இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2-வது டி20 போட்டி நவம்பர் மாதம் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி இந்த வருடத்தில் சொந்த மண்ணில் விளையாடும் போட்டிகள் மற்றும் போட்டிகள் இடைபெறும் இடத்தை பிசிசிஐ அறிவித்துள்ளது. அதன்படி, இந்திய அணி ஆப்கானிஸ்தான் உடன் முதன்முறையாக விளையாடும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜூன் மாதம் நடக்கிறது. இது நமக்கு முன்பே தெரிந்தது தான்.
அதன்பின் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக விளையாடுகிறது. இதில் ஒரு போட்டி பகல்-இரவு ஆட்டமாக நடைபெற இருக்கிறது. இந்த பகல் இரவு ஆட்டம் ஐதராபாத் அல்லது ராஜ்கோட்டில் நடைபெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின் வெஸ்ட் இண்டீஸ் உடன் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியா விளையாடுகிறது. இந்த போட்டிகள் மும்பை, கவுகாத்தி, கொச்சி, இந்தூர் மற்றும் புனேயில் நடக்கிறது.
பின்னர் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. முதல் போட்டி நவம்பர் 4-ம் தேதி கொல்கத்தாவில் நடைபெறுகிறது. அதன்பின் 2-வது ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற இருக்கிறது. 3-வது ஆட்டம் கான்பூரில் நடக்கிறது.