Advertisment

முதல் டி20 போட்டி: 6 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது இந்தியா

India vs West Indies; first T20I of the three-match series Tamil News: இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதலாவது டி20 போட்டி இன்று இரவு 7 மணிக்கு தொடங்கியது.

author-image
WebDesk
New Update
முதல் டி20 போட்டி: 6 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது இந்தியா

India vs West indies Live updates 1st T20I Tamil News: இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 0-3 என்ற கணக்கில் இந்தியாவிடம் பறிகொடுத்தது. இதனையடுத்து, தற்போது 3 போட்டிகள் டி20 தொடரில் அந்த அணி பங்கேற்றுள்ளது. இதன்படி, இவ்விரு அணிகள் மோதும் முதலாவது போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் இன்றிரவு நடக்கிறது.

Advertisment

தொடக்க வீரராக இஷான் கிஷன்?

இந்திய அணியின் தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் காயம் காரணமாக விலகியுள்ள நிலையில் இளம் வீரர் இஷான் கிஷன் தொடக்க வீரராக களமிறங்க வாய்ப்புள்ளது. ஆனால், கேப்டன் ரோகித் முன்னாள் கேப்டன் விராட் கோலியுடனோ அல்லது இளம் வீரர் வெங்கடேஷ் ஐயருடனோ ஜோடி சேர்ந்தால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

ஏனென்றால், கடந்த ஆண்டு அகமதாபாத்தில் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டி20 -யில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய இந்த ஜோடி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஜோஃப்ரா ஆர்ச்சர், மார்க் வூட், கிறிஸ் ஜோர்டான் மற்றும் பென் ஸ்டோக்ஸ் உள்ளிட்ட பந்து வீச்சாளர்களின் பந்துவீச்சை சிதறடித்தனர். இந்த ஜோடியில் கேப்டன் ரோகித் சர்மா 34 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து இருந்தார். இதேபோல், விராட் கோலி 52 பந்துகளில் 80 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

கோலிக்கு ஆதரவுக் குரல் கொடுத்த ரோகித்

விராட் கோலி, கடந்த இரண்டரை ஆண்டுகளாக சர்வதேச அளவில் சதம் அடிக்கவில்லை. ஒருவேளை, அவர் ஒரு பேட்ஸ்மேனாக நெருக்கடியான காலகட்டத்தை கடந்து வருகிறார் என்று சொன்னால் அது மிகைப்படுத்தப்பட்டதாக இருக்கும். ஒரு மாதத்திற்கு முன்பு அவர் தென்ஆப்பிரிக்காவில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரண்டு அரை சதங்கள் அடித்தார். ஆனால் அவரது உயர்ந்த தரத்தால், அவர் தனது நிலைத்து நின்று ஆடும் தன்மையை இழந்து வருகிறார்.

சமீபத்தில் நடந்து முடிந்து வெஸ்ட் இண்டீஸ் எதிரான ஒருநாள் தொடரில் கோலி 8, 18 மற்றும் 0 என்ற இலக்கங்களையே பெற்று இருந்தார். இது அவர் பேட்டிங்கில் மிகவும் பின்னடைந்து வருகிறார் என்பதை காட்டுகிறது. 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, அவரது டெஸ்ட் மற்றும் ஒருநாள் சராசரிகள் 28.14 மற்றும் 39 ஆக குறைந்துள்ளன. ஆனால், டி20-களில் அவரது சராசரியாக 49.50 ஆக உள்ளது.

இந்நிலையில் அவரது ஃபார்ம் குறித்து இந்திய கேப்டன் ரோகித் சர்மாவிடம் நேற்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது பேசிய அவர், "நீங்கள் (ஊடகங்கள்) சிறிது நேரம் அமைதியாக இருந்தால், எல்லாம் சரியாகிவிடும். அவர் (கோலி) சிறந்த மனநிலையில் இருக்கிறார். பத்தாண்டுகளுக்கும் மேலாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். அழுத்தத்தை எவ்வாறு கையாள்வது என்பது அவருக்குத் தெரியும், ”என்றார். விராட் கோலியிடம் நம்பிக்கை குறைவாக இருக்கிறதா? என்று கேட்ட போது, நீங்கள் என்ன பேசுகிறீர்கள் என்று ரோகித் காட்டமாக திருப்பி கேட்டார்.

மார்ட்டின் கப்திலை முந்துவாரா கோலி!

ஒரு நாள் தொடரில் சொதப்பிய விராட் கோலி டி-20 கிரிக்கெட்டிலாவது ரன்மழை பொழிவாரா என்று ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள். அவர் இன்னும் 73 ரன்கள் திரட்டும் பட்சத்தில், சர்வதேச டி-20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவரான நியூசிலாந்தின் மார்ட்டின் கப்திலை (3,299 ரன்) முந்திவிடுவார்.

குல்தீப் யாதவ் - ரவி பிஷ்னோய் யாருக்கு வாய்ப்பு?

publive-image

வாஷிங்டன் சுந்தர்

சுழற்பந்துவீசும் ஆல்-ரவுண்டர் வீரர் வாஷிங்டன் சுந்தர் தசைப்பிடிப்பால் அணியில் ஒதுங்கி உள்ள நிலையில், அவருக்கு பதிலாக குல்தீப் யாதவ் அல்லது புதுமுக வீரர் ரவி பிஷ்னோய் சேர்க்கப்படலாம். மற்றபடி இந்திய அணி பலம் பொருந்திய அணியாகவே இருக்கிறது.

வெற்றி கணக்கை தொடங்குமா வெஸ்ட் இண்டீஸ்?

இந்திய அணிக்கெதிரான ஒருநாள் தொடரை பறிகொடுத்த வெஸ்ட் இண்டீஸ் அணி, டி20 தொடரிலாவது வெற்றி கணக்கை தொடங்குமா? என்பதை இன்றைய ஆட்டத்தில் பொறுத்திருந்து பார்க்கலாம். அந்த அணி டி20 தொடர்களில் பலமான அணியாகவே வலம் வருகிறது. மேலும் அந்த அணி சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான டி-20 தொடரை 3-2 என்ற கணக்கில் வென்று அசத்தி இருந்தது.

வெஸ்ட் இண்டீஸ் அணியில் பொல்லார்ட், நிகோலஸ் பூரன், ஜாசன் ஹோல்டர், ரோமன் பவெல் அதிரடியில் மிரட்டக்கூடியவர்கள். எனவே அவர்கள் போன்ற வீரர்களுக்கு இந்திய அணி பந்து வீசுவது சற்று சவாலாகவே இருக்கும். இந்தியாவுக்கு எதிரான கடைசி இரண்டு ஒரு நாள் போட்டியில் காயத்தால் விளையாடாத கேப்டன் பொல்லார்ட் நேற்று பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அவர் உடல்தகுதியை எட்டாவிட்டால் நிகோலஸ் பூரன் அணியை வழிநடத்துவார்.

ஈடன் கார்டன் மைதானம் எப்படி?

ஈடன் கார்டன் ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு ஓரளவு ஒத்துழைக்கும். ஆனால், இரவு வேளையில், பனிப்பொழி முக்கிய காரணியாக இருக்கும். இது இரண்டாவதாக பந்து வீசும் அணிக்கு கூடுதல் சவால் அளிக்க வாய்ப்புள்ளது. ஆதலால், ‘டாஸ்’ ஜெயிக்கும் அணி முதலில் பந்து வீச்சுக்கு முன்னுரிமை கொடுக்கும்.

ஒரு நாள் தொடரை முழுமையாக வசப்படுத்திய இந்திய அணி டி20 தொடரிலும் ஆதிக்கம் செலுத்தவே நினைக்கும். எனவே, அதற்கேற்றால் போல் திட்டங்களை அணி வகுக்கும் என்பதில் சந்தேகமில்லை. டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் இன்னும் 8 மாதத்தில் தொடங்க இருக்கிறது. எனவே, இத்தொடர் உலக கோப்பை போட்டிக்கு முன் இந்திய அணியில் சரியான வீரர்களை அடையாளம் காணும் உதவும்.

IND vs WI T20; இரு அணிகள் வீரர்கள் பின்வருமாறு:

இந்திய அணி:

ரோகித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), இஷான் கிஷன், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், சூர்ய குமார் யாதவ், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), வெங்கடேஷ் ஐயர், தீபக் சாஹர், ஷர்துல் தாக்கூர், ரவி பிஷ்னோய், அக்சர் படேல், யுஸ்வேந்திர சாஹல், வாஷிங்டன் சுந்தர், முகமது. சிராஜ், புவனேஷ்வர் குமார், அவேஷ் கான், ஹர்ஷல் படேல்.

வெஸ்ட் இண்டீஸ் அணி:

கீரன் பொல்லார்ட் (கேப்டன்), நிக்கோலஸ் பூரன் (துணை கேப்டன்), ஃபேபியன் ஆலன், டேரன் பிராவோ, ரோஸ்டன் சேஸ், ஷெல்டன் காட்ரெல், டொமினிக் டிரேக்ஸ், ஜேசன் ஹோல்டர், ஷாய் ஹோப், அக்கேல் ஹோசைன், பிராண்டன் பவல், ரோவ்மன் கிங். , ரோமாரியோ ஷெப்பர்ட், ஒடியன் ஸ்மித், கைல் மேயர்ஸ், ஹேடன் வால்ஷ் ஜூனியர்.

டாஸ் வென்ற ரோகித் சர்மா

தற்போது இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். காயம் காரணமாக ஒருநாள் தொடரில் விளையாடாத வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் கீரன பொல்லார் டி20 தொடருக்கான் அணிக்கு திரும்பியுள்ளார்.

அதேபோல் காயம் காரணமாக இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரும் துணைக்கேப்டனுமான ராகுல் விலகிய நிலையில், அவருக்கு பதிலாக இஷான் கிஷான் தொடக்க வீரராக களமிறங்குகிறார் மேலும் இந்திய அணியில் ஹர்ஷெல் பட்டேல், ரவி பிஷ்னாய் ஆகியோர் அறிமுக வீரர்களாக களமிறங்குகின்றனர்.

இதனைத் தொடர்ந்து முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ்அணிக்கு இந்திய அணி வீரர்கள் தொடக்கத்திலேயே அதிர்ச்சி கொடுத்தனர். புவனேஷ்வர் குமார் வீசிய ஆட்டத்தின் முதல் ஓவரில் ஒரு பவுண்டரி அடித்த தொடக்க வீரர் பிராண்டன் கிங் அந்த ஓவரின் 5-வது பந்தில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து களமிறங்கிய விக்கெட் கீப்பர் நிக்கோலஸ் பூரன் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் கைல் மேயர்ஸ்சுடன் ஜோடி சேர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதில் 31 ரன்கள் எடுத்த கைல்மேயர்ஸ சாஹல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ராஸ்டன் சேஸ் 4 ரன்களிலும், ரோவன் பவல் 2 ரன்களிலும் அறிமுக சுழற்பந்துவீச்சாளர் ரவி பிஷ்னாய் ஓவரில் ஆட்டமிந்தனர்.

இதனையடுத்து களமிறங்கிய அகில் ஹூசன் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்துடுத்து விக்கெட்களை இழந்து தடுமாறிய வெஸ்ட் இண்டீஸ் அணியை தூங்கி நிறுத்த கேப்டன் பொல்லார்ட் களமிறங்கினார். மறுமனையில் பொறுப்புடன் விளையாடிய நிக்கோலஸ் பூரன் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தார்.

மறுமுனையில், அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்த கேப்டன் பொல்லார்ட் ஒன்றிரண்டு ரன்களாக திரட்டிக்கொண்டிருந்தார். இந்நிலையில், 18-வது ஓவரின் கடைசி பந்தில் பூரான் ஆட்டமிழந்தார். 43 பந்துகளில் 5 சிக்சர் மற்றும் 4 பவுண்டரியுடன் 61 ரன்கள் எடுத்தார்.

இதன்பிறகு அதிரடியில் இறங்கிய பொல்லார்ட், 19 பந்துகளில் 2 பவுண்டரி ஒரு சிக்சருடன் 24 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்தது இந்திய அணி தரப்பில் அறிமுக சுழற்பந்துவீச்சாளர் ரவி பிஷ்னாய் ஹர்ஷல்  பட்டேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், புவனேஷ்வர், சாஹல், சாஹர் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

தொடர்ந்து 158 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மாவும், இஷான் கிஷானும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் இஷான் கிஷான் ஒருபுறம் நிதானமான ஆட மறுமுனையில், ரோகித்சர்மா வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் பந்துவீச்சை வெளுத்து கட்டினார். இதனால் இந்திய அணியின் ஸ்டோர் மளமளவென உயர்ந்தது.

ஸ்டோர் 7.3 ஓவர்களில் 64 ரன்களை எட்டிய போது, அதிரடியாக ஆடி அரைசதத்தை நெருங்கிய ரோகித் சர்மா 19 பந்துகளில் 4 பவுண்டரி 3 சிக்சருடன் 40 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய விராட்கோலி நிதானமாக ஆடி 13 பந்துகளில் 17 ரன்களும், இஷான் கிஷான் 42 பந்துகளில் 35 ரன்களும், பண்ட் 8 பந்துகளில் 8 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

14.3 ஓவர்களில் 114 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை பறிகொடுத்த இந்திய அணிக்கு 5-வது விக்கெட்டுக்கு இணைந்த சூர்யகுமார் – வெங்கடேஷ் அய்யர் ஜோடி அதிரடியாக ஆடி வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றது. இதனால் இந்திய அணி 18.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சூர்யகுமார் 18 பந்துகளில் 5 பவுண்டரி 1 சிக்சருடன் 34 ரன்களும், வெங்கடேஷ் அய்யர் 13 பந்துகளில் 2 பவுணடரி ஒரு சிக்சருடன் 24 ரனகளும் எடுத்து களத்தில் இருந்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில், ராஷ்டன் சேஸ் 2 விக்கெட்டுகளும், ஆலன், கார்ட்டல் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி நாளை மறுநாள் கொல்கத்தாவில் நடைபெற உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Virat Kohli Sports Rohit Sharma Cricket Indian Cricket Team Indian Cricket India Vs West Indies
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment