Advertisment

#INDvsSL இந்தியா வெற்றி! அஷ்வின் உலக சாதனை! ஆனால், இது உண்மையான வெற்றியா?

இதே போன்று அஷ்வின், ஜடேஜாவை வைத்துக் கொண்டு இலங்கை தொடரை வெல்வதால், இந்திய அணிக்கு எந்த பலனும் இல்லை

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
#INDvsSL இந்தியா வெற்றி! அஷ்வின் உலக சாதனை! ஆனால், இது உண்மையான வெற்றியா?

நாக்பூரில் நடந்து வந்த இந்தியா, இலங்கை அணிகள் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 239 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளது.

Advertisment

முதல் இன்னிங்ஸில் இலங்கை 205 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 610-6 ரன்கள் எடுத்தது. முரளி விஜய் 128 ரன்களும், புஜாரா 143 ரன்களும், ரோஹித் ஷர்மா 102 ரன்களும், கேப்டன் விராட் கோலி 213 ரன்களும் குவித்தனர்.

இதைத் தொடர்ந்து, 405 ரன்கள் பின்தங்கிய நிலையில் களமிறங்கிய இலங்கை அணி, இரண்டாவது இன்னிங்ஸில் 166 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக கேப்டன் சந்திமல் 61 ரன்களும், சுரங்கா லக்மல் 31 ரன்களும் எடுத்தனர். அஷ்வின் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதனால், இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 239 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

இலங்கையின் காமகே விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம், சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக 300 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற உலக சாதனையை அஷ்வின் படைத்துள்ளார். 54 போட்டிகளில் விளையாடி இச்சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன்னதாக, ஆஸ்திரேலியாவின் டென்னிஸ் லில்லி 56 டெஸ்ட் போட்டிகளில் இச்சாதனையை நிகழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது வலுவிழந்துள்ள இலங்கை அணியை நம்மூருக்கு அழைத்து வந்து, அவர்களை வெற்றிக் கொள்கிறோம்.  இலங்கைக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி, டெல்லியில் டிசம்பர் 2-ஆம் தேதி தொடங்குகிறது. அப்போட்டியிலாவது வேகப்பந்து வீச்சுக்கு ஏற்றவாறு மைதானத்தை அமைத்து, இந்திய அணி விளையாடினால் நல்லது. ஏனெனில், இலங்கை டெஸ்ட் தொடர் முடிந்த பின்னர் ஒருநாள் மற்றும் டி20 தொடர்கள் நடைபெறவுள்ளது. டிசம்பர் 24-ஆம் தேதி இலங்கை தொடர் முடிகிறது. அடுத்த இரண்டு நாட்கள் இடைவெளியில் இந்திய அணி தென்னாப்பிரிக்கா செல்லவிருக்கிறது.

அங்கு, வேகப்பந்து வீச்சுக்கு உகந்த மைதானங்களில் இந்திய அணி எப்படி சமாளிக்கப் போகிறது என்பது தெரியவில்லை. அதற்கு ஏற்றவாறு இந்திய அணி தயாராவதாகவும் தெரியவில்லை. இதனால், இலங்கைக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஃபாஸ்ட் பிட்ச் கேட்பது அவசியம். அப்படி செயல்படாமல், இதே போன்று அஷ்வின், ஜடேஜாவை வைத்துக் கொண்டு இலங்கை தொடரை வெல்வதால், இந்திய அணிக்கு எந்த பலனும் இல்லை.

அஷ்வின், ஜடேஜாவால் தென்னாப்பிரிக்க பிட்சில் மாயஜாலம் எல்லாம் செய்ய முடியாது. அங்கு பந்துகள் வேகமாக தான் பேசும். இதை கருத்தில் கொண்டு இந்திய அணி நிர்வாகம் செயல்பட்டால் நல்லது. இந்த வெற்றிகள் எல்லாம் உண்மையான வெற்றிகள் தானா என்பதை யோசிக்கும் நேரம் பிசிசிஐ-க்கு வந்துவிட்டது. இனியும் தாமதித்தால், தென்னாப்பிரிக்காவில் நாம் அடிவாங்குவதை யாராலும் தடுக்க முடியாது!.

 

India Vs Srilanka Ravichandran Ashwin Bcci
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment