ஃபிபா கால்பந்து தரவரிசை... 21-ஆண்டுகளுக்குப் பின் 100-வது இடம்பிடித்த இந்தியா!

இந்திய அணி 21-ஆண்டுளுக்குப் பின்னர் 100-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது

பயிற்சியாளர் ஸ்டீபன் கான்ஸ்டன்டைன் தலைமையில் விளையாடி வரும் இந்திய கால்பந்து அணி ஃபிபா தரவரிசையில் முன்னேற்றம் அடைந்து வருகிறது.

ஃபிபா வெளியிட்டுள்ள கால்பந்து வரிசையில் இந்திய அணி தற்போது 100-வது இடத்தை பிடித்துள்ளது. இந்திய அணி 21-ஆண்டுளுக்குப் பின்னர் 100-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஏப்ரல் மாதத்து நிலவரப்படி 101-வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது ஒரு இடம் முன்னேற்றம் கண்டு 100-வது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் 173-வது இடத்தில் இந்திய அணி இருந்த நிலையில் படிப்படியாக இந்திய அணி தரவரிசையில் ஏற்றம் கண்டு வருகிறது.

இதற்கு முன்னதாக இந்திய அணி 1996-ம் ஆண்டு தான், தரவரிசையில் 100 இடங்களுக்குள் இடம் பெற்றிருந்தது. 1996-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அப்போதைய தரவரிசையில் 94-வது இடத்தை இந்திய கால்பந்து அணி பிடித்திருந்தது. ஃபிபா வெளியிடும் தரவரிசைப் பட்டியலில் இந்திய கால்பந்து அணியில் தலைசிறந்த தரவரிசையும் அது தான்.

முன்னதாக இந்திய அணி கம்போடியா மற்றும் மியான்மர் அணிகளை வீழ்தியதன் மூலம் 101-வது இடத்திற்கு முன்னேறியது. அயல்மண்ணில் இரண்டு வெற்றிகளை இந்திய அணி பெற்றதால் இந்த முன்னேற்றம் சாத்தியமானது. இதன்மூலம் நிகரகுவா, லிதுவேனியா, எஸ்டோனியா ஆகிய அணிகளுடன் இணைந்து 100-வது இடத்தை இந்திய அணியும் பகிர்ந்துள்ளது. பயிற்சியாளர் ஸ்டீபன் கான்ஸ்டன்டைன் தலைமையில் விளையாடி வரும் இந்திய கால்பந்து அணி, தரவரிசையில் வெகுவாக முன்னேற்றம் அடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

×Close
×Close