Cricket Tamil News: ஐபிஎல் என்பது இந்திய வீரர்களுக்கு முக்கியமான உள்நாட்டுப் போட்டியாகும். ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு தேசிய அணியிலும் விளையாட வாய்ப்பு கிடைக்கும். அவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், தீபக் ஹூடா, உம்ரான் மாலிக், மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் போன்ற வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அவர்களுக்கான இந்திய அணி வாய்ப்பு தேடி வந்தது.

இதேபோல், இந்திய கிரிக்கெட்டில் அணியில் சிறப்பாக விளையாடி, ஒரு கட்டத்தில் ஃபார்ம் அவுட் ஆனா வீரர்களுக்கு தங்களின் ஃபார்மை மீட்டுக்கும் களமாகவும் இந்த தொடர் இருந்து வருகிறது. உதாரணமாக தினேஷ் கார்த்திக் உள்ளிட்ட மூத்த வீரர்களை குறிப்பிடலாம். ஆனால், ஐபிஎல் தொடர்களில் என்ன தான் பெரிய ராஜாவாக வலம் வந்தாலும், அவர்களுக்கு சில காரணங்களால், இந்திய அணியில் சர்வதேச கிரிக்கெட்டுக்கு வாய்ப்பு கொடுக்கப்படுவதில்லை. அத்தகைய 3 வீரர்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
- குல்தீப் யாதவ்

இந்த பட்டியலில் முதல் வீரராக இருப்பவர் குல்தீப் யாதவ். இடது கை சுழற்பந்து வீச்சாளரான ஒரு காலத்தில் இந்தியாவின் சுழல் மன்னனாக வலம் வந்தார். ஆனால், அவரைத் தொடர்ந்து துரத்திய காயம் அவரை பல ஆட்டங்களில் விளையாட விடாமல் தடுத்தது. எனினும், ஐ.பி.எல் -லில் தனது முழுத்திறனை பயன்படுத்தி ஜொலித்து வருகிறார். குறிப்பாக, நடப்பு ஐ.பி.எல் சீசனில் அவர் தனது சிறந்த சுழல் வித்தையை வெளிப்படுத்தி 21 விக்கெட்டுகளுடன் 5 வது சிறந்த விக்கெட் டேக்கர் என்கிற பெருமைப் பெற்றார்.

இந்திய அணி விளையாடி சமீபத்திய தொடர்களிலும், தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 ஐ தொடரிலும், குல்தீப் யாதவ் அணியில் இடம்பெற்று இருந்தாலும், காயம் காரணமாக விலகும் நிலை ஏற்பட்டுள்ளது. அவரின் சமீபத்திய பேட்டியில், “தோல்விகளைக் கண்டு நான் இப்போது பயப்படவில்லை” என்று குல்தீப் யாதவ் குறிப்பிட்டு இருந்தார்.
2. டி நடராஜன்

தமிழக வீரரான நடராஜன் ஒரு இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஆவார். இவர் கடந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 1 டெஸ்டில் 3 விக்கெட்டுகளையும், 2 ஒருநாள் போட்டிகளில் 3 விக்கெட்டுகளையும், 4 டி20 போட்டிகளில் 7 விக்கெட்டுகளையும் வீழ்த்தி தனது சர்வதேச வாழ்க்கையை சிறப்பாக தொடங்கினார். இருப்பினும், அவரின் அசுர வளர்ச்சியைப் பொறுக்காத “காயம்” அவரை விடாமல் துரத்தியது. அறுவைச் சிகிச்சை, நீண்ட ஓய்வு என தொடர் முயற்சியால் காயத்தில் மீண்டார் நட்டு.

31 வயதான அவர் நடப்பு ஐபிஎல் சீசனில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய நிலையில், 11 ஆட்டங்களில் 18 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி இருந்தார். இருப்பினும், காயம் காரணமாக, நடராஜன் மறுவாழ்வு சிகிச்சையில் இருந்ததால் பல சர்வதேச தொடர்களை தவறவிடும் நிலை அவருக்கு ஏற்பட்டது.
3. வாஷிங்டன் சுந்தர்

இந்திய அணியில் ஆல்ரவுண்டர் வீரராக ஜொலித்தவர் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர். சுழல் மற்றும் பேட்டிங்கில் மிரட்டி எடுத்த இவர், இந்திய டி-20 அணியில் தவறாமல் இடம்பிடித்து வந்தார். கடந்த ஆண்டில் அவர் இந்தியாவுக்காக 5 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருந்தார். ஆனால், 2022 ஆம் ஆண்டில் அவர் எந்த டி20 அல்லது டெஸ்ட் போட்டியிலும் விளையாடவில்லை.

காயம் காரணமாக இந்திய அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வரும் அவருக்கு கடந்த ஆண்டு நடந்த டி20 உலகக் கோப்பையிலும், இந்தாண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை அணியிலும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இருப்பினும், 2017 முதல், சுந்தர் ஒவ்வொரு இந்தியன் பிரீமியர் லீக் சீசன் போட்டிகளில் விளையாடி வரும் சுந்தர், இந்த ஆண்டு ஐபிஎல்லில், 9 ஆட்டங்களில் 6 விக்கெட்டுகளை எடுத்திருந்தார். தற்போது அவர் பெங்களுருவில் உள்ள கிரிக்கெட் அகாடமியில் காயத்தில் இருந்து மீண்டு வருவதற்கான பயிற்சியை எடுத்து வருகிறார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil