நா வந்துட்டேன்னு சொல்லு..! அரையிறுதிக்கு முன்னேறி அசத்திய இந்தியா!

அடுத்த சில மணி நிமிடங்களில் மில்லரும் ரன் அவுட் ஆக, என்ன நடக்கிறது என்று தெரியாமல் விழிபிதுங்கியது தென்.ஆ.,

சாம்பியன்ஸ் லீக்கில் இன்று நடந்த தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில், சாரி…. காலிறுதிப் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று ‘பி’ பிரிவில் இருந்து முதல் அணியாய் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. (ரொம்ப லெந்த்தா போகுதோ….!)

ஆனா, இந்த மேட்ச் லெந்த்தா போகல… அதுவரைக்கும் சந்தோசம் தான்…

ஓவல் மைதானத்தில் டாஸ் வென்ற கேப்டன் விராட் கோலி, இந்த முறை உஷாராக பவுலிங்கை தேர்வு செய்தார்(வாங்குன அடிய மறக்க முடியுமா!!). இந்திய அணியில் ஒரு மாற்றமாக உமேஷ் யாதவிற்கு பதில் நம்ம அஷ்வின் சேர்க்கப்பட்டார். தென்னாப்பிரிக்காவிலும் பார்னலுக்கு பதிலாக ஃபெலுக்வாயோ களமிறங்கினார்.

இதைத் தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க தொடக்க வீரர்கள் ஆம்லா மற்றும் டி காக் , ரோஹித் மற்றும் தவான் கூட்டணிக்கே சவால் விடும் வகையில் மிக பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆனால், முதல் விக்கெட்டுக்கு ஓரளவு சிறப்பான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். முதல் விக்கெட் 76 ரன்னில் தான் விழுந்தது. ‘ஐ ஏம் பேக்’ எனும் மோடில் அஷ்வின் ஆம்லாவை 35 ரன்னில் காலி செய்தார். தொடர்ந்து நிதானமாக ஆடிய டி காக் 53 ரன் எடுத்திருந்த போது, ஜடேஜாவின் பந்துவீச்சில் போல்டானார்.

இதன்பின் யார் கண் பட்டதோ தெரியவில்லை, வரிசையாக ரன் அவுட் ஆக ஆரம்பித்தனர் தென் ஆப்ரிக்க வீரர்கள். குறிப்பாக, இந்தியர்களுக்கு மிகவும் பிடித்த டி வில்லியர்ஸ், 2015-ஆம் ஆண்டு உலகக் கோப்பையில், தோனி கையால் ரன் அவுட் ஆன நிகழ்வை, நமக்கு மீண்டும் இன்று ரீவைண்ட் செய்து காண்பித்தார். அவர் புயல் வேகத்தில் ஓடியும், சீறிப் பாய்ந்தும் ஒன்னும் முடியவில்லை. ஏன்னா… பந்தை வாங்கி ஸ்டெம்பை தகர்ப்பது தோனியாச்சே. நீங்க 360 டிகிரி பேட்ஸ்மேன்னா, எங்காளு 360 டிகிரி விக்கெட் கீப்பர்.. (மீம்ஸில் இருந்து சுட்டது).

அடுத்த சில மணி நிமிடங்களில் மில்லரும் ரன் அவுட் ஆக, என்ன நடக்கிறது என்று தெரியாமல் விழிபிதுங்கியது தென்.ஆ., நிர்வாகம். நமக்கே ‘சே..பாவம் பா’ ஃபீலிங் வந்துவிட்டது.

அதற்கு பிறகு ‘நம்பர் 1’ ஒருநாள் அணியால் எழவே முடியவில்லை. முடிவில் 44.3-வது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 191 ரன்கள் மட்டுமே எடுத்தது தென்னாப்பிரிக்கா. அப்போதே வெற்றிக்கான ஸ்டெம்ப்பை பாதி பிடுங்கிய மகிழ்ச்சி இந்திய ரசிகர்களின் கண்களில் மிளிர்ந்தது.

இந்திய அணி பேட்டிங்:

ரொம்ப பெரிதாக பயப்படக்கூடிய பவுலிங் கூட்டணி தென்னாப்பிரிக்காவில் இல்லையென்றாலும், மோர்னே மோர்கலின் மிரட்டும் பவுன்சரையும், இம்ரான் தாஹிரின் ‘டேம் ஷியூர்’ விக்கெட் பதிவையும் தடுக்க வேண்டிய கட்டாயம் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு இருந்தது. நாம் பயந்தது போலவே, ரோஹித்தை 12 ரன்னில் காலி செய்தார் மோர்கல். ஸ்ட்ரெய்ட்டில் சிக்ஸ் அடிக்க நினைத்த ரோஹித்தை ஏமாற்றிய மோர்கலின் பந்து, நேராக விக்கெட் கீப்பர் டி காக் கிளவுஸில் கமுக்கமாக தஞ்சமடைந்தது. இதைப் பார்த்த நமக்கு லைட்டாக பீதி ஏற்பட, வெளியே காட்டிக் கொள்ளாமல் காத்திருந்தோம்.

ஆனால், அடுத்த களமிறங்கிய கேப்டன் விராட், முதலில் நம்முடைய பீதியை பாதியாய் குறைத்து, பின் ஒன்றுமே இல்லாமல் செய்துவிட்டார். உச்சக்கட்ட ஃபார்மில் இருக்கும் தவானுடன் கூட்டணி சேர்ந்த கோலி, தென்.ஆ., பவுலர்களின் ஆக நேர்த்தியான பந்துகளுக்கு மரியாதை கொடுத்து விலகி, தவறான பந்துகளை பவுண்டரிகளுக்கு பறக்க விட்டார். பக்க பலமாக தவானும் தெறிக்கவிட, இந்திய அணி 38.0-வது ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் எடுத்து, ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட் ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

தவான் 78 ரன்கள் விளாசி அவுட்டானார். இத்தொடரில் மூன்று போட்டிகளில் ஆடியுள்ள தவான் 271 ரன்கள் குவித்துள்ளார். கோலி இறுதி வரை ஆட்டமிழக்காமல் 76 ரன்கள் எடுத்து கேப்டன் இன்னிங்ஸை நிறைவாக பூர்த்தி செய்தார். யுவராஜ் 25 பந்தில் 23 ரன்கள் எடுத்தார்.

இதன்மூலம் ‘டெத்’ பிரிவு என்றழைக்கப்படும் ‘பி’ பிரிவில் இருந்து முதல் அணியாக தனது அரையிறுதி இருப்பை உறுதி செய்தது ‘பாரத் ஆர்மி’. மௌக்கா… மௌக்கா… கன்டினியூஸ்!

ஆனால், மீண்டும் ஒருமுறை ஐசிசி டிராஃபி தொடரை வெல்ல முடியாமல் வெறுங்கையுடன் சோகமாக திரும்பியது தென்னாப்பிரிக்கா.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Sports news in Tamil.

×Close
×Close