் அடித்தார். இதனால் ஆட்டம் 2-2 என சமனானது. 46-வது நிமிடத்தில் இந்தியாவின் ருபிந்தர் பால் சிங் ஒரு கோல் அடித்தார். அடுத்ததாக 53-வது நிமிடத்தில் பெல்ஜியத்தின் கியூஸ்டர்ஸ் அமவுரி ஒரு கோல் அடித்தார். அதன்பின் மேற்கொண்டு எந்த கோலும் அடிக்காததால் ஆட்டம் 3-3 என சமனில் முடிந்தது.

இது நாக்-அவுட் சுற்று என்பதால் வெற்றியை தீர்மானிக்க பெனால்டி சூட்-அவுட் முறை பின்பற்றப்பட்டது. இதில் இந்திய அணி 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது. வலிமையான பெல்ஜியம் அணியை இந்தியா வீழ்த்தியது முக்கியத்துவம் பெறுகிறது.

மற்றொரு காலிறுதி போட்டியில் ஸ்பெயின் – ஆஸ்திரேலியா அணிகள் மோதின. அதில் 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அறையிறுதி போட்டிக்கு முன்னேறியது.

 

×Close
×Close