T20 World Cup Tamil News: இந்தியா முழுதும் தீ-யாக பரவிய கொரோனா பெருந்தொற்றால் பல தொடர்கள் மற்றும் போட்டிகள் தற்காலிமாக ஒத்திவைக்கப்பதோடு ரத்து செய்யப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் துவங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற இருந்த டி20 உலகக் கோப்பை தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது.
இந்த டி20 உலகக் கோப்பை தொடர் இன்னும் சில மாதங்களில் துவங்க உள்ள நிலையில், தொடரில் கலந்து கொள்ளவுள்ள அனைத்து நாடுகளும் தங்கள் அணியை தேர்வு செய்தும் தயார் செய்தும் வருகின்றன. இந்த நிலையில், இந்த தொடருக்கான அட்டவணை கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது. இதில், இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே பிரிவில் இடம் பெற்றுள்ளன.மேலும் இந்த இரு அணிகளும் மோதும் ஆட்டம் அக்டோபர் மாதம் 24ம் தேதி நடைபெறுகிறது. இதனால் கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது

இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் எந்த போட்டியாக இருந்தாலும் சுவாரஷ்யத்திற்கு பஞ்சமிருக்காது. இந்நிலையில் இந்த இரு அணிகளும் டி20 உலக கோப்பை போட்டியில் ஒரே பிரிவில் இருந்து நேருக்கு நேராக சந்திக்க உள்ளன. எனவே பரபரப்புக்கு பற்றாக்குறை இருக்காது. தவிர, இந்த இரு அணிகளும் நேருக்கு நேர் சந்தித்து கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது. கடைசியாக இங்கிலாந்தில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பையில் தான் இந்த இரு அணிகளும் மோதிக்கொண்டன. இதில் பாகிஸ்தானை 89 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி வெற்றியை சுவைத்திருந்தது.

இந்த நிலையில், எதிர்வரும் உலகக்கோப்பை டி20 தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் எந்த அணியின் கை ஓங்கி இருக்கும் என்பது குறித்து பேசியுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் கவுதம் கம்பீர், “டி-20 உலக கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானை விட இந்திய அணியே வலுவானது” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

தற்போது உள்ள நிலையில் இந்திய அணி மிகவும் பலமான அணியாக திகழ்கிறது. இதனால் பாகிஸ்தான் அணிக்கு அதிக நெருக்கடி உள்ளது. ஏனெனில், உலக கோப்பை போட்டிகளில் (50 ஓவர் மற்றும் 20 ஓவர்) இந்திய அணி, பாகிஸ்தானை 5 முறை தோற்கடித்து இருக்கிறது. ஒரு முறை கூட உலககோப்பை போட்டிகளில் இந்தியாவை பாகிஸ்தான் வென்றதில்லை. இதனால் அந்த அணி தற்போதும் நெருக்கடியுடன் விளையாட வேண்டிய நிலையில் இருக்கிறது.
இந்திய அணி எவ்வளவு பலமான அணியாக இருக்கின்றதோ அதே போன்று தான் பாகிஸ்தான் அணியும் பலமாகவே திகழ்கின்றது. இப்போதைக்கு ஒப்பிட்டு பார்த்தால் பலத்தில் பாகிஸ்தானை விட இந்திய அணியே பல அடி மேலோங்கி நிற்கிறது. ஆனால் 20 ஓவர் கிரிக்கெட்டை பொறுத்தவரை எந்த அணியாலும், யாரையும் வீழ்த்த முடியும். ஏனெனில் இது தனிநபர் சார்ந்த போட்டி. யாராவது ஒருவர் நிலைத்து நின்று ஆடினாலும் ஆட்டத்தின் போக்கு மாறி விடும். எனவே எந்த அணியையும் நாம் குறைத்து எடை போடக்கூடாது
இவ்வாறு கவுதம் கம்பீர் கூறினார்.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil