South Africa tour of India, 2022 Tamil News: தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான டி-20 தொடர் கடந்த 28 ஆம் தேதி முதல் தொடங்கியது. கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் நடந்த முதல் டி-20 ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வருகிறது.
இந்நிலையில், இந்தியா – தென்ஆப்பிரிக்க அணிகள் மோதிய இரண்டாவது டி20 போட்டி நேற்று இரவு அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பார்சபாரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் 238 ரன்களை இந்திய அணி இலக்காக நிர்ணயித்தது. இதனையடுத்து பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி, 20 ஓவர்கள் முடிவில் 221 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், இந்திய அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2- 0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
Appreciation all around for David Miller. 👏👏
— BCCI (@BCCI) October 2, 2022
But it's #TeamIndia who win the second #INDvSA T20I to take an unassailable lead in the series. 🙌 🙌
Scorecard 👉 https://t.co/58z7VHliro pic.twitter.com/ShKkaF0inW
கவலையளிக்கும் இந்தியாவின் பவுலிங்…
ஆஸ்திரேலிய மண்ணில் வருகிற 16 ஆம் தேதி முதல் டி-20 உலக கோப்பை தொடங்க உள்ளது. இந்த தொடருக்காக இந்திய கிரிக்கெட் அணி தீவிரமாக தயாராகி வருகிறது. முன்னதாக, இந்த தொடருக்கான இந்திய அணி அதன் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுடன் தலா 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் ஏற்கனவே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி-20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்தியா, தற்போது தென் ஆப்பிரிக்கா எதிரான தொடரில் மீதம் ஒரு போட்டி இருக்க 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியுள்ளது.
இந்த தொடர்களில் இந்திய அணி பங்கேற்பதற்கு முன்பு வரை, அணியின் டாப் ஆடரில் உள்ள வீரர்களின் பேட்டிங் கவலையளிக்கும் விதமாக இருந்தது. ஏன்னென்றால், இந்த தொடருக்கு முன்னதாக இந்தியா ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் விளையாடியது. அதில் டாப் ஆடரில் விளையாடி வீரர்கள் யாரும் மெச்சும் படியான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. முன்னாள் கேப்டன் விராட் கோலி மட்டும் தனது ஃபார்மை மீட்டெடுத்தார். ஆனால், அவரும் சூப்பர் சுற்றில் இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் டக் அவுட் ஆகி வெளியேறி இருந்தார். கேப்டன் ரோகித்துக்கு நல்ல தொடக்கம் கிடைத்தாலும் நிலைத்து நின்று ஆடவில்லை. சூர்யகுமார் கத்து குட்டி அணிகளின் பந்துவீச்சை மட்டும் வெளுத்து வாங்கினார். மிடில்-ஆடரில் பேட்டிங் வாய்ப்பு கொடுக்கப்பட்டும், சரியாக பயன்படுத்தவில்லை. இதுபோல் பந்துவீச்சிலும் இந்திய பந்துவீச்சாளர்கள் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. நூடுல்ஸ் போல் ஏராளமான சிக்கல்கள் இருந்தன.
இதனைக் களையும் வாய்ப்பு சொந்த மண்ணில் வழங்கப்பட்டது. ஆனால், இந்திய அணி ஆஸ்திரேயாலிவுக்கு எதிரான முதல் டி-20-யில் படுதோல்வி அடைந்தது. அந்த ஆட்டத்தில் டாப் ஆடரில் ராகுலும், மிடில் ஆடரீல் ஹர்டிக் பாண்டியாவும் திறம் பட செயல்பட்டு இருந்தார்கள். சூர்யகுமாரும் சிறப்பான பங்களிப்பை கொடுத்தார். ஆனால் பந்துவீச்சில், புவனேஷ்வர் குமார் வரலாறு காணாத அளவில் ரன்களை வாரிக்கொடுத்து இருந்தார். இதனால், அந்த அணிக்கு எதிரான 2வது ஆட்டத்தில் பும்ராவை களமிறக்க வேண்டிய காட்டாயத்திற்கு இந்தியா தள்ளப்பட்டது. 2வது மற்றும் 3வது போட்டிகளில் பந்துவீசிய பும்ராவுக்கு தொடரின் முடிவில் “காயம்” தான் எஞ்சியது. ஏற்கனவே காயம் காரணமாக ஓய்வில் இருந்த அவரை, வம்புடியாக இழுத்து வந்த இந்திய நிர்வாகம் அவரை டி-20 உலக கோப்பையில் விளையாட முடியாத நிலைக்கு தள்ளிவிட்டுள்ளது.

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் அவர் இல்லாததது வெற்றிடமாக இருப்பது போல் தோற்றம் அளிக்கிறது. அவரின் பந்துவீச்சுக்கு எதிரணி பேட்ஸ்மேன்கள் தொடை நடுங்குவார்கள் என்கிற “ஃபேக்டர்” இருந்து வரும் நிலையில், அவரின் விலகல் அணிக்கு பெரும் பின்னடைவைத் தான் கொடுத்து வருகிறது. திருவனந்தபுரத்தில் நடந்த முதல் டி-20-யில் இந்திய அணியின் பந்துவீச்சு சிறப்பானதாக இருந்தாலும், 2வது டி-20யில் அது அப்படியே தலைகீழாக மாறிப்போனது. முதல் 3 விக்கெட்டுகளை மட்டும் வேகமாக வீழ்த்த முடிந்த இந்திய பந்துவீச்சாளர்களால், அடுத்தடுத்து குடைச்சல் கொடுத்து விக்கெட் வீழ்த்த முடியாமல் போனது. துல்லியமான பந்துவீச்சு, வேகம், பவுன்சர்கள், சுழல், ஸ்விங் என தெரிந்த வித்தைகளை சரியான நேரத்தில் பயன்படுத்த தவறி இருந்தனர்.

முதல் டி-20 ஆட்டத்தில் தரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய அர்ஷ்தீப் சிங் இந்த ஆட்டத்தில் 62 ரன்களையும், அக்சர் படேல் 53 ரன்களையும், ஹர்ஷல் படேல் 45 ரன்களையும் தாராளமாக அள்ளிக்கொடுத்து இருந்தனர். இதில், அர்ஷ்தீப் சிங் மட்டும் தனது 19வது ஓவரில் 26 ரன்களை விட்டுக் கொடுத்து இருந்தார். அவரின் வேகம் பெரிதாக எடுபடவில்லை. தற்போது, டி-20 உலக கோப்பைக்கு தயாராகி வரும் இந்திய அணி அதன் சொந்த மண்ணிலே பந்துவீச்சில் திணறி வருகிறது. எதிர்வரும் உலக கோப்பையிலும் இந்த நிலை தொடர்ந்தால், உலக கோப்பை கனவு கானல் நீராய் விடும். ஆதலால், இந்திய அணி அதன் பந்துவீச்சை வரிசையை மீண்டும் ஒரு முறை திறம்பட கட்டமைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. அதில் நல்ல முடிவை இந்திய நிர்வாகம் எட்டும் என்று எதிர்பார்க்கலாம்.

‘பந்துவீச்சை மேம்படுத்த வேண்டும்’ – கேப்டன் ரோகித்
நேற்றைய ஆட்டத்திற்கு பிறகான பேட்டியில் பேசிய கேப்டன் ரோகித் சர்மா, இந்தியாவின் டெத் ஓவர் பந்துவீச்சு கவலைக்குரியவையாக இல்லை என்றும், ஆனால் ஆட்டத்தின் பின் இறுதியில் அணி அதன் செயல்பாட்டை மேம்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

“அணி ஒரு குறிப்பிட்ட வழியில் விளையாடவும் பந்துவீசவும் விரும்புகிறது, நாங்கள் அவர்களுக்கு அந்த நம்பிக்கையை கொடுக்க விரும்புகிறோம். ஆம், கடந்த ஐந்து அல்லது ஆறு ஆட்டங்களில் நாங்கள் மோசமாக பந்துவீசினோம். எதிரணிக்கும் நாங்கள் அதையே செய்கிறோம்.
“டெத் ஓவரின் போது பந்துவீசுவதும், பேட்டிங் செய்வதும் மிகவும் கடினமானது. அங்குதான் ஆட்டம் தீர்மானிக்கப்படுகிறது. ஆனால், ஆட்டத்தின் பின் இறுதியில் அணி அதன் செயல்பாட்டை மேம்படுத்த, நாம் நம்மைத் தேர்ந்தெடுத்து ஒன்றாகச் செயல்பட வேண்டும்.” என்று அவர் கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil